கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சச்சின்; புதிய உலக சாதனை – ஒருநாள் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்கள்

06-sachin.jpgஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஆட்டத்தின்போது 7 ஓட்டங்கள்  எடுத்திருந்தபோது இந்த சாதனை மைல்கல்லை சச்சின் எட்டினார். மேலும் இதே ஆட்டத்தில் அவர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் 14 ஆயிரம் ஓட்டங்களைக் கூட கடக்காத நிலையில் சச்சின் 17 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக சாதனையைப் புரிந்துள்ளார். 36 வயதான சச்சின் இதுவரை 435 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதில் 45 சதம், 91 அரை சதம் அடங்கும்.

ஸ்காபுறோவில் உபாலி குரேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு

Upaly Coorayஉபாலி குறேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு கனடா ஸ்காபுறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Canadians for Peace Sri Lankan Alliance என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தள்ளது. நவம்பர் 14ல் இடம்பெறும் இஞ்ஞாபகார்த்த நிகழ்வில்

சந்திரறட்ன பண்டார: என் நினைவில் உபாலி
கே தங்கவடிவேல்: புலம்பெயர் மக்களும் இடம்பெயர் மக்களும்.
அஜித் ஜினதாச: இன முரண்பாட்டின் காரணிகள்.
ராஜன் பிலிப்ஸ்:  அரசியல் அடையாளமும் இலங்கையின் பன்முக சமூகமும்

ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் தம் உரையை நிகழ்த்த உள்ளனர்.

காலம்: 14 th of November 2009, 2.30 PM
இடம்: Scarborough Civic Centre 150 Borough Drive Scarborough

._._._._._.

தோழர் உபாலி குரே: தமிழ் – சிங்கள உறவுப் பாலம்

தமிழ் – சிங்கள இனங்களிடையே பாலமாகச் செயற்பட்டு வந்த தோழர் உபாலி குரே நேற்று (ஓகஸ்ட் 21 2009) அதிகாலை காலமானார். தமிழ் – சிங்கள இன உறவுகள் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ள இன்றைய சூழலில் தோழர் உப்பாலி குரேயின் மறைவு மிகவும் வேதனையானதாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த உப்பாலி குரே, அந்த ஓடுக்குமுறை அரசிடம் இருந்தோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தோ யாரிடம் இருந்து வந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறியதில்லை. தனது இறுதிக் காலங்கள் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்தும் எழுதியும் வந்தவர்.

தனது இளமைப் பராயத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதிகளிலேயே தன்னை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைத்துக் கொண்டவர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து இனவாதத்திற்குத் தூபமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1964ல் லங்க சமசமாஜக் கட்சி (LSSP) இணைந்த போது அந்த இணைவை கடுமையாக எதிர்த்தவர்களில் உபாலி குரேயும் ஒருவர். தோழர்கள் எட்மன்ட் சமரக்கொடி, பாலாத்தம்பு, காராளசிங்கம், பரராஜசிங்கம், தமிழ்ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் அப்போது லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்கள் இணைந்து புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை (LSSP-R) உருவாக்கினர்.

தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் தன்னை ஈடுபடுத்தி வந்த உபாலி குரே என்றும் தான் நம்பிய இடதுசாரி அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லை. 1970க்களின் முற்பகுதியில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த உபாலி குரே லண்டனிலும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

1983 இனக்கலவரத்தின் போது இலங்கையில் இருந்த உப்பாலி குரே தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். 1983ல் மரத்துடன் கட்டி உயிருடன் தீவைக்க முயன்ற கூட்டத்திடம் இருந்து ஒரு தமிழ்ப் பையனை காப்பாற்றி இருந்தார். இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். சிங்கள தேசியவாதிகளால் துரோகியாகக் கருதப்படுபவர்களில் உபாலி குரேயும் ஒருவர்.

Upaly Coorayஇலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புகளால் தவறான வகையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை முதலில் ஆரம்பித்தவர்களில் தோழர் உபாலி குரேயை மறக்க முடியாது. 1983 இனக்கலவரங்களுக்கு முன்னதாகவே இலங்கைச் சிறைகளில் அடைக்கபட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்ட அமைப்பு (Campaign for Release of Political Prisoners in Sri Lanka) தோழர் உபாலி குரே, சூரியசேகரம், டொக்டர் ஆறுமுகம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயம் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு பின்னர் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் (Sri Lanka Solidarity Cambaign) என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 1983 இனக்கலவரத்திற்கு எதிராக அப்போது பெரும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. பிற்காலங்களில் தமிழ் தேசியவாத அலையில் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் ஈழம் சொலிடாரிற்றி கம்பைனாக (Eelam Solidarity Campaign) மாற்றப்பட்டது.

அதன் பின்னர் கொமிற்றி போர் டெமொகிரசி அன் ஜஸ்டிஸ் (Committee for Democracy and Justice) என்ற அமைப்பை தோழர்கள் உபாலி குரே, வெஸ்லி முத்தையா, வி சிவலிங்கம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் உருவாக்கினர். இவ்வமைப்பு தமிழ் தேசியவாத அலையைத் தாண்டி செயற்படும் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. அதன் செயற்பாடுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.

லண்டனில் மாற்றுக் கருத்துச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் உப்பாலி குரே. ஒரு சட்டத்தரணியான இவர் எப்போதும் அவருடைய அரசியல் விடயத்திறகாகவே அறியப்பட்டவர். அவருடைய அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மனிதநேயம் மிக்கவராக இருந்துள்ளார். அந்த மனித நேயப் பண்பே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை அவர் தேர்ந்தெடுக்க காரணமானது.

Upaly Coorayஇலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் வெற்றிக் கழிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அந்த வெற்றிக் கழிப்பை தோழர் உபாலி குரேயின் உறவுக்காரப் பையன் ஒருவரும் தனது பேஸ்புக்கில் (facebook) பதிவிட்டிருந்தார். அந்த வெற்றிக் கழிப்பை விமர்சித்து அந்தப் பையனின் பேஸ்புக்கில் உபாலி குரே தனது விமர்சனத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தானும் தனது இருபது நண்பர்களும் யுத்தம் பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டதாக அப்பையன் தோழர் உபாலி குரேக்கு தெரிவித்துள்ளார். இருபது அல்ல இருபது மில்லியன் இலங்கை மக்களுக்கும் இந்த யுத்தம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் உபாலி குரேயின் மரணம் சம்பவித்துள்ளது.

சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான உறவுகள் மிகக் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. இனங்களுக்கு இடையேயான நம்பிக்கையீனம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்த நம்பிக்கையீனத்திற்கு தூபமிடுகின்ற வகையில் இலங்கை அரசின் பேரினவாதப் போக்கும் அதற்கு எதிரான தமிழ் தேசியவாதத்தின் போக்கும் உள்ளது. இவற்றைக் கடந்து இன உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான முன்னோடிகள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் பலவீனமாகவே உள்ளனர். இவர்களைப் பலப்படுத்தி இன உறவுகளைக் வலுப்படுத்தி சகலவிதமான ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிறுவ முடியும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை இனங்களிடையேயான உறவும் புரிந்துணர்வும்.

அந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் தோழர் உபாலி குரே. இன்று இவர் போன்ற பல பாலங்கள் தமிழ் – சிங்கள மக்களை இணைக்க அவசியப்படுகின்ற போது அவர் எம்மைவிட்டுப் பிரிந்தது மிக மிக வேதனையானது. அவருடைய இறுதி நிகழ்வுகளில் இருந்து மற்றுமொரு இன உறவுப்பாலத்தை அமைப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.

மேலதிக வாசிப்பிற்கு : Upali Cooray: The Unrepentant Marxist : P Rajanayagam

._._._._._.

தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3ல்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்த தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3 வியாழக்கிழமை வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்வு மிகவும் குறுகிய நிகழ்வாக அமைய உள்ளது. தோழர் உபாலி குரெ இன் பூதவுடல் 12:30ற்கு சப்பலில் இருந்து புறப்பட்டு வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தை மதியம் ஒரு மணிக்கு முன்னதாக வந்தடைய உள்ளது.

