உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கம் 2009 ஆம் வருடத்திலும் நாட்டு மக்களை ஏமாற்றிவிட முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிட்டாய்களை காட்டி பிறக்கும் புதிய வருடத்தில் வாக்குக் கொள்ளையொன்றுக்கு அரசு தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சியின் பக்கம் மக்கள் அணிதிரள்வதைக் கண்டு அரசு அச்சம் கொண்ட நிலையிலேயே திடீரென மக்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும் நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் ரெரஸில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரசாங்கம் திடுதிப்பென்று “மினி பட்ஜட்’ போன்ற ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரும் நிவாரணப் பொதியை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருப்பதாக கூப்பாடு போடுகின்றது. நேற்று முன்தினமிரவு அரச ஊடகங்கள் “பிரேக்கிங் நியூஸ்’ அடிக்கடி வெளியிட்டன. அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டதும் அனைவரும் எதிர்பார்த்தது படையினர் கிளிநொச்சியை பிடித்துவிட்டதோ அல்லது பிரபாகரன் கைது செய்யப்பட்டுவிட்டாரோ என்பதைத்தான். அந்தளவுக்கு போர் முனையின் வேகம் இருப்பதாக அரசு தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருவதால்தான் மக்கள் இப்படியான செய்தியை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்திருப்பது சிறிய மிட்டாய் பொதியை காட்டி மக்களை மீண்டுமொரு தடவை ஏமாற்றியிருப்பதுதான்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் நாளாந்தம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவே தவறியுள்ளது. அரசின் கண்களைத் திறக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அண்மையில் பெற்றோலின் விலையை நூறு ரூபாவாக குறைக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துவரும் அரசாங்கம் மக்களை தவறான திசைக்கு திருப்பிவிடும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. பிறக்கும் 2009 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளையும் சின்ன சலுகைகளையும் நிறையவே அளிக்கத் தயாராகி வருகின்றது.
உயர்நீதிமன்றத்துடன் மோத முடியாத நிலையில் அரசு ஐக்கிய தேசியக் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இன்று அரசு வழங்க முன்வந்திருப்பது வெறும் கண்துடைப்பு நிவாரணங்களையே ஆகும். பெற்றோலுக்கு இரண்டு ரூபாவும் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு 10 ரூபாவும் குறைப்பதாகக் கூறி அதனை பெரிய சாதனையாக்க முயற்சிக்கின்றது. உலக சந்தை விலைக்கேற்ப இன்று பெற்றோல் ஒரு லீற்றர் 55 ரூபாவுக்கும் டீசல் 32 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் 26 ரூபாவுக்கும் வழக்க முடியும். அதனை அரசு ஒருபோதும் செய்யப்போவதில்லை. சமையல் எரிவாயுவைக் கூட ஒரு சிலிண்டரை 550 ரூபாவுக்கு வழங்க முடியும். இன்று மசகு எண்ணெயின் உலக சந்தை விலை 109 டொலருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் சமையல் எரிவாயுவின் விலை இன்று இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உள்ளது. அரசாங்கம் அழுகின்ற பிள்ளைக்கு மீட்டாய் காட்டி ஏமாற்றப்பார்க்கின்றது.
அரசிடம் நாம் கேட்பது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தயங்கமாட்டோம். மக்களின் அடிப்படை உரிமைகளை வென்று கொடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியுடன் செயற்படும். எதிர்க்கட்சி பலமடைந்து மக்கள் சக்தியாக மாறி வருவதைக் கண்டு அச்சம் கொண்ட நிலையிலேயே அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை மேடையேற்றியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.