யுத்தப் பொறிக்குள் சிக்குண்ட மரணத்தின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள வன்னி மக்களுக்காக தமிழக மக்கள் பெரும் உணர்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். இந்த உணர்ச்சிப் போராட்டங்கள் பல்வேறு அரசியல் சக்திகளாலும் தமது அரசியல் நோக்கங்களுக்காகக் கையாளப்படுகின்ற நிலையும் அங்கு மிகுதியாகவே உள்ளது. இக்காலப்பகுதியில் நண்பர் சேனன் பெப்ரவரி நடுப்பகுதியில் தனது கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம் சென்றிருந்தார். வன்னி மக்களுக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உணர்ச்சிப் போராட்டங்கள் பற்றியும் தமிழக மற்றும் இந்திய அரசியலில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் நண்பர் சேனனுடன் அவர் தமிழகத்தில் இருந்த போது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட உரையாடலின் தொகுப்பு.
தேசம்நெற்: CWI – Committe for Workers International உறுப்பினரான உங்களுடைய இந்திய பயணத்தின் நோக்கம்?
சேனன்: இலங்கையில் 2லட்சம் மக்களளின் அவல நிலையை ஒட்டி உலகெங்கும் பேரெழுச்சிகள் நடைபெறுகின்றன. இத்தருணத்தில்CWI அந்தந்த நாடுகளில் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தலில் ஈடுபட்டது.
இங்கிலாந்திலும் 100 000 மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடாத்தியபோது CWI யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! வன்னி மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும்! ஒன்றுபட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் அவசியத்தை முன்னிறுத்திய கோட்பாடுகளை முன்வைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்தது. அதில் கலந்துகொண்ட மக்களின் நிறைய ஆதரவும் கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக 2 லட்சம் மக்கள் கொலையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து CWI பிரச்சாரங்களை செய்ய முற்பட்டுள்ளது. இம்முயற்சியை முன்னெடுக்க தமிழ்நாடு சார்ந்து தான் முன்னெடுப்பு செய்ய வேண்டும் அதேநேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்க CWI கடமைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தேன்.
தேசம்நெற்: தமிழக அரசியல் கட்சிகள் இந்த உணர்வை எவ்வாறு கையாளுகின்றன?
சேனன்: தமிழகத்தில் உள்ள மோசமான வலதுசாரி கட்சிகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ் இவர்களுடன் சிபிஜ. தா. பாண்டியனும் பாரதிராஜா தமிழ்நாட்டு அனைத்து கட்சிகளும் போர் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நல்ல விடயம். ஆனால் அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளது. இவர்கள் இப்படிப் பேசுவது தங்களுடைய கட்சி சார்ந்த விடயங்களுக்காக மட்டும்தான்.
இன்று கருணாநிதி ஆட்சியில் இருப்பதால் இது இவ்வளவு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அது தவறு. கருணாநிதி இந்த எழுச்சியை எந்தளவு கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவு மிகக் கெட்டித்தனமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உதாரணமாக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபின் ஏற்பட்ட மாணவர் போராட்ட எழுச்சியை கட்டுப்படுத்த அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டது. மாணவர்கள் ஏதாவது மோசமாக நடந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து கல்லூரிகள் மூடப்பட்டது. இது மாணவர் எழுச்சியை அடக்கவே செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர் போராட்டங்கள் அடக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்பு இலங்கைப் பிரச்சினை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப் பட்டார்கள்.
அதே போல லோயலா, பச்சயப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்கப்பட்டனர். அவற்றிற்கும் மேலாக இலங்கை இனப்பிரச்சனை பற்றி ஈடுபட வேண்டாம், துண்டுப் பிரசுரங்கள் கொடுக்க போக வேண்டாம் என இமெயில்கள் அனுப்பபபடுகின்றன. இதேபோல பல்வேறு தளங்களில் மாணவர் போராட்டங்கள் கட்டுப்படுத்தப் படுகிறது.
இலங்கைப் பிரச்சினைபற்றி பேசிய சட்டத்தரணிகளுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த விடயம். அவர்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒருபோக்கிரித்தனமான பார்ப்பண அரசியல் செய்யும் சுப்பிரமணியசுவாமியை பிரயோகித்து ஒரு பிரச்சினையை உருவாக்கி தமிழ்நாட்டு பொலிசாரால் சட்டத்தரணிகள் மிக மோசமாக வரலாற்றில் என்றுமே நடக்காத ஒருவிடயத்தை மேற்கொண்டனர். இப்படியான தாக்குதல்கள் மேலும் தொடர்கிறது. அதற்கு முன்பும் தேனாம்பேட்டையில் ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டு மிகவும் மோசமான காயங்களுக்குள்ளானார்.
