::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிரேசில் கடற்படையால் உடல்கள் மீட்பு

01-air-france.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர். இப்போது கண்டு எடுக்கப்பட்ட உடல்களோடு சேர்த்து இதுவரையில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தன்னுடைய ஏர்பஸ் தயாரிப்பு விமானங்களில் உள்ள வேகத்தை காட்டும் கருவிகளை மாற்றும் பணியை துரிதப்படுத்தப் போவதாக ஏர் பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தக் கருவிகளில் பிரச்சனை இருப்பது ஒராண்டுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் விபத்து நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த கருவிகளை மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

விபத்தை ஆராய்ந்து வருபவர்கள், காணாமல் போவதற்கு முந்தைய நிமிடங்களில், விமானத்தின் உணர்வான்கள் முரண்பட்ட தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : திருமாவளவன்

07thirumavalavan.jpgகுடியரசுத் தலைவர் உரையில் சேது சமுத்திர திட்டம்,  இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் தொகுதி  எம்.பி.யும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான தொல். திருமாவளவன் இன்று சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  முன்னதாக சிதம்பரம் சுப்பிரமணிய தெருவில் உள்ள மன்மதசாமி காமுண்டி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.

தொடர்ந்து அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர், லால்பேட்டை, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திறந்த வேனில்  வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த 2ஆம் தேதி எம்.பி.யாக பதவியேற்ற நான், அனைத்து தேசிய  தலைவர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். புகழ் பெற்ற நேரு, அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த நாடாளு மன்றத்தில் மக்களுக்காக வாதாட நான் சென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஏழைமக்களுக்கு கூரை இல்லாத வீடு வழங்கப்பட வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போது ஜனாதிபதி உரையில் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி உரையில் சேது சமுத்திர திட்டம், இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.  குறிப்பாக சேது சமுத்திர திட்டம் பற்றி எந்த குறிப்பும் ஜனாதிபதி உரையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கடலில் விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானம் கண்டுபிடிப்பு

01-air-france.jpgஅட் லாண்டிக் கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி 228 பேருடன் கடந்த 1ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ஏர்-பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது. விபத்து நடந்த இடத்தில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் போர் விமானங்களும், கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தன. நீர் மூழ்கி கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சில தினங்களுக்கு முன் விமானம் மாயமான இடத்தில் இருக்கை போன்ற ஒருபொருள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு, விமானம் கிடைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது விமானத்தின் இருக்கை பகுதி அல்ல என்று பின்னர் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த கடல் பகுதியில் 6 நாட்களுக்கு பிறகு பிரேசில் நேரப்படி நேற்று காலை பெர்னாண்டோ டி நொரங்கா தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 900 கி.மீ. இரண்டு உடல்கள் மற்றும் ஒரு சூட்கேஸ், ஒரு பை, விமான இருக்கை ஆகியவை மிதப்பதை பிரேசில் மீட்புக்குழுவினர் கண்டு பிடித்ததாக பிரேசில் விமானப்படை உயர் அதிகாரி ஜார்ஜ் அமரால் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 2 உடல்களும் ஆண்களுடையது என்றும், மீட்கப்பட்ட சூட்கேசில் விமான டிக்கெட் மற்றும் ஒரு லேப்-டாப் கணினி இருந்ததாகவும் அவர் கூறினார். முதலில் ஒரு உடலை கடற்படை கப்பலில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மீட்டதாகவும், அதன் பிறகு 20 நிமிடம் கழித்து மற்றொரு உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

5ம் ஈழப் போரை விரைவில் பிரபாகரன் அறிவிப்பார்: நெடுமாறன்

07-nedumaran.jpgஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். “தமிழீழமும் நமது இன்றைய கடமையும்” என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார். இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.