இறுதி நிகழ்வுகளுக்கு மலர்களோ மலர் வளையங்களோ எடுத்து வர வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது யுனிசெப் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய அமைப்புகள் தங்கள் பொது நோக்கங்களுக்காக நிதி சேகரிக்க குடும்பத்தினர் தங்கள் ஆதரவை நல்கி உள்ளனர்.

Funeral Service & Cremation:
Thursday, 3 September 2009

West London Crematorium,
Harrow Road,
Kensal Green,
London W10 4RA.

The service will be brief (approx. 30 minutes). The hearse will leave the chapel at 12.30 pm and arrive at the crematorium before 1.00 pm.

Map (Crematorium) :
http://www.streetmap.co.uk/map.srf?x=523796&y=182518&z=0&sv=W10+4RA&st=2&pc=W10+4RA&mapp=map.srf&searchp=ids.srf

Parking is available at the Crematorium. The nearest underground station is Kensal Green.

வடபுல முஸ்லிம்களை வையகம் மறந்து விட்டதா? : யூசுப் கே. மரைக்கார்

Muslim_Expulsion._._._._._.
யூசப் கே கே மரைக்கார் மன்னாரைச் சேர்ந்தவர்.  தற்போதும் இலங்கையில் வாழும் இவர் இலங்கையின் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்தும் எழுதி வருபவர். இக்கட்டுரை தேசம்நெற் க்காக எழுதப்பட்டுள்ளது.
._._._._._.

ஒக்டோபர் 24 ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் தமது பூர்வீக தாயகத்தை விட்டு வெளியேறி 20 வருடங்கள் முடிவடைந்து விட்டன.

உள்நாட்டில் இடம்பெயர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, புவியதிர்வு போன்ற இயற்கை காரணங்களினாலும், இனக்கலவரம், மதக்கலவரம் போன்றவற்றாலும் மற்றும் அரசு அபிவிருத்தித் திட்டங்கள், உள்நாட்டு அல்லது சர்வதேச யுத்தம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம். வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு வகையான இனச் சுத்திகரிப்பு என்று கூடக் கூறலாம்.

உள்நாட்டு இடம் பெயர்வு பற்றி சர்வதேச சட்டத்தில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. சர்வதேச சட்டமானது தேசங்களின் வழமையான சட்டங்களையும் சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதற்கு முன்பிருந்த சர்வதேச ஒன்றியங்களினாலும் உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியது எனச் சுருக்கமாக கூறலாம்.

சர்வதேச சட்டங்களுள் மனித உரிமை சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் இணைந்து அகதிகள் பற்றியும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளன.

இவற்றை அடித்தளமாகக் கொண்டு பிரான்சில் டெங் என்ற ஐ.நா. சபையின் சட்ட நிபுணர் 1998 ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்தல் பற்றிய பொதுக் கோட்பாடுகளை (General Principles on Internal Displacement) உருவாக்கினார்.

இந்த கோட்பாடுகளை வோல்டர் கோலின், கோஹன், யாஷ்காய் போன்ற சட்ட வல்லுனர்கள் மேலும் மெருகூட்டினர். இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தனியான சட்டவாக்கங்கள் எதுவும் இல்லையென்றாலும் இலங்கை அரசியல் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் சரத்து முதல் 17 ஆம் சரத்து வரையிலான அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கும் பொருந்தும்.

இங்கே உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான சட்டப்படியான பாதுகாப்பு எனக் கருதுகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கோட்பாடுகளும் (GPIO) இலங்கையின் அரசியலமைப்புச் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தில் 10 முதல் 17ம் பிரிவு, கொசோவோ மற்றும் டேந்தன் உடன்படிக்கை ரீதியான விதிகளும் பொருந்தும். என்றாலும் ஐ. நா. சபையின் அல்லது சர்வதேச சட்டங்களின் ஏற்பாடு இலங்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதையிட்டு இன்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிக் குறிப்பிடுகையில் அகதிகளுக்கும் இவர்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முன்பு கூறப்பட்ட காரணங்களும் உயிருக்கு பயந்து ஒரு நாட்டின் சர்வதேச எல்லையைக் கடந்தவர்கள் அகதிகளாவர்.

அவ்வாறு வெளியேறாது உள்நாட்டிலேயே மறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆவர். இதனோடு இணைந்து பலவந்த வெளியேற்றம், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை, மீள்குடியேற்றம், மீளமர்வு, மீளிணைப்பு, பாரம்பரிய குடிநிலம், வழமையான வதிவிடம் போன்ற செயற்பாடுகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரமாம் ஆண்டு உலகில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டரைக் கோடியாகும். அதாவது உலக சனத்தொகையில் இருநூற்றில் ஒருவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆகவிருக்கின்றனர் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

இதில் இன்னுமொரு பிரதான காரணி என்னவெனில், இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மோரோ (Moro) முஸ்லிம்களும், மியன்மாரில் ரோஹில்லயா முஸ்லிங்களும், தாய்லாந்திலும், பங்களாதேசின் முன்னாள் யுத்த அகதிகளும், பாகிஸ்தானிலும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், துருக்கி, பொஸ்னியா, சோமாலியா, சூடான், எதியோப்பியா, உகண்டா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக சொல்லொனாத் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் பொதுவானவை தான். குறிப்பாக மனித உரிமை அல்லது அடிப்படை உரிமை மீறல் சம்பந்தமான குடியியல் அரசியல் சமூக பொருளாதார கலாசாரம் தொடர்பான பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

விசேடமாக உணவு, உடை, இருப்பிடம், நீர், சுத்தமான சுவாத்தியம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விருப்புடன் கூடிய மீள்குடியேற்றம், வரவேற்ற சமூகம் (Host Community) என்பவற்றைச் சார்ந்த சிக்கல்களுக்கு விடை காண வேண்டியுள்ளது. உலகின் உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளில் அசே, பொஸ்னியா உள்நாட்டு இடம்பெயர்ந்தோர்கள் தவிர்ந்த ஏனைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை சுமுகமான தீர்வு காணப்படவில்லை.

இலங்கையில் இப்போது ஐந்து இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக இருக்கும் நிலையில் இவர்களின் பிரச்சினை முற்று முழுதாய் தீர்க்கப்பட்டால் அந்தப் பெருமை அரசாங்கத்தையும் இது தொடர்பான அமைச்சரையுமே சாரும். இவ்வேளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத், வாகரையிலும் மூதூரிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களை மீள்குடியேற்றியுள்ளமை பெருமை தருவதாக அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதிவாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 72000 வடபுல முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்றுவரை மீள்குடியேற்றப் படாமலிருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.

மீள்குடியேற்றமானது உண்மையான விட்டுக்கொடுப்புடனும் ஒத்துழைப்புடனும் இடம்பெற வேண்டும். பொஸ்னியா, அசே போன்ற நாடுகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகள் இந்த முறையில் தான் தீர்க்கப்பட்டன. முக்கியமாக இனங்களுக்கிடையில் விட்டுக் கொடுப்பும் அரசாங்கத்தின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் சர்வதேச சமூகத்தின் இடையாறாத உதவியும் மிக அத்தியாவசியமான காரணிகளாகும்.

இரண்டே மணித்தியாலங்களுக்கும், சில இடங்களில் இரண்டு நாட்களிலும் தமது நிரந்தர வதிவிடத்தை விட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்களின் இழப்புகள் வடபுல உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் தமிழ்ச் சகோதரர்களது இழப்புக்களை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல.

இதனையிட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டவில்லை. மாறாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் வவுனியா வந்தபோதும் பல லட்சம் ரூபா பெறுமதியான உணவு, உடை, மருந்து என்பவற்றைக் கொடுத்துதவினர்.

மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் காட்டும் அக்கறையைப் பார்க்கையில் உண்மையில் நெஞ்சு நெகிழ்கின்றது. பல கோடி ரூபாக்களை இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களுக்காக கொடுத்துதவினர் என்பது வரவேற்கத்தக்க விடயம்.

உடனடியாக பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லி பிராண்ட்டும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னரும் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனும் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்த அள்ளி அடித்துக்கொண்டு இலங்கைக்கு ஓடி வந்தனர்.

இதற்கு சில தினங்களின் பின்பு பான்கிமூனின் உதவியாளர் லின் பாஸ்கோ இவ்வருட செப்டம்பர் 16 ஆம் திகதி வருகை தந்து மெனிக்பாம் முகாமுக்கு சென்று திரும்பினார்.

ஐ. நா. அகதிகள் தாபனத்தைச் சேர்ந்த அன்டோனியோ கட்டரேஸம் வந்தார். தமிழ் மக்களைப் பார்த்துவிட்டு இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கும் கவனிப்பதற்கும் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்றார். பாக்கிமூனின் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட பிரதிநிதி வால்டர் கேவின் என்பவரும் வந்து சென்றார்.

இவர்களது கண்களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் அவலநிலை படாமற் போனது ஏன்? இந்த முஸ்லிம்கள் அவர்களது பார்வையில் மனிதர்களாகத் தோன்றவில்லை போலிருக்கின்றது. இதேவேளை இந்தியா ரூ. 500 கோடிகளை இந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கியது.

இது போதாதென்று இன்றும் ரூ. 500 கோடிகளை இம்மாதம் ஒதுக்கியுள்ளது. இதேவேளை இந்தியா பலவந்தமாக விரட்டப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வடபுல முஸ்லிம்களுக்கு ஐநூறு ரூபா தானும் கடந்த இருபது வருட காலங்களில் ஒதுக்கவில்லை, கொடுக்கவில்லை என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமல்லவா?

உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி அதீத அக்கறை செலுத்திய அதேவேளை கடந்த 20 வருட காலமாக அல்லலூறும் இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தைதனும் பேசாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இவ்வாறே சர்வதேச மதஸ்தாபனங்களின் கண்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவ் வடபுல முஸ்லிம்கள் தென்படாதது ஏன் என்று புரியவில்லை. இந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையோ? என்னவோ?

வெளிநாடுகள்தான் இவ்வாறென்றால் உள்நாட்டில் கூட பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஓர் எல்லை இல்லை. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் எவ்வளவோ பேசுகின்றனர்.  ஆனால் வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தை தானும் இவர்கள் பேசாததன் காரணம் என்ன? ஒரு வேளை முற்றாக மறந்து விட்டார்கள் போலும். தேர்தல் வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமோ?

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது வாழாவிருந்தது தமிழ்நாடு. இதே தமிழ்நாடு முள்ளி வாய்க்காலிலும் புதுமாத்தளனிலும் மூன்று லட்சம் தமிழர்கள் விடுதலைப் புலிகளினால் மனித கேடயமாகத் தடுத்து வைத்த போது வாய்பொத்தி மெளனம் சாதித்தது.

தமிழக ஊடகங்களும் மேற்குலகும் இத்தமிழர்களை விடுவிக்கும்படி புலிகளை தட்டிக் கேட்கத் துணியவில்லை. துணிவுமில்லை. ஆனால் இன்று இலங்கை அரசாங்கம் அத்தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வைத்திருக்கும் போது மட்டும் கண்ணீர் விடுவதன் மர்மம் என்ன?

இன்று தமிழ் மக்களின் நலனில் திடீரென்று அக்கறை காட்டும் ஒருசில நாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்தினை வைத்துக் கொண்டுதான் புலிகள் இயக்கம் பஞ்சமா பாதகத்தை புரிந்தனர். தம்மை வளர்த்து வாழ்ந்துக் கொண்டு வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சீரழித்தனர். இதே புலிகள் இயக்கம் எப்போதாவது வடபுல முஸ்லிம்களை ஏற்று மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தினார்களா? இந்த சின்னத்தனத்தை எப்படி அழைக்கலாம்? மடைமையா? பாராபட்சமா? இனத்துவேசமா? அறியாமையா? அல்லது இரட்டை வேடமா? யூதர்களின் செல்வாக்குக்கு அடிபணியும் ஒரு சில நாடுகள் முஸ்லிம்களைக் கொன்றழிப்பதற்கும் முஸ்லிம் நாடுகளைத் திட்டமிட்டு அழிப்பதற்குப் பயங்காரவாதத்துக்கும் எதிரான போர் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் தான் இவை.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிங்களை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவர்களுக்கு விடிவு எப்போது? இறைவனுக்குத் தான் தெரியும்.

ஒரு மன நோயாளியை அடித்துக் கொல்லும் இலங்கைப் பொலீஸின் நிறுவனமயப்பட்ட துஸ்பிரயோகம் : ரி சோதிலிங்கம்

Bambalappitty_Police_Brutality மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. தாக்கியவர் இலங்கைப் பொலிசார் என்பதாலும் கொல்லப்பட்டவர் தமிழர் என்பதாலும் இது ஒரு இனவாத செயலாகவே தமிழர்களால் நோக்கப்படுகிறது. இலங்கையின் அரச இயந்திரங்களின் தொடரும் இனவாதப் போக்கு அவ்வாறான முடிவுக்கு தமிழ் மக்களைத் தள்ளியது தவிர்க்க முடியாதது. மேற்படி சம்பவம் தமிழன் என்பதற்காக நடத்தப்பட்டதோ இல்லையோ இவ்வாறான சம்பவங்களின் போது தமிழர்கள் பாதிக்கப்படும் இடத்து அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இதுவே இலங்கை அரசு மீது நம்பிக்கை கொள்வதற்கு காலம் காலமாக தடையாக இருந்து வந்துள்ளது.
 
இலங்கை அரச இயந்திரங்களின் இனவாதப் போக்கு காரணமாகவே தமிழர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் விளைவாகவே உள்நாட்டுப்போரும் உக்கிரமடைந்திருந்தது. இந்த உள்நாட்டுப்போரில் வெற்றியடைந்த அரசும் அதன் அரச இயந்திரங்களும் இனவாத தன்மையிலிருந்து தாம் விடுபட்டுள்ளதாகவும் தாம் இனவாத அரசு அல்ல என்ற கருத்துக்களை உலகெங்கும் பரப்பியும் உள்ளது. ஆனால் பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அரசு சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்ற நிலையையே காட்டுகின்றது.

தற்போதைய அரசும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஆட்சிக்கு வந்ததும் தமிழர்க்கு அரசியல்த் தீர்வு’ என்றனர். பின்னர் ‘புலிகளை அழிக்கும் போதே அரசியல்த் தீர்வு’ என்றனர். ‘புலிகளை அழித்த பின்பு அரசியல்த் தீர்வு’ என்றனர். இன்று ‘ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல்த் தீர்வு’ என்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆக மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ் மொழி, தமிழ் மக்கள் இவர்களது பிரச்சினைகளை தாம் அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. பொலீஸ் இராணுவ நிர்வாகத்தில் தமிழ் அமுலாக்கல்’ என்றெல்லாம் சொல்கின்ற போதிலும் ஒக்ரோபர் 29ல் சிவகுமார் என்ற மலையகத்தைச் சேர்ந்த மனநோயாளியான இளைஞனுக்கு நிகழ்ந்த கொடுமை மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதை இச்சம்பவம் அம்பலப்படுத்தி உள்ளது. இது இலங்கைப் பொலீசாரில் எவ்வித மாற்றங்களும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இன்பம், செல்வம் கொலை, தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலய காவலாளி கொலையிலிருந்து கதிர்காம யாத்திரிகர்கள் மாணிக்க கங்கையில் தீர்த்தமாடும் போது நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நிகழ்ந்த ஒரு மனநோயாளியான இளைஞனின் கொலை என்பவற்றிற்கு இலங்கை அரசும் அதன் பொலீஸ்படையுமே காரணமாகும். இந்தப் பொலீஸ்படை இன்று வரையில் தமது நடவடிக்கையில் மாற்றம் கொள்ளாதது மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியள்ளது.

