::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்

0301-bush.jpgஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.

இலங்கையர் இருவருக்கு சவூதியில் மரணதண்டனை

saudi-0301.jpgஇலங் கையைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள வங்கி ஒன்றிற்கு வெளியே சூடானியர் ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தினை கொள்ளை அடித்த குற்றத்திற்காகவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மட்டும் சவூதி அரேபியாவில் 92 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையை கண்டித்து எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னைக்கு வர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்’

வரலாற்றில் முதற் தடவையாக பங்களாதேஷ் பாராளுமன்றத்திற்கு 64 பெண்கள் தெரிவு

world.gif
பங்களாதேஷ் வரலாற்றில் முதற் தடவையாக 64 பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றம் அமையவுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட 19 பெண்கள் தமது போட்டியாளர்களை பாரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அரசியல் ஏற்பாட்டின் பிரகாரம் 45 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். இந்நிலையில் ஏனைய 19 பேரும் ஆளுங்கட்சியுடனேயே இணைந்து கொள்வர். நடைபெற்று முடிந்த தேர்தலில் 65 தேர்தல் தொகுதிகளுக்காக 60 பெண்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள 19 பேரும் ஷேக் ஹசீனா, காலிதா ஷியா மற்றும் முன்னாள் முதல் பெண்மணியான நௌசான் எர்சாத் ஆகியோரின் கட்சிகளிலிருந்து தெரிவாகினர்.

இம்மூவரும் தலா மூன்று ஆசனங்களுக்காக போட்டியிட்டிருந்த நிலையில், நௌசான் எர்சாத் இரு ஆசனங்களையும் ஏனைய இருவரும் தலா மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டனர். பங்களாதேஷின் மொத்த வாக்காளர் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பைத் தாக்குதலைக் கண்டித்த ஒபாமா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை -அரேபியர்கள் கவலை

israeli-aircraft.jpgமும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு ஓபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தாக்குதல் குறித்து மெளனம் காத்து வருகிறார். என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது மும்பைத் தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது. இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதனிடையே இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்ப தாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜன. 5-ல் ஹசீனா பதவியேற்பு

haseena.jpg
பங்களாதேஷ் புதிய பிரதமராக இரண்டாவது முறையாக வரும் 5ம் தேதி அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.

அவர் பங்களாதேஷ் அதிபர் இயாஜுதின் அகமதுவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஹசீனா விரும்பும் நாளில் அவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்று அதிபர் அகமது கூறியதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி 262 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி 32 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு விடுதி தீவிபத்தில் 60 பேர் உயிரிழப்பு.

bangkok-nightclub.jpgதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ( 31 ) இந்த விபரீதம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கர தீவிபத்தில் படுகாயமடைந்தனர். பாங்காக்கின் எக்கமாய் மாவட்டத்தி்ல உள்ள சந்திகா கிளப்பி்ல் நேற்று இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தீப்பொறி பற்றி தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த இரண்டு மாடிக் கட்டட கிளப்பும் தீயில் சிக்கி கருகியது. பாதிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலும், தீயிலும் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 212 பேர் படுகாயமடைந்தனர். 30 பேரின் உடல்கள் அடையாளம் முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது. பான்டு வாத்தியக் குழுவினர் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகேதான் முதலில் தீப்பிடித்ததாக போலீஸ் அதிகாரி பிரவீத் கான்ட்வால் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கிளப் அந்தப் பகுதியில் பிரபலமானது. உள்ளூர்க்காரர்கள் தவிர வெளிநாட்டினரும் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசடிகள் இடம்பெற்றதாக கூறி தேர்தல் முடிவுகளை காலிதா ஷியா நிராகரிப்பு

w_n.jpgபங்களாதேஷில்  வெளியான தேர்தல் முடிவுகளை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா நிராகரித்துள்ளார். வாக்களிப்பின் போது நாடு பூராவுமுள்ள பல வாக்களிப்பு நிலையங்களில் ஒழுங்கீனங்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் ஷியா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் ஷியாவின் அரசியல் எதிரியும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசினா அமோக வெற்றி பெற்றிருந்த அதேவேளை இத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டதாக ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் என்பன பாராட்டியிருந்தன.

இரண்டு வருட இராணுவ ஆதரவுடனான ஆட்சிக்குப் பின்னர் இத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல் தடவையாக கருத்துத் தெரிவித்த ஷியா, தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முடிவுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ஷியா ஒழுங்கீனங்கள் நடைபெற்றமைக்கான விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த சில தினங்களில் இவற்றை ஊடகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவோமெனத் தெரிவித்துள்ளார். சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக ஷியாவின் கட்சி முறையிட்டுள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா அல்லது வன்முறைகளை தோற்றுவிக்கின்றதா என்பதை அறிவதற்கு அடுத்த இரு தினங்களும் மிகவும் முக்கியமானவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் 260 இற்கும் அதிகமான ஆசனங்களை மற்றைய முன்னாள் பிரதமரான ஷேய்க் ஹசினா வென்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் இதுவரை உத்தியோக பூர்வமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிடவில்லை.

பதற்றத்தைக் குறைப்பது குறித்து ஆராய்வு

w_n.jpgஇந்திய,  பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரு நாடுகளிடையேயும் மூண்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு தொடர்புகளை ஏற்படுத்திக் கொணடனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட போர்ப் பீதியால் இந்திய, பாகிஸ்தான் பிரஜைகளிடையே அச்சம் எழுந்தது. இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் காரசார மான அறிக்கைகளையும் வெளியிட்டன. இராணுவங்கள் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டதால் இந்திய சென்ற பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு வந்த இந்தியர் களும், அவசர அவசரமாகப் பயணங்களைப் பாதியில் நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பினர். அணு ஆயுதங்களையுடைய இரண்டு நாடுகளையும் சமாதானமுறையில் செல்லுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்கள் வழங்கியுள்ள நிலையில் இராணுவ உயரதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தியமை பதற்றத்தைத் தணிக்க உதவியுள்ளது.

படைகள் இரு எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் போரைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ள இராணுவ ஆய்வாளர்கள் படைகள் விலக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தால் படைவிலக்கல் பற்றி பேசப்படலாம்.