பங்களாதேஷ் வரலாற்றில் முதற் தடவையாக 64 பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றம் அமையவுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட 19 பெண்கள் தமது போட்டியாளர்களை பாரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
பங்களாதேஷ் அரசியல் ஏற்பாட்டின் பிரகாரம் 45 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். இந்நிலையில் ஏனைய 19 பேரும் ஆளுங்கட்சியுடனேயே இணைந்து கொள்வர். நடைபெற்று முடிந்த தேர்தலில் 65 தேர்தல் தொகுதிகளுக்காக 60 பெண்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள 19 பேரும் ஷேக் ஹசீனா, காலிதா ஷியா மற்றும் முன்னாள் முதல் பெண்மணியான நௌசான் எர்சாத் ஆகியோரின் கட்சிகளிலிருந்து தெரிவாகினர்.
இம்மூவரும் தலா மூன்று ஆசனங்களுக்காக போட்டியிட்டிருந்த நிலையில், நௌசான் எர்சாத் இரு ஆசனங்களையும் ஏனைய இருவரும் தலா மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டனர். பங்களாதேஷின் மொத்த வாக்காளர் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.