நாட்டில் பொலீசார் தவறு செய்பவர்களையும் குற்றவாளிகளையும் அவர்கள்மீதுள்ள குற்றங்களை பதிவு செய்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டே தண்டனை அளிக்கபடல் வேண்டும். இதற்காகவும் இதன் காரணமாகவும் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணவுமே பொலீசார் இயங்குகின்றனர். ஆனால் இலங்கைப் பொலிசார் தங்களுக்குள்ள அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்கின்ற போக்கும் இனவாதத் தன்மையும் பொலிஸ்படையில் ஸ்தாபனமயப்பட்டு உள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடே பம்பலப்பிட்டிச் சம்பவம்.

Manikkagangai_Police_Brutalityகதிர்காமத் தீர்த்தத்தின் போதும் இது போன்றே பொலிசார் தமது இடுப்புப் பட்டியாலும் பொல்லுகளாலும் ‘பறத்தெமிழு’ என்று சொல்லியே ஆற்றில் குளித்தவர்களுக்கு அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொலிஸ் படையில் தமிழ் மக்கள் மட்டுமல் சிங்கள மக்களுமே நம்பிக்கை கொள்ள முடியாது. தென்பகுதிகளில் கூட பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கைகள் பற்றி சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொலீஸ் உத்தியோகத்தர்கள் நாளை தண்டனையாக வன்னிக்கு இடமாற்றம் பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள். இதுபோன்ற செயல்களை வெளிக்கொணர எந்த ஊடகமும் இல்லாத நிலையை எப்படிப் பயன்படுத்துவர் என்பதையும் அவதானிக்க வேண்டும்.

‘ரோகண விஜயவீர கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி சித்திராங்கனியையும் பிள்ளைகளையும் வாழ அனுமதித்த இலங்கை அரச படைகள் சரணடைந்த பிரபாகரனையும் போராளிகளையும் கொன்றதை ஒருபுறம் தள்ளினாலும் பிரபாகரனின் மனைவி மதிவதனியையும் சிறுவன் பாலகிருஸ்ணனையும் கொலை செய்தது இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே!!’ என்று அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் ஒக்ரோபர் 17ல் ராவய பத்திரிகையாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் எந்த வழியில் வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரச பயங்கரவாதமாக இருந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

._._._._._.

இளைஞன் கடலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்க பிரதியமைச்சர் சிகாமணி முடிவு

கொஸ்லாந்தையைச் சேர்ந்த இளைஞர் பம்பலப்பிட்டி கடற் பகுதியில் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வும் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி கூறினார். கொஸ்லாந்தையைப் பிறப்பிடமாகவும் இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் கடந்த 29ஆம் திகதி பம்பலப்பிட்டி கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

இவர், ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கும், ரயிலுக்கும் கல் எறிந்தார் என்ற குற்றத்துக்காக அவரைப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவர் மடக்கிப் பிடிக்க எத்தனித்துள்ளனர். அப்போது குறித்த இளைஞர் கடல் பகுதிக்கு ஓடிச்சென்றதுடன் மணலை அள்ளி அவர்கள் மீது எறிந்துள்ளார்.

அதன்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் சிலர் கடற்கரையில் கிடந்த இரண்டு தடிகளை எடுத்து பாதுகாப்புத் தரப்பினர் பக்கமாக வீசித் தாக்குமாறு கூறியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தத் தடிகளைப் பற்றிய பாதுகாப்புத் தரப்பினர் அந்த இளைஞனைத் துரத்தித் துரத்தித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

தாக்க வேண்டாமென அந்த இளைஞன் கும்பிட்டு மன்றாடியும் அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞன் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார். இவரது சடலம் கொள்ளுப்பிட்டி பகுதியில் மீட்கப்பட் டுள்ளது.

இந்தச் சம்பவமும் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்ட யுவதிகள் இருவரின் மர்ம மரணமும் மனிதாபிமானமற்ற படுகொலையாகத் தொடர்வதாகப் பிரதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மலையகத்திலிருந்து கொழும்புக்கு அல்லது பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக குடியேறுபவர்களின் பாதுகாப்பு அச்சமாகவே உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோ அல்லது இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதோ இன்றி, வெறும் பேச்சில் மட்டும் தம் செயலை காட்டாது மலையக தலைமைகள் சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற வேதனைதரும் சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனப் பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான சட்ட நடவடிக்கைகளை தாம் எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் உயர் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக தாம் பேசவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தீராத தலைவலி – நஜிமிலாஹி

221009eastern-provincial.jpgகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச  நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதனால் கிழக்கு மாகாணக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மாகாணசபை கவலையும் ஐயமும் அடைந்துள்ளது.

ஏனெனில்,  கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே கிழக்கில் காணிப்பிரச்சினை சூடாக விவாதிக்கப்பட்டு வந்ததை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்தவகையிலே இன்று வரையும் கிழக்கு மாகாண சபையில் நீட்சி கொண்டு செல்லும் பிரச்சினையாகவே காணிப்பிரச்சினை காணப்படுகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் காணிப்பகிர்வும்  முக்கியமான அதிகாரப் பகிர்வாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு அல்லது செயற்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் மாகாண சபைகளின் உருவாக்கம் பரீட்சிக்கப்பட வேண்டிய இடங்களுக்கு கடந்த காலங்களில் இந்த மாகாண சபை செயற்படுத்தவில்லை.

கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பிற்பாடுதான 13வது திருத்தச் சட்டத்தின் கேள்விகள் எழத் தொடங்கின. ஏனெனில் காயப்பட்ட இடத்துக்கு தற்போதுதான் மருந்துகொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாண சபை காயப்பட்டுள்ளது. அதற்கு மருந்து போடும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினரால் வடக்கு,  கிழக்கு மாகாண நோய்கள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பலமாக தென்படுகிறது. ஏனெனில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் கூடுதலான,  மேலதிகமான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி திடமாக தெரிவித்துள்ளார். எனவேதான் வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

ஆனால் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு இனவாத அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடுகளும் இல்லாமலில்லை. ஏனெனில் இனவாதக் கருத்துக்களை தாராளமாக வெளியிட்டு வருபவர்கள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றார்கள். இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்அரசியல் நகர்வுகளின் மூலம் இவர்களின் செல்வாக்கு பலமானதாக இருக்கமுடியாது என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக பலதுறைகளிலும் சிறந்து விளங்கிய LTTE இயக்கத்தினரின் இருப்பை இல்லாதொழித்தமையானது ஒரு சுலபமான காரியமாக பார்க்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் துறையினருக்கு விற்கப்படுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் சூடாக விவாதிக்கப்பட்டது. இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிப்பதாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கிழக்கு மாகாண சபை எல்லைக்குட்பட்ட மத்திய அரசாங்கத்தின் காணியை மாகாண சபைக்குத் தெரியாமல் பெறமுடியாது என்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டார். அதேபோன்று மத்திய அரசாங்கமானது மத்திய அரசாங்கத்துக்குரிய காணியை பெறுவதாயின் அது எந்த மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் சரி இந்த மாகாண சபையுடன் பேசித்தான் அதில் ஒரு பொதுவான உடன்பாட்டுக்க வரவேண்டும். இதில் குறிப்பாக திருகோணமலையிலும்,  அம்பாறையிலும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், மத்திய அரசாங்கத்துக்கு காணி தேவை எனும்போது DS. மூலமாகவோ,  GA மூலமாகவோ தங்களுடைய அதிகாரத்தைப் பாவித்து காணி சுவீகரிப்புத் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. “தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டம்” என்ற தலையங்கங்களுடன் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று கிழக்கு மாகாண சபையின் எதர்க்கட்சித் தலைவரான பஷீர் சேகுதாவூத் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற மொத்த தரிசு நிலங்கள் எத்தனை ஹெக்ரேயர் என்றும் அதில் இச்சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் எந்தெந்த காணிகள் எந்தெந்த இடத்தில் எக்கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக,  அதே விடயத்திலே இந்த காணி வழங்குவதற்குரிய ஒரு ஆலோசனையாவது காணியை வழங்கியவர்கள் இச்சபையிடம் கேட்டார்களா? அந்த விடயம் கிழக்கு மாகாண சபைக்குத் தெரியுமா?  அல்லது கிழக்கு மாகாண காணியமைச்சுக்கு தெரியுமா? சட்டத்திலே மாகாண காணி சம்பந்தமான விடயங்களை மத்திய அரசும், மாகாண அரசும் கலந்தாலோசித்து  செய்ய வேண்டும் என இருக்கிறது.  ஆனால் அந்தக் காணிக்குரிய தேசிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்றிருந்தும்கூட கடந்த 21 ஆண்டுகளாக “தேசிய ஆணைக்குழு” ஒன்று நியமிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலையிலே எங்களுக்கு இருக்கின்ற பிரதானமான பிரச்சினை காணிப்பிரச்சினை என்ற அடிப்படையிலே பலவிதமான சந்தேகங்கள் எம்மத்தியில் நிலவுகிறது. இச்சூழ்நிலையிலே யாருக்கும் தெரியாமல் கிழக்கு
மாகாணத்திலே இருக்கின்ற காணிகள் களவாடப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் கிழக்கு மாகாண மககளுக்கு ஏற்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டார்.