ஆஸ்திரேலியாவில். நீடிக்கும் அட்டகாசம் – இந்தியர் கார் எரிப்பு

sea.jpgஇந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நிற்கவில்லை ஆஸ்திரேலியாவில். மெல்போர்ன் நகரில், இந்திய மாணவரின் கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. 22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார். இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம். காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார். லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம். விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன உறவில் முன்னேற்றம் அவசியம் – ஒபாமா

obamaspeech.gifஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் தேக்கமான உறவுநிலையை முறிப்பது மிக முக்கியமான விஷயம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசியுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் பேசிய அவர், இருநாடு தீர்வு அடிப்படையில் தீவிரமான பேச்சுக்கள் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறும் என தான் நம்புவதாக கூறினார். மேலும் இரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு தானும் பிரான்ஸ் அதிபரும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். இரான் தனக்கு அப்படியெல்லாம் எந்த ஒரு திட்டமும் கிடையாது என கூறி வருகிறது.

D-Day தினத்தில் கூட்டணிப்படைகள் காட்டிய வீரத்திற்கு அமெரிக்க அதிபர் புகழாரம்

d-day.jpgபிரான் ஸின் வட பகுதியில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினம் கூட்டணிப் படைகள் காட்டிய வீரம் வரலாற்றின் போக்கையே மாற்றியது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸின் நோர்மாந்தி பிராந்தியத்தில் ஒரு சிறிய கடற்கரைப் பகுதியில் நடந்த யுத்தம், இருபதாம் நூற்றாண்டில் காணப்பட்டிருந்த முன்னேற்றங்களோடு பெருமளவில் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடற்கரைப் பகுதியில் கிடைத்த வெற்றி நாஜி ஜெர்மனி மீது கூட்டணிப் படைகள் வெற்றிகொள்ள வழிவகுத்திருந்தது.

D-Day  என்று கூறப்படுகின்ற தினத்தன்று மிக மோசமான மிக உக்கிரமான சண்டைகள் நடந்திருந்த ஒமாஹா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க போர் வீரர்களின் கல்லறைகளிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா D-Day  நினைவு தின சடங்கில் இதனைத் தெரிவித்துள்ளர்.

ஜெர்மனி நாஜி வதைமுகாமுக்கு அதிபர் ஒபாமா விஜயம்

obamaspeech.gifஜெர் மனியின் ட்ரெஸ்டன் நகரில், ஜேர்மனிய தலைவி ஆங்கெலா மெர்கெல் அவர்களைச் சந்தித்து உரையாடிய அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள், பூகென்வால்ட் நகரில் முன்னாள் நாஜி சித்திரவதை முகாமுக்கு விஜயம் செய்துள்ளார்.

கெய்ரோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை ஆற்றிய மறுதினம், கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, மத்திய கிழக்கில் அமைதியை எட்டுவதற்கான தருணம் இது என்று கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது அமெரிக்கா சமாதானத்தை திணிக்காது என்கின்ற போதிலும், அவர்கள் பேச்சை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை அது ஏற்படுத்தும் என்று ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய அவர், உலக விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியான பல விடயங்கள் கையாளப்பட வேண்டிய நிலையில் ஜேர்மனி தமது முக்கிய கூட்டாளி என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளிடையே உறவில் புதிய ஆரம்பம் வேண்டும்: அதிபர் ஒபாமா

obamaspeech.gifஅமெரிக் காவுக்கும், உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அதிபர் ஒபாமாவின் உரைக்கு பெருத்த கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்தது.

கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய இந்த உரையில், அமெரிக்காவும், இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, நீதி, முன்னேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பொது அடிப்படைகளை அவை பகிர்ந்துகொள்பவை என்று ஒபாமா கூறியிருக்கிறார்.

முஸ்லிம்கள் பற்றிய மோசமான விம்பத்துக்கு எதிராக தான் போராடுவேன் என்று உறுதி கூறிய ஒபாமா அவர்கள், அதேவிடயத்தை அமெரிக்கா பற்றிய கருதுகோள் குறித்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  ஒரு நாட்டின் மீது மற்றுமொரு நாட்டினால், எந்த வகையான அரசாங்க முறைமையும் திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்க அதிபர் விஜயம்

usa-sa.jpgஅமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.

ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.