காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வியுற்று இஸ்ரேல் தரை மார்க்கமான தாக்குதலை காஸாமீது ஆரம்பித்துள்ளதால் மிக மோசமான நெருக்கடிகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கின்றனர். பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் தஞ்சமடைந்த அப்பாவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலில் அறுபது பேர் உயிரிழந்தனர். காஸாவில் இதுவரை ஐநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்தும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துமுள்ளனர். தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் அங்கு பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே பலியாகியும், காயமடைந்துமுள்ளனர். இவ்வாரான நிலைமைக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்து அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெருந்தொகையானோர் இதில் பங்கேற்பதால் பொலிஸார் திணறுகின்றனர். எகிப்து, லெபனான், மொரோக்கோ, நோர்வே, பிரான்ஸ், கிரேக்கம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எகிப்தில் இடம்பெற்ற காஸாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அறுபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். தலைநகர் ஸ்தான்புல் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்ததால் அன்றைய தினம் வழமையான அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன. அரபு ஆட்சியாளர்களையும் எகிப்து ஜனாதிபதியையும் மிக மோசமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.
இஸ்ரேலைக் கண்டிக்கும் மிக மோசமான வார்த்தை கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெனர்கள், போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நோர்வே, கனடா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டதால் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முடியவில்லை. நிலைமை மோசம டையவே கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல், அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, இஸ்ரேல் தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில நாடுகளில் இருந்த ஐ. நா. அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஈராக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புஷ்ஷ¤க்கு காலணிகளை வீசிய ஊடகவியலாளரின் புகைப் படமும் ஏந்திச் செல்லப்பட்டது. கர்பவாவில் இது நடந்தது.