லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளை அந்த அமைப்பின் பேச்சாளர் அப்துல்லா ஹாஸ்நவி மறுத்துள்ளார்.
ஸ்ரீநகரில் இனங்காணப்படாத இடமொன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், இந்த ஊடக செய்திகள் பிழையானவை, ஆதாரமற்றவை என்று கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவித்தன. மும்பைத் தாக்குதலிலும் தனக்கு தொடர்பில்லையென லஷ்கர் இ தொய்பா முன்னர் மறுத்திருந்தது.
“இலங்கைக் குழுவினர் மீதான தாக்குதலானது பாகிஸ்தானின் இறைமை மீது இடம்பெற்ற தாக்குதலாகும். அந்த மாதிரியானதொன்றை காஷ்மீர் போராளிகள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்’ என்று ஹாஸ்நவி கூறியுள்ளார். காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா போராடி வருகிறது. லாகூர் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகளை இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் புகழை மாசுபடுத்தவும் அந்த நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தவும் இந்திய பாதுகாப்பு, நிறுவனங்கள் மேற்கொண்ட வேலையே லாகூர் தாக்குதல் என்று அப்துல்லா ஹாஸ்நவி தெரிவித்துள்ளார். லாகூர் தாக்குதல் தொடர்பாக எந்த அமைப்புகளும் இதுவரை உரிமை கோரவில்லை.