உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த மாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விமான நிலையத்தில் வரவேற்றார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை விசேட விமானம் மூலம் வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைதீவு ஜனாதிபதியும், அவரது பாரியாரும் விமானத்திலிருந்து இறங்கியதும் சிறார்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷவும் கைலாகு செய்து, ஆரத்தழுவி வரவேற்றனர்.
பாரம்பரிய முறையில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்ட மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட முதலாவது ஜனாதிபதியாவார். நேற்றுப் பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஸீத்துக்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்கள் விரிவாக ஆராந்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விசேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கினார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. நாளை வரை தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.