இலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார்.
மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.சம்பவம் நடந்த போது பாண்டியன் வீட்டில் இல்லை.