எனவே,  கிழக்கு மாகாண காணிகள் தனியார் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது சுவீகரிக்கப்பட்டுள்ளதா? போன்ற ஐயபாடுகளுக்கு முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் பதிலளிக்கும்போது கிழக்கு மாகாணத்தில் இருந்த காணிகள் ஒரு தனிநபருக்கு அல்லது கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்படுகின்றபோது அது சம்பந்தமாக அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் அமைச்சரவை மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட பின்னர்தான் அது அனுமதி அளிக்கப்படும். ஆனால் அந்த விடயங்கள் எங்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது  என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

இதேபோன்று சுற்றுலாத்துறையினதும் பிரச்சினை வந்திருக்கிறது. உதாரணமாக பாசிக்குடாவில் இருக்கின்ற 280 ஏக்கர் காணியிலும் அதில் கார் பாக்கிங் தவிர ஏனைய காணிகள் அனைத்துமே தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமாக இருந்த காணிகள் கூட அடையாளம் தெரியாமல் போயிருக்கிறது. இதை நாம் பாரதூரமான பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் என்ற வகையில் காணி சம்பந்தமான அமைச்சர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரும்போது  அந்தப் பதிலை வைத்துக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

அதேபோன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கு 15 000 ஏக்கர் காணியை மாகாண சபைக்கு தெரியாமலே அங்கீகாரம் கொடுக்கின்றவர்கள். இன்று அகதிகளாக மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களுக்கு 20 பேர்ச் காணியைக் கொடுப்பதற்குக் கூட அதிகாரமளிப்பதற்கு மறுக்கின்றார்கள். காலங்காலமாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களது இடங்கள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய காணிகளை 20 பேர்ச்சுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலைமை. கிழக்கு மாகாண சபை ஏன் உருவாக்கப்பட்டது? எந்த மக்களை திருப்திப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கும்போது அதில் பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதேபோன்று ஏனைய மாகாண சபைகளில் இருக்கின்ற உரிமை கூட எங்கள் மாகாணத்தில் இல்லாதது மிகவும் வேதனையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றரை வருடம் தாண்டியும் எங்களது அதிகாரப் பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்புக்களை செய்துகொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேற்படி முதலமைச்சரின் கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைக்கு சுதந்திரமில்லை என்பதையே  காட்டுகிறது. எனவே தமது மாகாணத்திற்குரிய அதிகாரங்களைப் போராடிப் பெறவேண்டிய தேவை இன்று கிழக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஆப்கன் ஜனாதிபதியாக மீண்டும் கர்ஸாய் வெற்றி

031109karzai.pngஆப்கானிஸ் தானின் ஜனாதிபதியாக இரண்டாம் முறையாக ஹமீது கர்ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர் திங்கள்கிழமை முறைப்படி அறிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஹமீது கர்ஸாய் பெரும்பான்மை வாக்குகள் பெற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவானதாகவும் தேர்தலில் தில்லு முல்லு செய்தே கர்ஸாய் வெற்றி பெற்றதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் அப்துல்லா அப்துல்லா குற்றஞ்சாட்டினார்;.

இதையடுத்து,  ஐநா தலையிட்டு அந்த தேர்தலை ரத்து செய்து அடுத்த கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. அதில் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவர் மட்டுமே போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் தில்லு முல்லு நடக்கும், வாக்குப்பதிவு நேர்மையாக நடக்காது என்று குற்றம்சாட்டி போட்டியிலிருந்து விலகினார் அப்துல்லா.

கர்ஸாய் மட்டுமே களத்தில் இருந்தார். இதனால், இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ஸாயை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, அதிபர் தேர்தலில் கர்ஸாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்; அஜிஸல்லா லூதின் அறிவிப்பு வெளியிட்டார்

அதிரடி ஆடுகளங்கள் தேவையென்கிறது ஐ.சி.சி

icc-logo.jpgஒருநாள் மற்றும் “டுவென்டி -20” போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20” தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களே எடுக்கப்பட்டன. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் மாற்றம் செய்ய ஐ.சி.சி. முன்வந்துள்ளது. இதையடுத்து ஐ.சி.சி, அதன் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) சீனியர் அதிகாரி வாசிம் பாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:-

ஒருநாள் “டுவென்டி-20” போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யவேண்டும் என ஐ.சி.சி, எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. நாங்கள் அவர்கள் ஆலோசனைப்படி நடப்போம் இதற்கு முன்பாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கு உதவும் வகையிலான ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம் என்றார்.

புலமைப் பரிசில் பரீட்சை – வவுனியா நிவாரண கிராமங்களில் 507 மாணவர்கள் சித்தி : புன்னியாமீன்

000181009.jpgதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. எமது வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது 300 மாணவர்கள் சித்தியடைந்தால் போதுமென்ற இலக்கில் தான் நாம் ஆரம்பித்தோம். நாம் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

2009 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 2009 ஒக்டோபர் 02ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி மூலம் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி பின்வருமாறு அமைந்திருந்தது. கொழும்பு / கம்பஹா / களுத்துறை / கண்டி / மாத்தளை/ காலி/ மாத்தறை/ குருணாகல்/ கேகாலை மாவட்டம் 141 புள்ளிகள். நுவரெலியா 137 வவுனியா – 136,  அம்பாறை 139, திருகோணமலை – 138,  புத்தளம் 137, அநுராதபுரம்138, பொலன்னறுவை 140,  பதுளை 138, மொனராகலை 135, மன்னார் 139 இரத்தினபுரி 134, மட்டக்களப்பு 139

வன்னி நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டிருந்தமையினாலும் 6 மாதங்களுக்கு மேல் கல்வியை தொடராமல் இருந்தமையினாலும்,  பரீட்சை நடைபெறவிருந்த காலகட்டத்தில்கூட நிவாரணக் கிராமங்களினுள் வெள்ளப் பாதிப்புக்குட் பட்டிருந்தமையினாலும் நிவாரணக் கிராமங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே பரீட்சைத் திணைக்களம் நிவாரணக் கிராமங்களில் வசித்த மாணவர்களின் வெட்டுப்புள்ளியை 111ஆகக் குறைத்தது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இங்கு மன்னார்,  வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,  இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.

இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

5413 மாணவர்களது பெறுபேறுகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் பெருந் தொகையானோர் யாழ்ப்பாணம்,  மன்னார், திருமலை,  மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென அனுப்பப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன் சென்றுள்ள பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களது சொந்த மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களூடாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழ்மொழி மூலமாக யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்தார். இந்த மாணவனும் சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருகுணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

சாதாரண நிலையில் போட்டிப் பரீட்சையான புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களின் நிலையைவிட வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நிலை மிகமிக பரிதாபகரமானது. பல்வேறுபட்ட மானசீகப் பிரச்சினைகள் மத்தியிலும் போதிய கல்வி போதனைகள் இன்றிய நிலையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயமே.

இம்மாணவர்கள் அனைவருக்கும் தேசம்நெற்,  சிந்தனைவட்டம் இவற்றின் நிர்வாகத்தினரும் தேசம்நெற் வாசகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றனர். அதேநேரம்,  பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் இம்மாணவர்களை வழிநடாத்திய நிவாரணக்கிராம ஆசிரியப் பெருந்தகைகள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா? : ரி சோதிலிங்கம்

வன்னி முகாம்களில் உள்ள மக்களுடன் நாம் தொடர்ச்சியாக உரையாடி வருவதையும் எம்மால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருவதையும் தேசம்நெற் வாசகர்கள் அறிந்திருப்பீரகள். அவர்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும் போது நாம் வழங்கிய உதவிகள் மிகச் சொற்பம். இந்த உதவிகள் அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதிலும் எமது குற்ற உணர்வுகளை குறைத்துக் கொள்ள உதவியது. நாம் தொடர்ச்சியாக உரையாடும் போதுதான் புலம்பெயர்ந்த மக்கள் எவ்வளவுதூரம் வன்னி முகாம் மக்களில் இருந்து அன்னியப்பட்டு உள்ளார்கள் என்பதை உணர முடிந்தது. அந்த மக்களிடம் உள்ள அரசியல் தெளிவும் இராஜதந்திரமும் எந்தப் புத்தகத்தை படித்தாலும் கிடைக்காது. அதனால்தான் மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று புரட்சியை முன்னெடுத்த கம்யூனிசத் தலைவர்கள் கூறி வைத்தனர்.

ஆனால் அங்கு புலிகள் மக்களை மந்தைகளாகவும் மண்மூட்டைகளாகவும் பயன்படுத்தினர். இங்கு புலத்தில் புலி ஆதரவாளர்கள் புலிகளைக் காப்பாற்ற வன்னி மக்களை பிளக்மெயில் செய்தனர். கம்யூனிசத்தை பின்பற்றுவதாகவும் புரட்சியை முன்னெடுப்பதாகவும் வாய்ச்சவடால் மட்டும் விட்டவர்கள், வன்னி மக்களை அரசின் கைகளில் முற்றாகத் தள்ளிவிட்டனர். புலிகள் மக்களைப் பலிகொடுத்து இலங்கையரசை அம்பலப்படுத்த முயன்றனர். புலம்பெயர்ந்த இந்த வாய்ச்சவடால் புரட்சியாளர்கள் வன்னி முகாம் மக்களை அவலத்திற்குள் விட்டுவைத்தால் இலங்கையரசை அம்பலப்படுத்தலாம் என்றனர். இலங்கையரசை அம்பலப்படுத்த முன்னையவர்கள் மக்களைப் பலிகொடுக்கலாம் என்றனர். பின்னையவர்கள் அவ்வளவு மோசமில்லை வன்னிமுகாம் மக்களை அவலத்திற்குள்ளளேயே வைத்திருக்கலாம் என்றனர்.

நாங்கள் உரையாடியவரை வன்னி மக்கள் இலங்கையரசு பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் மிகத் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் இலங்கையரசு தமிழ் மக்களுடைய அரசு இல்லை என்ற உணர்வையே கொண்டுள்ளனர். அயல் வீட்டுக்காரன் பாதிக்கப்பட்ட தம்மையும் பிள்ளைகளையும் பராமரிப்பதாகவே மக்கள் உணருகின்றனர். தாங்கள் அடைக்கலம் பெற்ற இடத்தில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என உணர்கின்றனர். கிடைப்பதைப் பெற்று தங்களை ஸ்தீரப்படுத்தி தங்கள் காலில் நிற்க முயற்சிக்கின்றனர்.

தங்கள் காலில் உறுதியாக நின்று பலம்பெற்று தங்களை ஸ்தீரப்படுத்திய பின் அவர்கள் தாம் அயல்வீட்டாருடன் சேர்ந்து வாழ முடியுமா அல்லது தனித்து வாழ்வதா என்ற முடிவை எடுப்பார்கள். ஆபத்து என்று வந்தால் அவசரத்திற்கு ஓடிவருபவன் அயல்வீட்டான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள புலத்து தமிழர்கள் ஆபத்திற்கு வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளும் அந்த மக்களில் இருந்து அன்னியப்பட்டுவிட்டது. இவர்கள் ஒப்புக்கு மாரடிப்பவர்களாகி விட்டனர்.

கடைசியாக வன்னி வெள்ளை முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற யுத்தத்தின்போது புலிகளின் பக்கத்தே இருந்த பலர் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள் என்ற ஒரு கணிப்பு இருந்தது. அதுமட்டுமல்ல இவர்கள் மாவீரர் குடும்பங்கள் என்றபடியால் அவர்கள் அந்த வன்னிப் பிரதேசத்தையும் புலிகளையும் விட்டு வெளியேற முடியாமல் இருப்பவர்கள் என்றும் இவர்களில் பலர் புலிகளுடன் முக்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்ற கணிப்பும் இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இது உண்மையல்ல என்பதும் சாதாரண மக்களையே பலிக்காளாக்கினர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த கிளிநொச்சிக்கு இராணுவம் வந்தபோதே அப்போதிருந்து மக்கள் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்களினிடையேயும் புலிகளின் கட்டுப்பாட்டை மீறியும் பலர் ஓடித்தப்பியுள்ளனர்.

இறுதிக் காலத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் தமது அழிவுக்காலத்தின் போது மக்களை வலுக்கட்டாயமாக, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்ற தேசவிடுதலை கோசத்தில் இழுத்துப் போயிருந்த அந்த பிள்ளைகளின் தாய் தந்தையர் உறவுகளே. பலர் இந்த யுத்தத்தின் அந்திம காலத்தில் தாமும் இறந்துள்ளனர்.

இவர்களில் பலர் தமது குழந்தைகளை என்றுமே போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அல்லர். அல்லது புலிகளின் போர்களுக்கிடையே என்றும் எந்தவித நேரடி ஈடுபாடுகளும் இல்லாமல் இருந்தவர்கள். தமது குழந்தைகளை புலிகள் பறித்துப் போனபோது தமது குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்ற துடிப்பே இந்த பெற்றோர்கள் தமது மற்றய குழந்தைகளையும் தம்மோடு வைத்திருந்து இறந்து போயுள்ளனர். அல்லது அவர்கள் இறந்து போக குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.

பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீளப் பெறும் முயற்ச்சிகள் சரிவராது என அறிந்தபோது தாம் தப்பியுள்ளனர். சிலர் பாதிக் குடும்பத்தை அனுப்பிவிட்டு பாதி தமது குழந்தைகளை மீட்டு எடுத்துப்போக இருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் தமது சகோதரங்களை மீட்டு எடுத்துப்போக, இந்த களத்தில் தமது உடன் பிறந்த சகோரதங்களை இந்த நிலையில் விட்டுவிட்டுப்போக முடியாமல் தவித்தனர். இதன்போது தமது உயிர்களையும் இழந்தனர். இந்த உறவுகள் புலத்தில் உள்ள உறவுகள் போன்று ஒப்புக்கு மாரடிக்கவில்லை. வாடகைக்கு உணர்ச்சி வசப்படவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து தம் உறவுகளை அழைத்துச் செல்ல தவிப்புடன் நின்றன. அவர்கள் வன்னிமண் பூர்வீகமண் என்ற புலத்து தமிழர்களின் அர்த்தமற்ற கோசங்களுக்காக செல் மழை பொழிந்த யுத்தப் பிரதேசத்தில் நிற்கவில்லை. மரணத்தின் எண்ணிக்கையை வைத்து அரசை அம்பலப்படுத்தும் மூன்றாம்தர அரசியலுக்காக அந்த மக்கள் மரணிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அதற்கு புலத்தில் உள்ள புலி ஆதரவுத் தலைமைக்கு முழுமையான பொறுப்புண்டு.