எங்கெங்கு போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கங்கு அதிகாரிகள் நின்று நிலைமைகள் கட்டுப்படுத்தப் படுகிறது. மற்றப் பக்கத்தில் இது மக்களை சாந்தப்படுத்தவே தாங்களே தமது கட்சிசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஜெயலலிதா உண்ணாவிரதம், பிறகு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். தாங்கள் குரல் கொடுக்காமல் இருந்தால் நிலைமைகளை மீறி மக்கள் வெடித்தெழும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இதை சமாளிக்கவே முயற்ச்சிக்கிறார்கள்;.
திமுக ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்தினால் 2000-3000 பேர்தான் கலந்துகொள்கிற நிலமையுண்டு. யாரும் இவர்களை நம்பத் தயாராயில்லை. யாரும் இவர்களை நம்பி ஈடுபடத் தயாராயில்லை. இவர்களது நாடகம் மிக மோசமாகியுள்ளது. இந்த நாடகம் பற்றி எமது CWI தோழர் ஜெயசூரியா பலமாக பேச்சை எழுப்பியுள்ளார்.
இதைவிட இவர்கள் தனித்தனியான கூட்டமைப்புகள் வைத்து நாடகம் ஆடுகிறார்கள். அதுமட்டுமல்ல நெடுமாறன் ஒரு கூட்டமைப்பு. மிகமோசமான தமிழ்த் தேசியம் பேசியவர் இன்று பார்ப்பண ஆதிக்க சக்திகளுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளார். இவர் இந்த அரசியல் சகதிக்குள் நன்றாக பந்தாடப்படுகிறார்.
அரசியல் கட்சிசாராமல் யாரும் யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைப்பதில்லை. எல்லோரும் அடுத்த இருமாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை நோக்கியே இந்நாடகங்களை நடத்துகிறார்கள்.
தேசம்நெற்: இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் மேலொங்கி உள்ளது. அவர்களுடைய இந்த உணர்வு பற்றி…..?
இன்று தமிழ் நாட்டில் ஊடகங்களே பலவிடயங்களை நடாத்திச் செல்கிறது. அது பரவலாக எந்த நாடுகளிலும் இப்படித்தான் என்றாலும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் பார்த்தால் இலங்கைச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அதில் அக்கறையேயில்லை. மாறாக கட்சி சார்ந்த ஊடகங்கள் மக்கள் தொலைக்காட்சிகள் சிறு பத்திரிகைகளே இலங்கை பற்றிய செய்தியை எடுத்துச் செல்லும் ஊடகங்களாக இன்று உள்ளன. இவை யாவற்றையும் மீறி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது சம்பந்தமான உணர்வு எல்லாத் தமிழகத் தமிழர்களிடமும் உள்ளது.
இந்த உணர்வலைகள் புலிகளுக்கு ஆதரவாகவோ அன்றி சிங்கள மக்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் நிலைமைக்கும் அப்பால் தமிழர்கள் வன்னியில் உள்ள மக்கள் கொல்லப்படக் கூடாது என்ற உணர்வு எல்லா மக்களுக்கும் உண்டு. இந்த தமிழர்களுக்கான உணர்வலைகளுக்குத்தான் காங்கிரஸ் உட்பட எல்லோரும் இன்று பயப்படுகிறார்கள். முத்துக்குமார் இறந்த பின்பு ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் பெருந்தொகையான மக்கள் ஒன்றுதிரண்டது ஒரு முக்கிய புள்ளியாகிவிட்டது. இது பின்னர் இங்கு தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் பற்றி பேசும்போது முத்துக்குமாருக்கு முன்பு முத்துக்குமாருக்கு பின்பு என்ற காலக்குறியீட்டுடன் பேசுமளவுக்கு அந்த நிகழ்வு மிக குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்டுள்ளது. இபபடியான இவ்வுணர்வுகள் இப்படி மிகவிரைவாக பலமாக வெடிக்கும் என்ற பயம் எல்லா கட்சிகளுக்கும் ஏற்ப்பட்டுள்ளது.
தேசம்நெற்: இந்திய மற்றும் தமிழக ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றனர்?
