மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் (06) உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் பேசுகையில், சில பாகிஸ்தான் அமைப்புகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைத் தாக்குதல் நடந்திருக்க முடியாது. மும்பைத் தாக்குதல் நடந்த விதம், அதில் ஈடுபட்டோர் செயல்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிச்சயம் சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் தொடர்பு இருப்பது நிரூபணமாகிகிறது.
தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது பாகிஸ்தான். அதேபோல வடகிழக்கில் ஊடுறுவும் தீவிரவாதிகள் நமக்கு அருகாமையில் உள்ள இன்னொரு நாட்டிலிருந்துதான் (வங்கதேசம்) வருகின்றனர். அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடமாக திகழ்கிறது.
நமது அண்டை நாடுகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலை நிலவுகிறது. சில நாடுகளில் நிலைமை சரியில்லை. தீவிரவாதிகளை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. மும்பை போன்ற தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு நிரந்தரமான நெருக்கடி நிலை நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது புலனாய்வு அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது, முக்கியமானதாகும் என்றார் மன்மோகன் சிங்.