யுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதலை நிறுத்துதல், சர்வதேச மேற்பார்வையின் கீழ் உடன்படிக்கை செய்யப்படல், மீண்டும் ஹமாஸ் ஆயுதத் தாக்குதலை நடாத்துவதில்லை என உறுதியளித்தல் என்பவையே அவையாகும்.
இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என சூளுரைத்துள்ள ஹமாஸ் தலைமையகம் இஸ்ரேல் முற்றுகைகள் அகற்றப்பட்டு எல்லைகள் திறக்கப்படுவதுடன் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில் யுத்தநிறுத்தம் சாத்தியமென ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸாவில் கடந்த இரு வாரங்களாக இடம்பெறும் மோதல்கள் மிகப் பெரிய பிராந்திய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலியாவோரின் தொகை உயர்ந்தவண்ணமுள்ளன. காஸாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேல் இன்னும் தங்கள் இலக்குகளை அடையவில்லை.
ஹமாஸின் ரொக்கட் தளங்களை தகர்ப்பதே நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதாயின் பொதுமக்களை கேடயங்களாகப் பாவிப்பதை ஹமாஸ் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தது. ஹமாஸின் தலைமையகம் ஸியோனிஸ்டுகளை எதிர்த்து மூர்க்கமாகப் போராடும்படி தனது உறுப்பினர்களைக் கேட்டுள்ளது. காஸாவில் எமது குழந்தைகளைக் கொலை செய்யும் சியோனிஸ்ட் வெறியர்கள் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய எண்ணியுள்ளதாகவும் ஹமாஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் தடையாக உள்ளதாக ஐ. சி. ஆர். சி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.