சேனன்: இன்று இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு பொதுப்படையான கருத்தாக்கத்தை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய விடயம் ஒன்று மட்டும்தான். 2 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் சுத்தி வளைக்கப்பட்டு யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற விடயத்தை மீறி வேறு எந்த விதமான விடயத்தையும் நம்ப முடியாத சூழ்நிலைதான் ஏற்ப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிவரும் எல்லா செய்திகளும் ஏதோ ஒரு பக்கச்சார்பாகவே வெளிவருகிறது. ஏனெனில் வன்னியில் சுயாதீன செய்தியாளர்களும் இல்லை. சுயாதீன செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவுமில்லை.
தமிழ் நாட்டில் ஊடகங்கள் தமது சொந்த லாபம் கருதி (சில தேசிய கட்சிகள் சார்ந்த ஊடகங்களும்) மிகவும் மோசமான முறையில் இயற்றி இயற்றி பல்வேறு இயற்றல்களை பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அதேமாதிரி மற்றய ஊடகங்கள் கண்டு கொள்வதேயில்லை. முக்கியமாக வலது சாரி ஊடகங்கள், கண்டு கொள்வதேயில்லை.
இலங்கைத் தமிழர் பற்றிய விடயத்தில் பொதுவான உரையாடலை நடாத்த உண்மையை ஆராய்வு செய்யும் நோக்கம் எந்த ஊடகங்களுக்கும் கிடையாது.
தேசம்நெற்: ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புப் பற்றியும் அதன் தலைவர் திருமாவளவன் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
சேனன்: ஒடுக்கப்பட்ட மக்களே தமிழர்க்காக குரல் கொடுக்கிறார்கள். சென்னையில் ஏசி கார்களில் திரிபவர்கள் இதை பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரிய உத்தியோகத்தவர்கள் மத்தியதர வர்க்கம் இவர்களுக்கும் இது பற்றி கவலையே இல்லை. அவர்கள் தனித்துவமான வாழ்க்கையுடன் இருக்கிறார்கள். இன்றும் இலங்கைத் தமிழர்க்காக குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படும் மக்களே தான்.
அது இருக்க அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் திருமாமளவன் போன்றோர் ஒடுக்கப்படும் மக்களின் மேல் இருந்து சவாரி தான் செய்கிறார்கள். வெறும் உதட்டு உதவி மட்டுமேதான் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த பிரச்சினையை சரியான வழியில் எடுத்துச் செல்லும் நோக்கம் இல்லை. அடுத்த தேர்தலை நோக்கியே அவர்களது கவனம் உள்ளது.
முக்கியமாக திருமாவளவனைப் பொறுத்த வரையில் அவருக்கு தமிழர்க்கு தீர்வு தமிழீழத்தை தவிர வேறு இல்லை என்ற அடிப்படையில் பேசுகிறார். தான் இதை தேர்தலுக்காக பேசவில்லை என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் தேர்தல் கூட்டணியை நோக்கிய செயல்களே பின்னணியில் இருப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இனவாதிகளுடனும் பார்ப்பணியத்துடனும் இணைந்து செயற்ப்படும் நிலைக்கும் வந்துள்ளார்கள். இது மிக மோசமானதே என்பது எமது கருத்து.
தேசம்நெற்: தீக்குளிப்பு பற்றி தமிழகத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் எப்படி உள்ளது?
சேனன்: தமிழகத்தில் முத்துக்குமாருடைய தீக்குளிப்பு தனியாக பார்க்கப்பட வேண்டிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்பு தமிழகத்தில் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தோழர்கள் தீக்குளிப்பார்கள். காசு கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தீக்குளிப்பு வரலாறு நீண்ட வரலாறு. கரும் புலிகள் உருவான காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த வரலாறு. அது ஒரு கலாச்சார ரீதியாகவும் பார்க்க்க கூடியது. அதைபின்பு பார்ப்போம்.
