::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு: ஈரானில் கலவரம்

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஜனாதிபதி அகமதி நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவிக்கு 33.7% வாக்குகள் கிடைத்தன.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

டெக்ரான் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் காவல்துறையினர் மீது எதிர்கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதற்கிடையே ஈரான் மதத் தலைவரும், நாட்டின் உயர்ந்த தலைவராக கருதப்படுவருமான அயதுல்லா கொமேனி ‘ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது இந்திய விமானப்படை

iair-force.jpgசீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.

சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.

ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு 65 வீத வாக்குகள் பெற்று பெரு வெற்றி

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதியாக கலாநிதி மஹ்மூத் அஹமதி நெஜாத் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி நெஜாத் 65% வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளாரென்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 வயதான அஹமதி நெஜாத் ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரான மிதவாத அரசியல்வாதியாகக் கருதப்படும் மிர் ஹுசேன் முசாவி 32.05% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பழைமைவாதியான அஹமதி நெஜாத்துக்குக் கிராமப்புற மக்கள் 75% வாக்களித்துள்ளனர். ஈரானின் 46.2 மில்லியன் வாக்காளர்களில், ஒரு கோடியே 40 இலட்சத்து 11,668 பேர் வாக்களித்துள்ளனர். எதிரணி வேட்பாளருக்கு 65 இலட்சத்து 75,844 பேர் வாக்களித்துள்ளனர்.

1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், நடைபெற்ற இந்த 10வது ஜனாதிபதித் தேர்தலிலேயே கூடுதலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 45,713 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அலை அலையாக வாக்களிக்கவென திரண்டு வந்தனர். இதனால் வாக்களிப்பு நேரத்தை இரண்டு மணித்தியாலம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால், வாக்களிப்பு நிறைவடைந்ததும் உடனடியாக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய முன்னாள் பிரதமர் ஹுசேன் மூஸ்வி, தாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென அறிவித்திருந்தார். ஆனால், நேற்றுக் காலை முதல் வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி அஹமதி நெஜாத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் வீதிகளில் திரண்டு தமது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். இதனால், தலைநகர் தெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜனாதிபதி அஹமதி நெஜாத்தின் வெற்றியை ஏற்க முடியாதென ஹுசேன் மூஸ்வி தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான தேர்தல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின்போது தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குறுந்தகவல் சேவை, இணையத்தளம் என்பவையும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் கூடுதல் அமெரிக்கப் படையினர் தேவை: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

gatesgettyfora.jpgஆப்கா னிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான தமது நடவடிக்கையில், மேலும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அங்கு அனுப்புவது அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு நிலைய ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் 2001 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு அவர்களால் நடத்தப்படும் தாக்குதல்கல் மிக அதிக அளவுக்கு தற்போதுதான் உயர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் பொதுமக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதை குறைப்பதற்குமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிரஸ்லஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்படும் ஒவ்வொரு ஆப்கானியரின் உயிரிழப்பும் அங்குள்ள சர்வதேசப் படைகளுக்கு ஏற்படும் ஒரு தோல்வியே என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர ஊடப் பிரச்சாரத்தினை சமாளித்து பதிலடி கொடுக்கும் முகமாக அங்கு தமது தரப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதாலன பணமும் மனித சக்தியும் செலவழிக்கப்படும் என்று ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: புதிய புள்ளிவிபரங்கள்

fordindia.jpgபொரு ளாதார வீழ்ச்சியிலும் இந்திய உற்பத்தி துறை சிறிய வளர்ச்சி கண்டுள்ளது இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான பாதையில் செல்வதான எதிர்பார்ப்பை, இந்தியத் தொழில்துறை உற்பத்தி பற்றிய புதிய தரவுகள் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 4 மாதங்களில், முதலில் வந்த மூன்று மாதங்களில், தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்க, ஏப்ரலுக்கான உற்பத்தி கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 1. 4 வீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி தொடர்ந்தும் பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த உற்பத்தி அதிகரிப்புகளுக்கு உள்நாட்டுத் தேவைகளே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வளரும் பொருளாதாரங்கள், மீட்சியடைய ஆரம்பித்துவிட்டன என்பது தொடர்பில் சீனாவில் இருந்து கிடைத்த சமிக்ஞைகளுக்கு மேலதிகமாக தற்போது இந்த தகவல்களும் வந்துள்ளன.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஜெயல‌‌லிதா ‌விள‌க்க‌ம்

jayalaitha.jpgசேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் அ.இ.அ.தி.மு.க. இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை எதிர்‌க்‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ”2006ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதாக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சொல்லாத ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

சேது கால்வாய் திட்டம் எம்.ஜி.ஆராலும், என்னாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட திட்டம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 3600க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், மும்பை இயற்கை வரலாறு குழுமம் சேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க இத்திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது.

மக்களுக்காகவே திட்டம் என்பதில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக உள்ளது. சராசரி மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருணாநிதியின் தன்னல திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுமக்கள் கேட்புரை கூட்டங்களின் அறிக்கையை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தவறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15ன் கீழ் தண்டனைக்குரிய பிரிவுகள் செயல்படுத்தப்படும் என மிரட்டிய கருணாநிதி முழுவதுமாக மாநில அரசை புறக்கணித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டம் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மூலம் அறிவிக்க செய்த கருணாநிதி, கடலோர பகுதிகளை மேம்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்களை நியாயமற்ற முறையில் அபகரிக்க காரணமாக இருந்த கருணாநிதி சமீபத்தில் மாநில சுயாட்சி குறித்துஅறிக்கை விட்டதுதான் உலகமகா அதிசயமாகும்” எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி!!

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இரான் அதிபர் தேர்தலில் நேற்று உற்சாக வாக்குப்பதிவு

11iran.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டு வாக்களிக்க வந்திருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹ்மூட் அஹ்மடி நிஜாத் முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரானில் மொபைல் தொலைபேசி மூலமாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தம்மால் வாக்குச் சாவடிக்குக்கு இடையேயான மேற்பார்வையை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை உள்ளதாக முசவி அவர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு வேட்பாளர்களை தவிர மெஹ்டி கரௌபி மற்றும் மொஷென் ரெசாய் ஆகிய இரு வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள்.

வடகொரியாவுக்கு எதிராக ஐ நா தீர்மானம்?

misyl.jpgவட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்கு பதில் தரும் முகமாக அந்த நாட்டிற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் வரைவு தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளதாக ஐ நாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ நா பாதுகாப்பு சபையில், சுழற்சி முறையில் பதவி வகிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள வரைவு தீர்மானம் ஐ நா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அவையில் விவாதிக்கப்படும் என்று ராஜ தந்திரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர் மறு வாழ்வுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் – திமுக கோரிக்கை

karunanithi.jpg ஈழத் தமிழர் மறு வாழ்வுக்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை இரு தலைவர்களையும் நேரில் சந்தித்த திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

கருணாநிதி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு டெல்லி சென்ற போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து இலங்கையில் ராணுவ தாக்குதலால் வீடிழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு குறைந்தது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.