இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து வரும் பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது. பஸ்கள், ரயில்கள் மட்டும் ஓடுகின்றன. இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.
இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை- புளியரை இடையிலான ஒரு அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திருப்பூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூட்பட்டுள்ளன.வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனின் அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர். வேலூரில் பெல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையி்ல் உயர்நீதிமன்றம் முன்பு திறந்திருந்த சைக்கிள் கடையை சிலர் கல்வீசித் தாக்கி மூட வைத்தனர். திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். நன்னிலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமையில் 100 பேர் பஸ்மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு பஸ் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்..
இதற்கிடையே பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிப்ரவரி 4-ம் தேதியன்று இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதி முகாமில் கருப்புக் கொடி..
பாவூர் சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் இன்று பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேனர் கட்டியுள்ளனர்.