புலிகளில் பெரும்பான்மையானவர்கள் தமது கட்டுப்பாட்டை மீறி தப்பிப் போகும் மக்களை கொலை செய்துள்ளனர். வே பிரபாகரனின் மகன் சார்ஸ்ள்ஸ் அன்ரனியும் அவருடைய இன்னுமொரு தளபதியும் மிக மோசமான முறையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வன்னி முகாமில் உள்ளவர்களுடன் உரையாடியதில் தெரியவருகின்றது. ‘எங்களை விட்டுவிட்டு நீங்கள் தப்பிச் செல்வதா’ என்ற உணர்வில் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். கடைசி நேரத்திலும் தமது இயக்கத்திலிருந்து தப்பிப் போனவர்களையும் தமது கட்டுப்பாடுகளை முன்பு (சில காலங்களுக்கு முன்னர்) மீறியவர்கள் இந்த வன்மையான போர் காலத்தின்போதும் சுட்டு கொன்று தமது பழிவாங்கல்களையும் செய்துள்ளனர்.

வன்னி மக்கள் இலங்கை இராணுவத்திடம் மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இலங்கை இராணுவம் தம்மை அழிக்க முற்படுகின்ற ஒரு இராணுவமாகவே பார்த்தனர். ஆனால் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் தங்களைப் பணயம் வைத்து தங்கள் மரணத்தின் மீது அரசியலை நடத்த முற்பட்டபோது மக்கள் எதிரியின் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

புலிகளின் பல மாவீரர் குடும்பங்களும் புலிகளின் பல முக்கிய ஆதரவாளர்களும் ஏற்கனவே இந்த யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர். பலர் படகுகள் மூலம் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சிய முக்கிய தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் சில முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர்.

முகாம்களை விட்டு வெளியேறிய பலர் தமது உறவினர்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் புதிய ரென்டுகளும் பந்திகள் போட்டும் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு வாடகை கொடுக்க பணம் கிடையாது. அடிப்படை உடுப்புக்கள வாங்க பணம் கிடையாது. வன்னிக்குள்ளே போனால் என்ன நடக்குமோ என்ற மனப்பயம் நிறைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தாம் தப்பி ஓடும்போது தம்மை துரோகிகள் என்று பட்டமளித்த ஜபிசி போன்ற ரேடியோக்கள் தொலைக்காட்சிகள் பற்றி அறியாதவர்கள் தலைவரைக் காப்பாற்ற போராட்டம் செய்தவர்கள் போருக்கு பண உதவி செய்தவர்கள் இன்று எங்கு போயினர் என்று அங்கலாய்த்துள்ளனர். புலிகள் அழிந்ததும் போராட்டம் முடிஞ்சுதாமோ?? என்று கேட்கின்றனர். ‘நாம் யார்? இந்தப் போராட்டம் யாருக்காக நடாத்தினார்களாம்? எங்கே இவர்கள்?’ என்ற ஏக்கம். இவர்கள் தங்களுக்காகவா மக்களுக்காகவா இவ்வளவு காலமும் இயங்கினார்கள் என்று ஏமாற்றமடைந்தவர்களாக உள்ளனர்.

தமக்காக ஒருவேளை என்றாலும் உணவு கொண்டுவந்து சேர்த்த சிங்கள மக்கள் பெளத்த துறவிகள் முஸ்லீம்கள் பற்றி நன்றியுடன் பேசுகிறார்கள் ஆனால் வன்னி மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இன்றி அந்த மக்களின் பெயரில் அரசியல் நடத்துபவர்களை அந்த மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்களா என்பது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல. மீண்டும் மீண்டும் அந்த மக்கள் இனவாத அரசு நோக்கியும் அதன் கைகளிலுமே விடப்பட்டுள்ளனர். அந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமே எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற வகையிலேயே புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

வன்னி மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் பங்கெடுக்காமல் அவர்களை புரட்சிக்கான தமிழீழத்திற்கான கூலிப்படையாகப் பயன்படுத்தும் புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா?

பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்: உலக சிக்கன தினம் (Word Thrift Day) – புன்னியாமீன்

0000lmages.jpg“சிக்கனமும்,  சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924 இல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் ‘உலக சிக்கன தினம்” என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும்,  இத்தினத்தில் சேமிப்பு,  சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு  விளக்குகின்றார்.  “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே,  இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார்.   “செய்க பொருளை” என்று (குறள் 759).

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றனர் ஆன்றோர். இந்தக் கூத்து பொருள் தேடுவதற்காக அவசியத்தை உணர்த்துகின்றது. இருப்பினும் சிலர் கூறுவார்கள் “சம்பாதிக்கிறேன் ஆனால் வரும் வருவாயோ மிகக் குறைவு. வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.” இதற்கு வள்ளுவர் பின்வருமாறு  பதில் கூறுகிறார்.”ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை” (குறள் 478). வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை. அதாவது வருவாய்க்குள் செலவு செய்பவனுக்குத் தீங்கு இல்லை, கவலைகள் இல்லை. எனவே மேற்படி கருத்துகளில் இருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக் கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். 

இந்தப் பழக்கம் சிக்கனத்தையும்,  அதே நேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின்றது.மனிதன் தனது வருமானத்தின் ஒரு பகுதியை நுகர்வுக்கும் இருபகுதிகளை முதலீடுகளுக்கும். எஞ்சும் பகுதியை திடீர் அவசரத் தேவைகளுக்குமாக சேமிக்க வேண்டுமென கெளதம புத்தர் உபதேசித்துள்ளார். சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பின் மூலம் சுபீட்சம் பெறலாமெனும் சிந்தனை புராதன காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது.

ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசத்தைக் காயவைத்தும்,  தேனில் ஊறவைத்தும் தேவைக்கேற்ப நுகர்ந்தான். விவசாய யுகத்தில் ‘நெற் குதிர்’களை அமைத்து சிக்கன முறையால் நெல்லைச் சேகரித்து வைத்தான். பின்பு விவசாயத்திற்காக நீரைச் சேமிக்கவும் பழகினான். ‘வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் கடலில் பாயவிடாது பயன்படுத்தவேண்டும்’ என மன்னன் பராக்கிரமபாகு கூறினான்.

கி.பி. நாலாம் நூற்றாண்டில் (கி.பி 303-331) ஆட்சிபுரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ன மன்னனால் பொறிக்கப்பட்ட தோனிக்கல் சிலாசனத்தில் பயறு, உளுந்து, சாமை, இறுங்கு போன்ற தானியங்கள் சேமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தோமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடு,  பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில்,  சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. தோமஸ் ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.

‘சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே,  இந்த முறையிலே அந்தச் சிக்கனம்,  சிந்தனை,  சிறந்த பண்பு,  சீர்த்திருத்தமுடன் வாழ்வு,  துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா?  போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும்,  சீர்திருத்தம் பரவ முடியும்,  சிக்கனம் நிலைக்க முடியும்,  நலம் பெற முடியும். எனவே,  அந்த முறையிலே சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால்இ அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்”, என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள். இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம். (1) கஞ்சத்தனம்,  (2) சிக்கனம்,  (3) ஆடம்பரம் (4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது குறித்த மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும்,  சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ,  தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும்,  மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும,   சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது,  அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக,  வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கின்றோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி,  கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு,  மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில்,  ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார்,  “சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன்,  முதல் தர அறையை எடுத்திருக்கிறார்,  தாங்கள் ஏன்…?” உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரும்.

