தலைநகர் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே நாளை ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கணக்கெடுப்புக்கு உட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் போது, இதற்கு முன்னர் பதியப்பட்டவர்கள் என அனைவரும் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியிருக்கிறது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மேல் மாகாண பொலிஸ் பிரிவுகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேல் மாகாணத்தில் நிரந்தரமாகவோ அல்லது, தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களால் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும் நிலையங்களுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.
இதேநேரம், ஏற்கனவே பொலிஸாரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது கலந்து கொண்ட நிலையங்களுக்கே இம்முறையும் சென்று, பதிவு செய்து கொள்ளுமாறும், பதிவு செய்து கொள்ள வருபவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களை உடன் எடுத்து வருமாறும் கோரப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கையானது மக்கள் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருப்பதால், சகல பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் மேற்குறித்த தினத்தில் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு வந்து இந்த நடவடிக்கைகளை சிக்கலின்றி நிறைவு செய்து கொள்ள அதிகப்பட்ச ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே வடக்கு மாகாணத்திலிருந்து, மேல் மாகாணம் வந்து தங்கியிருப்பவர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும் தனித்தனியாக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது, பதிவு செய்தவர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு பதிவு செய்து கொள்ளவேண்டுமென்றே பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.