முத்துக்குமாருடைய தீக்குளிப்பு வலதுசாரிகள் இடதுசாரிகள் யாரும் கொச்சைப்படுத்திப் பார்ப்பதில்லை. காரணம் இன்றைக்கு இங்கே ஒரு இயலாமை என்று ஒன்று உள்ளதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
முத்துக் குமாருடைய கடிதம் எழுதப்பட்டது யாரால்? எப்படி எழுதப்பட்டது? என்பது வேறுவிடயம். அதற்கு அப்பால் அக்கடிதம் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகவும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களுக்கு எதிராவும் அதைப் பார்க்கலாம். எல்லோரும் கைவிட்ட நிலையில் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி. தனி ஒரு மனிதனாக 2 லட்சம் மக்கள் ஏதும் செய்ய முடியாமல் கொலைக் களத்தில் நிற்கும்போது இன்னோரு சக மனிதன் என்ன செய்ய முடியும் என்பதுதான் இந்த தீக்குளிப்பு நடவடிக்கை. இந்த அதிகாரங்களுக்கு எதிராக என்ற கேள்விக்கு ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒருவனின் போர் யுக்தியாக இது இன்று பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரிடம் இப்படியான போக்கு கடந்த காலங்களில் இருந்ததில்லை. ஆனால் இது உடனடியாக இலங்கைத் தமிழர்களாலும் பிரதி பண்ணப்பட்டு செய்யப்படுகிறது. இன்று இது உலகத்தளவுக்கு இந்த தீக்குளிப்பு நகர்த்தப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக சிறுவர்கள் கல்லால் எறிவார்கள். இது இயலாமையின் வெளிப்பாடு. இது யுக்தியுமாக உள்ளது. அதே மாதிரி இந்த விடயமும் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த யுக்தி காசா மக்களாலும் எடுக்கப்பட்டால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றளவுக்கு இவ்விடயம் ஒரு இயலாமையின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டும். கொச்சைப்படுத்திப் பார்க்க முடியாது. அதே நேரம் இதை ஊக்குவிக்க முடியாது. இதனால் வெல்ல முடியாது என்ற பிரச்சினையையும் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இதை அழுத்தமாக சொல்லும் போது இதற்கு மாற்றீடான போராட்ட வடிவத்தையும் முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்த முயற்ச்சியைத்தான் நாங்கள் CWI செய்ய முயற்ச்சிக்கிறோம்
தேசம்நெற்: தமிழக இடதுசாரி அரசியல் கட்சிகள் இலங்கை தொடர்பான என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன?
சேனன்: இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் யாராவது வேலை செய்கிறார்கள் என்றால் இடதுசாரிகள் மட்டும்தான். இருந்தாலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தா பாண்டியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவரது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல் பண்ணும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் சரியான சில கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கும் போதிலும் இலங்கைத் தமிழ் மக்களை இந்துக்களாகவும் அதனால் இந்தியா உதவி சேய்ய வேண்டும் என்ற பார்வைகள். இப்டியான பார்வைகளுடன் உடன்படுதல் இது மிகமோசமான இடதுசாரி வரலாற்றில் இல்லாத ஒரு எல்லையை அவர் தொட்டுள்ளார். அது அப்படி இருக்க CPM என்ன செய்கிறது என்றால் இந்த நிலையில் ஒரு நடுநிலைப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இன்றைய இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து நடத்துவது சரியா? என்று ஒரு கேள்வியை அவர்களை நோக்கி கேட்க வேண்டியள்ளது. அது எங்கே இருந்து வருகிறதுதென்றால் அவர்களது கூட்டமைப்பு எங்கே இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது. அவர்கள் காங்கிரஸ் கட்சியுடனான முரண்பாட்டை தவிர்பபதில் இருந்து வருகிறது. அதைவிட அவர்கள் மூன்றாம் அணி என்ற அகில இந்திய அளவில் கூட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற தேர்தலுக்காக அந்த தேர்தலையிட்டு காங்கிரசை பகைக்கக் கூடாது என்றே அவர்களது திட்டங்கள் செயற்த்திட்டங்கள் அமைகிறது. அதன் வடிவம் தான் இந்த CPM வடிவம்.
இன்று CPM இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுக்க மறுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை வைத்துத்தான் ஆகவேண்டும். இதற்கு அப்பால் நான் அப்படி CPM மீது குற்றச்சாட்டை வைத்தபோதும் அது நியாயம் அற்றதாயும் இருக்கலாம். ஏனெனில் CPM க்கு கீழ் இருக்கும் பல தொண்டர் அமைப்புகள் தோழர்கள் வந்து இந்த ஈழ மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் பேசுகின்றார்கள். இது ஒரு சிக்கலான விடயமாகவும் உள்ளது. இந்தியாவைப் பற்றிப் பேசுவது எப்படிச் சிக்கலோ அதே போல இந்த இடதுசாரிகளைப் பற்றிப் பேசுவதும் சிக்கலானது.