ஆடம்பரம்,  ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி வி;டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். பொதுவாக நாட்டார் வழக்கில் விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். ஆடம்பரம்,  ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட் அட்டை (CREDIT CARD) முறை  புழக்கத்திற்கு வந்துவிட்டது. சில கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது வரையறையில்லாமல் பயன்படுத்துவதையும் இதனால் பின்பு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். பணத்தைப் பணமாக வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்குவம் சிலருக்கு கிரடிட் அட்டைகளை பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை. இந்த கிரடிட் அட்டைகள் பாவனையிலுள்ள எல்லா வெளிநாடுகளிலும் CREDIT CARD HISTORY என்று சொல்லப்படும்  அட்டையைப் பயன்படுத்திய பின் உரிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தி இருக்கிறார்களா என்ற கடன் வரலாற்றைப் பார்க்கிறார்கள். இந்த  அட்டைகளுக்கான பணத்தைத் தருவதில் தாமதம் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அட்டை செல்லா அட்டைகளாக ஆகிவிடும். ஆகவே பொருள்களை இப்படி வாங்குபவர்கள் பலமுறை யோசனை செய்து அவற்றை வாங்குவதோடு,  பணம் திருப்பித் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால் நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத் தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி,  தேவைக்கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம். இதை மீறி கடனுக்கு நாம் பழகிவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி நேரிடும்.

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்;:- “NEITHER A BORROWER NOR A LENDER BE; FOR LOAN OF IT LOSES BOTH ITSELF AND FRIEND; IT ALSO DULLS THE EDGE OF HUSBANDRY”  கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அத்தோடு குடி வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு,  சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும்,  சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை,  சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி,  பாதுகாப்பு,  ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம்,  பாதுகாப்பு,  சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன.

தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும்,  பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி,  குடும்ப மட்டத்திலும் சரி,  தேசிய மட்டத்திலும் சரி,  சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.

பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பார், 1611ல் முதன் முதலாக சேமிப்பு பற்றிய எண்ணக் கருக்களைக் கொண்ட ஒரு கருத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்துள்ளார். சேமிப்பு வங்கியென ஏற்றுக்கொள்ளத்தக்க முதலாவது வங்கி 1778ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1810ல் ஸ்கொட்லாந்தவரான ஹென்றிடிக்கள் சேமிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபித்தார். சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இந்நிறுவனத்தை அவர் நிறுவினார். நாளடைவில் உலகளாவிய ரீதியில் சேமிப்பு வங்கிகள் கணிசமானளவு நிறுவப்பட்டுச் செயற்படலாயின.

பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியமென உணரப்பட்டது. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. இலங்கையில் சேமிப்பு வங்கிகளை நிறுவிய முன்னோடியாக ஆளுநர் சேர். ரொபர்ட் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் கருதப்படுகின்றனர். 1832. 08.06 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி, இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியாகும்.  இவ்வங்கி கொழும்பு நகரில் உயர்மட்டப் பிரமுகர்களையும் சில வர்த்தகர்களையும் கொண்டமைந்தது. சேமிப்புக் கணக்குகள் தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டன. வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே இவ்வங்கி இயங்கியது. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் வங்கியின் வளர்ச்சி குன்றியே காணப்பட்டது. ஒரேயொரு கிளை மட்டுமே செயற்பட்டது. வைப்புக்கள் கச்சேரி மூலம் ஏற்கப்பட்டன. சேர் பொன். இராமநாதன் 1885. 04.16ல் அஞ்சல் நிருவாகத்தினுள் அஞ்சலக சேமிப்பு வங்கியை அறிமுகஞ் செய்தார். 1938 செப்ரம்பரில் அஞ்சல் தலைமை அதிபரின் கீழ் சேமிப்புப் பத்திர நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. 1942ல் இம்முறை விஸ்தரிக்கப்பட்டு இரண்டாம் உலக மகாயுத்தத்துடன் இலங்கை யுத்த சேமிப்பு இயக்கமெனும் ஒரு அமைப்பு உதயமானது.

மறைந்த நிதியமைச்சர் யூ.பி. வன்னிய நாயக்காவினால் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவொன்று 1969.08.31ல் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டதெனினும் மறைந்த கலாநிதி என். எம். பெரேரா கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971ம் ஆண்டின் 3ம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கமைய இலங்கை சேமிப்பு வங்கி சேமிப்புச் சான்றிதழ் நிதியம் தபாலக சேமிப்பு என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.03.16ம் திகதி முதல் தேசிய சேமிப்பு வங்கி அமைக்கப்பட்டன. பாடசாலைப் பிள்ளைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக பாடசாலை வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய வர்த்தக வங்கிகளிலும் சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியில் எமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு நாம் எமது உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்கும் வழிவகைகளைத் தேடவேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்குத் தேவையான முதலீட்டில் ஒரு பகுதியையேனும் சேமிப்புக்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்தக்காலில் நிற்பதற்கு (Self Relaince) எமது சிக்கன நடத்தைகளும் சேமிப்பும் எவ்வளவு துணைபுரியும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டுச் சிக்கனமும்,  சேமிப்புமே நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு கவர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிக்கனம் சேமிப்பு எனும்போது நவீன உலகில் பரந்துபட்ட ரீதியில் சிந்திக்கையில் பணச் சேமிப்பு என்பதைவிட அதன் பொருள் மேலும் பலதாக பிரிந்து செல்வதை அவதானிக்கலாம். உதாரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனம் சில பிரதேசங்களில் நீர் சிக்கனம் சில பிரதேசங்களில் உணவுப் பொருட்கள் சேமிப்பு என பலதுறைகளுடனும் தொடர்புபடுகின்றது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சில எளிய வழிமுறைகளைக் கொண்ட சி.டி.க்களை பள்ளிகளுக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு விநியோகித்து வருகிறதாகவும்,  சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு தண்ணீர் விழிப்புணர்வு மற்றும் சிக்கனம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் வல்லுநர்கள்,  உளவியல் நிபுணர்கள்,  பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் சிக்கனம் குறித்த கல்விப் பாடங்கள் அடங்கிய சி.டி.க்களை அவை. 
   
தற்போதைய பொருளாதார சமூக சூழலில் எரிபொருள் சிக்கனம் என்பது சமூக தன்மை வாய்ந்த மிக முக்கிய பிரச்சினையாகும். எரிபொருள் சிக்கனம் நன்றாக கையாளப்பட்டால் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. கட்டுப்பாட்டான எரிபொருள் அளவை முழுமையாக பயன்படுத்தினால் அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை தரும். முழு சமூகத்திலும் எரிபொருள் சிக்கனத்தை முன்னேற்றி அதன் பயன்பாட்டு பயனை உயர்த்தும் வகையில் சீன அரசு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் எரிபொருள் சிக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தூரநோக்குத் திட்டத்திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். எரிபொருள் சிக்கனம் சீனாவின் அடிப்படை கொள்கையாக கருதப்பட்டுள்ளது. அதே நேரம் 2010ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் எரிபொருள் செலவினை 20 வீதத்தால் குறைப்பதென்ற குறிக்கோளை சீன அரசு முன்வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இன்று பேணப்படுகின்றது. அத்துடன்,  இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. எதிர்கால சந்ததிக்கான தற்போதைய சேமிப்பு நடவடிக்கைகளாக இவைகள் கருதப்படுகின்றன.

இவ்வாறாக நாட்டுக்கு நாடு பல்வேறுபட்ட வகைகளில் பல்வேறுபட்ட கோணங்களில் சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. இது மட்டுமன்றி சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும்,  சிக்கனத்தையும் புகட்டக்கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் தேசிய பொருளாதார நெருக்கடிகள் அந்த நெருக்கடிகள் சேமிப்பினதும்,  சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லாமல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக!