::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்சு

hillary-clinton.jpgஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன். அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒபாமாவை சந்திக்கும் மன்மோகன்:

இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி : ஜெ. அறிவிப்பு

jayalalitha.jpgஇலங்கை யில் ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அங்கு வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியும், அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் ஜெயலலிதா இதனை வெளியிட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். மாலை 5 மணியளவில், உண்ணாவிரத முடிவில் பேசிய ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதிக்கு அதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் மேலும் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று கூறினார். தவிர மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியினர் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள நிதி சென்னை வந்து சேர்ந்ததும், மொத்தமாகச் சேர்த்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

மேடையில் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்ற பள்ளிக்குழந்தைகள் இருவர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவிற்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ

jayalalitha.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களையும், தளவாடங் களையும் இந்திய அரசு அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதனை மத்திய அரசு மறுக்கவில்லை. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை திமுக எதிர்க்கவும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும்போது கருணாநிதி வாய்மூடி மவுனியாக மாறி விடுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களது சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும். அதே வேளையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறக்க காரணமான திசை மாறிப் போன ஆயுதமேந்திய போராட்டத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இவை இரண்டையும் ஒன்று சேர்த்து கருணாநிதி பிரச்சனையை குழப்ப முயற்சி செய்கிறார். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்து உணவு, உடை, மருந்து எதுவுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உணவு, உடை மற்றும் மருந்துகளை ஏன் அனுப்பவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் மாபெரும் தோல்வி அடைந்து விட்டன. தமிழ் மக்கள் மேல் மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் உண்மையான அக்கறையே இல்லை. நாம் இங்கு உண்ணாவிரதம் இருப்பதால் பசியால் வாடும் இலங்கை தமிழர்களின் வயிறு நிரம்ப போவதில்லை. இது ஒரு அடையாளமே. இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்திருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த போராட்டம் என்றார்.

இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஜெயலலிதா.

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். மேடையி்ல வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியையும் அவர் போட்டார்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மாலை 5 மணி வரை ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இலங்கை-இது ஜெவின் 2வது உண்ணாவிரதம்:

இலங்கைப் பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2வது முறையாகும். கடந்த 1985ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். காவிரிப் பிரச்சனைக்காகவும் அவர் மெரீனா கடற்கரையில் திடீர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மனிதர் மலம் அள்ளும் அவலத்தை ஒழிக்க கோரி பிரிட்டனில் போராட்டம்

india.jpgஇந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும் பெரும்பாலும் பெண்கள் அடங்கலாக 13 லட்சம் பேர் இன்னும் மனித மலத்தை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனரான மீனா வர்மா குற்றஞ்சாட்டினார்.

இந்திய அரசாங்கம் இது தொடர்பான சட்டங்களை அமல்படுத்தவில்லை. இவ்வாறு மனித மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மீள்வாழ்வுக்காக உறுதிவழங்கப்பட்ட நிதியையும் அது வழங்க மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு இந்த தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ், பதாஹ் இணக்கப்பாடு: பலஸ்தீனப் பிரதமர் பதவி விலக சம்மதம்

w-n.jpgபலஸ்தீன் ஜனாதிபதி சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார். மார்ச் மாத இறுதியில் சலாம் பயாத் ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் ஹமாஸ¤ம் பதாவும் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிபெற்றதையடுத்து பலஸ்தீனப் பிரதமர் பதவியைத் துறக்க முன்வந்தார். காஸாவையும், பலஸ்தீனையும் மீண்டும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலும் பிரதமர் பதவி காஸாவை ஆளும் ஹமாஸ¤க்குச் செல்லவுள்ளது. காஸாவை புனரமைக்க வழங்கப்பட்ட உதவிகள் ஹமாஸிடம் செல்வதை உலக நாடுகள் விரும்பவில்லை.

மேற்குக் கரையை ஆளும் பதாஹ் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸிடம் நிதிகள் செல்வதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறான நிலையில் ஹமாஸ், பதாஹ் அமைப் பிடையே இணக்கப்பாடுகள் உண்டானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

அதேவேளை ஐக்கியப்பட்ட பலஸ்தீன் மீண்டும் உருவானால் தொடர்ந்தும் இஸ்ரேலுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.அமெரிக்காவும் ஹமாஸ், பதாஹ்விடையே ஏற்பட்ட ஒற்றுமையை வரவேற்றுள்ளதுடன் மத்தியகிழக்கு பேச்சு வார்த்தை தொடர்வதை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனியாகப் பிரிந்துசென்ற ஹமாஸ் தடையாகச் செயற்பட்டது. தற்போது இது நீங்கும் எனக் கருதப்படுகிறது.

லாகூர் தாக்குதலில் தனது தொடர்பை நிராகரிக்கிறது லஷ்கர்- இ -தொய்பா

cricket_pakisthan.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளை அந்த அமைப்பின் பேச்சாளர் அப்துல்லா ஹாஸ்நவி மறுத்துள்ளார்.

ஸ்ரீநகரில் இனங்காணப்படாத இடமொன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், இந்த ஊடக செய்திகள் பிழையானவை, ஆதாரமற்றவை என்று கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவித்தன. மும்பைத் தாக்குதலிலும் தனக்கு தொடர்பில்லையென லஷ்கர் இ தொய்பா முன்னர் மறுத்திருந்தது.

“இலங்கைக் குழுவினர் மீதான தாக்குதலானது பாகிஸ்தானின் இறைமை மீது இடம்பெற்ற தாக்குதலாகும். அந்த மாதிரியானதொன்றை காஷ்மீர் போராளிகள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்’ என்று ஹாஸ்நவி கூறியுள்ளார். காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா போராடி வருகிறது. லாகூர் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகளை இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் புகழை மாசுபடுத்தவும் அந்த நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தவும் இந்திய பாதுகாப்பு, நிறுவனங்கள் மேற்கொண்ட வேலையே லாகூர் தாக்குதல் என்று அப்துல்லா ஹாஸ்நவி தெரிவித்துள்ளார். லாகூர் தாக்குதல் தொடர்பாக எந்த அமைப்புகளும் இதுவரை உரிமை கோரவில்லை.

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

thinking.jpgமார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக – மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், ‘எல்லாம் போச்சு…’ என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம். ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ. இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால்:டி.ஜி.பி. எச்சரிக்கை

tamil-nadu-police.jpgதமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்திற்கு கலைஞர் கருணாநிதி வரவேற்பு

karunanithi.jpgஇலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கோரியும் தமிழர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கது

என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடந்த அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி ஆகியவற்றை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்தவர் இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று தெரிவித்துள்ளார்.