இதைவிட இந்த ஈழப்போராட்ட நடவடிக்கைகளிலும் வழக்கறிஞர் போராட்டங்களிலும் இக்கடும் வெய்யிலிலும் உழைப்பவர்களாகவும் இப்போராட்டத்தை ஒரு வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் மாவோ தோழர்கள (மாக்ஸீய லெனிஸிய ML தோழர்கள்) இவர்கள் நிறையவே செயற்ப்படுகிறார்கள் அவர்களது கருத்து நிலையிலும் மாற்றமும் வந்துள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கும் போக்கும் உள்ளது. அதையும் தாண்டி ஒரு முற்போக்கான நிலையையும் பார்க்க்க கூடியதாக இருக்கிறது. ML களிடம் இருந்து பிரிந்து உருவான “புதிய போராளிகள்” என்ற அமைப்பு மிகமுற்ப்போக்கான நிலையை உருவாக்கியிருப்பதையும் பார்க்க்க கூடியதாக உள்ளது. இதில் தான் ஒரு ஒளிமயமான போக்கை இந்தக் கட்டத்தில் பார்க்க்க கூடியதாக இருக்கிறதே தவிர வேறு எந்த முற்போக்கான நிலைகளையும் பார்க்க்க கூடியதாக இல்லை என்றே கூறலாம்.
தேசம்நெற்: தமிழகத்தில் உள்ள உணர்வலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உணர்வாக கருத முடியுமா? அல்லது அது வெறுமனே இன உணர்வா?
சேனன்: இதற்கு நேரடியான பதில் தரமுடியாது. இது இன உணர்வு என்ற அடிப்படையில்லத்தான் உலகம் முழுவதும் தமிழ் இனம் என்ற அடிப்படையில்த் தான் உலகெங்கும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழ் பேசும் தலித்துக்கள் குரல் கொடுக்கிறார்கள். இது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிரான குரலாகவும் உள்ளது. யார் இதன் நியாயமான முறையில் குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் ஒடுக்கப்படும் மக்களுக்குத் தான் ஒடுக்கப்படும் மக்களின் நிலைபுரிகிறது.
தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக போராடுபவர்கள் தலித்துக்களே. ஒடுக்கப்படும் மக்களே இந்த கடும் வெய்யிலில் போராடுகிறார்கள். மேட்டுக்குடி மக்கள் நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆங்காங்கு பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் யாரும் இங்கு இல்லை. தெருத் தெருவாக வந்து போராட தயாராக இல்லை. அந்த ஒடுக்கப்படும் மக்கள் செய்யும் போராட்டத்தில் தமது பெயரை நிலை நாட்டவே இந்த நடிகர்கள் அரசியல்வாதிகள் தாமும் நாடகம் ஆடுகிறார்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற விடயமே தலை தூக்கி நிற்கிறது. இருந்தாலும் தமிழ் இன உணர்வு தேசியவாதம் கக்கிக் கொண்டு அது தன் பக்கம் இழுப்பதையும் காணலாம்.
தேசம்நெற்: இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றியும் அதில் இந்திய அரசியல் நிலைப்பாடுகள் சூழ்நிலைகள்?
சேனன்: இந்திய அரசுக்கு இந்திய பிராந்திய நலன்தான் முக்கியம். ஒடுக்கப்படும் மக்களோ அல்லது இலங்கையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஒவ்வொரு இந்திய மாநிலங்களிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ப.சிதம்மரம் காங்கிரஸ் கட்சி மகாநாட்டில் அண்மையில் சொன்னார். தாங்கள் காஷ்மீரில் நடக்கும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது எப்படி இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது என பச்சையாக கேட்டார். இதுதான் இவர்களது நிலைப்பாடு. பிராந்திய நலன்கள் மட்டுமேதான். எல்லா பெரிய கம்பனிகளும் வரிசையாக நிற்கிறது. தமிழர் பிரதேசத்தில் வியாபாரம் செய்யத் தொடங்குவதற்கு தயாராக உள்ளனர். அந்த நோக்கத்தில் இருந்துதான் இவர்களது அரசியல் வருகிறதேயொழிய வேறு எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நோக்கத்திலிருந்தும் வருவதில்லை வேறு எந்த முற்போக்கு எண்ணமும் கிடையாது.
தேசம்நெற்: இந்திய CWI ன் இலங்கை பற்றிய நிலைப்பாட்டு என்ன?
சேனன்: இன்றைக்கு படுபாதகமான செயலில் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. 2000 புலிகளை அழிப்பதற்காக இரண்டரை லட்சம் தமிழர்களை அழித்தாவது புலிகளை கொல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்றால் இந்த 2000 புலிகளை காப்பாற்றி என்றாலும் இந்த இரண்டரை லட்சம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில்த்தான் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதை நாம் CWI பார்க்கிறோம்.
இன்றைக்கு உள்ள உடனடித்தேவை என்ன? உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் வெளியேறிய மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஓருநாளைக்கு 5.5 லட்சம் மில்லியன் செலவழித்து யுத்தம் செய்யும் இந்த அரசு வெளியேறும் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியாதா? ஏன் மீண்டும் அவர்களை முகாமில் போட்டு அடைக்கிறது ஏன் துன்புறுத்துகிறது? ஏன் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் மிக மோசமான மனித உரிமைமீறல்கள் இதை நிறுத்துவதற்கான குரல்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும்.
இன்றைக்கு இந்த வலதுசாரிகள் போகிற போக்கில் ஏதாவது செய்து ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சியை மந்தப்படுத்தி வைத்திருக்கும் இந்தருணத்தில் இதற்கும் அப்பால் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டிய அவசிய தேவையள்ளது.
மற்றறுமொரு முக்கிய விடயம் இங்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டமைப்புக்கு தெரியாது மற்ற கூட்டமைப்பு என்ன போராட்டம் செய்கிறது என்று, சில கூட்டமைப்பு திட்டமிட்டு வலதுசாரிகளால் இந்தப் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சில போராட்டங்களில் பத்து பதினைந்து பேர்களும், சில போராட்டங்களில் சில நூறு பேர்களும் சில போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களும் இப்படி பிளவுபட்ட நிலையில் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த முடியாதா? என்பதையே நாம் CWI எல்லாக் குழுக்களிடமும் கேட்டுள்ளோம் அதை ஒழுங்குபடுத்த முயற்ச்சிக்கின்றோம்.
அடுத்து இலங்கையை பொறுத்த வரையில் ஒன்றுபட்ட போராட்டம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்று இருப்பதால் இங்கு தமிழ் நாட்டில் சிங்களம் சிங்களவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது எமக்கு தெரிந்ததொன்றே. அதற்கு எதிராக தோழர் சிறீதுங்கா ஜெயசூரியா இங்கு வந்து பெங்களுர் கர்நாடகா தமிழ் நாடு போன்ற பல இடங்களில் ஒரு சிங்கள இடதுசாரி தமிழ்பேசும் மக்களுக்காக குரல் எழுப்பியது மிகமுக்கிய வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இது கருத்தியல் மாற்றங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
மற்றது இந்த எல்லா கூட்டமைப்புக்கள் கட்சிகளுக்கு முன்னால் நாம் வைக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினையை தனிபட்ட கட்சி நலனுக்காக பாவிக்காமல் ஒன்றுபட்ட குரல் இந்த கஸ்டப்படும் மக்களுக்காக செய்தோம் என்ற ஒன்றையாவது பதிய முடியாதா?
ஓன்றிணைக்கும் பணி மிக கடினமானது. எமது CWI தோழர்கள் மிக கடுமையான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை 7ம் திகதி CWI ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் பல முக்கியமான பல்வேறு விடயங்கள் பரிமாறப்பட்டது. இக் கூட்டத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் கொண்டவர்களும் பங்கு பற்றினர்.
இதன் பின்னர் ஒரு செயற்ப்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த செயற்குழு திங்கட் கிழமை தனது முதலாவது கூட்டத்தை கூடியது. மேலும் இந்தக் குழு மற்ற கூட்டமைப்புக்களுடனும் கருத்துக்களை பரிமாறி அவர்களில் சில கூட்டமைப்பினரின் ஆதரவினையும் பெற்றும் வேறு சில கூட்டமைப்பினர் ஆதரவினைத்தர முன்வந்தும் உள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டடில் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வைத்து இந்த பிரச்சார வேலைகள் நடைபெறவுள்ளது.
1. யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
2. இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
3. வெளியேறிய மக்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கiளின் சுதந்திரத்திற்கு அனுமதியளித்தல்
4. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்
5. தொழிற்சங்கங்கள் உருவாக்கும் உரிமையும் தொழில்சங்கங்க உரிமைகளைப் பாதுகாப்பும்.
6. அரசியல் நிர்ணய சபையை உருவாக்குதல்;: வாக்கெடுப்பின் மூலமாக ஒரு சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்தல்.
மேற்கண்ட இந்த பிரச்சாரங்களின் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியுமா?
இந்த தமிழர் போராட்டத்தை வலதுசாரிகளிடமிருந்து கைப்பற்றி தனித்துவமாக இயக்க முடியுமா? இதுதான் இன்று CWI தோழர்களின் முன் முயற்ச்சி அதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள்.
தேசம்நெற்: முன்னைய 1980-90 களில் இருந்த தமிழகத்திற்கும் இன்றய தமிழகத்திற்கும் என்ன வேறுபாடுகள் தெரிகின்றதா?
சேனன்: கஸ்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர் ஒரு விஷேட மத்திய தரவர்க்கத்தினர் உருவாகியுள்ளனர். வர்க்க இடைவெளி வரலாறு காணாத அளவு அகன்று போயுள்ளது. ஒடுக்கப்படும் கஸ்டப்படும் மக்கள் தற்போது தம்மை இன்னுமொரு தனி இனமாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.
ஆளும்வர்க்கத்தின் ஒடுக்கு முறையில் கொடூரம் அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார மாற்றம் இதை மேலும் அதிகரிக்கப்பண்ணியுள்ளது.
தேசம்நெற்: தற்போது இலங்கையில் நடைபெறும் படுகொலைகளை genocide என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கிறது அது பற்றி.
சேனன்: Genocide என்பது ஒரு இனம் இன்னோரு இனத்தை அழித்தல் என்றே கருதப்பட்டது உதாரணமாக ய+த இனம் ஜேர்மனியரால் அழிக்கப்பட்டது கொசோவாவில் ரூவாண்டாலில் 800000க்கு மேற்ப்பட்ட மக்கள் அழிக்கப்பட்டது. இதை genocide என்ற பொதுவான விளக்கம் தரப்படுகிறது இதனால் இன்று இலங்கையில் நடக்கும் கொலைகள் genocide என்று சொல்ல முடியாதது காரணம் சிங்கள இனம் தமிழ் இனத்தை கொல்லவில்லை என்றும் இந்த பதத்தை பாவிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதற்கும் அப்பால் சிலர் genocide என்ற பதத்தை பாவிக்க விரும்பவில்லை. காரணம் அது ஒரு loaded word அதை இப்ப பாவிப்பது எமக்கு உபயோகமானதாக இருக்காது என்கிறார்கள். காரணம் இந்த எழுச்சிகளில் முன்வைக்கபபடும் genocide என்ற கோசம் பலம் பெறும் என்றும் இதனால் புலிகள் பலம் பெறலாம் என்ற நோக்கங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம்.
இதற்கும் அப்பால் இப்படி genocide என்ற பதத்தை சொல்வது சரிதானா என்ற கேள்வி உண்டு. ரூவான்டாவில் 14 விகிதமான மக்கள் கொலலப்பட்ட கோரமான சம்பவம், அப்படிப் பார்த்தாலும் இந்த தமிழர் போராட்ட யுத்தம் காரணமாக இராணுவ நடவடிக்கைகளில் 10 – 13 சதவிகித மக்கள் கொலைவாசலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை genocide என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. இதை வெறுமனே கொலைகள் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. வேறு எந்த சொல்லைக் கொண்டு சொல்வது இதை வெறுமனே கொலைகள் என்று சொல்வதா? அல்லது அரச கொலைகள் என்று சொல்வதா?
சிங்கள மக்கள் கொல்லவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்து என்று சொல்லும் அரசு இப்பாதக செயலைச் செய்கிறது. இதை வெறும் கொலைகள் என்ற சொல்லை சொல்லிவிட்டுப் போக முடியுமா?
இந்த genocide என்ற பதம் பற்றி சர்வதேச அளவில் ஆராய வேண்டியுள்ளது. இக்கொலைகள் எந்த நோக்கில் எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.
genocide என்ற சொல்லுக்கான அடிப்படைத்தேவை இலங்கையில் இல்லையா? இலங்கை அரசால் இந்நிலை உருவாக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் நாம் இந்த சொல்லைப் பாவிப்பது பற்றி கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.