கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு 40 மெற்றிக்தொன் உணவு பொருட்கள்

ship-10022009.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடல்வழி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதற்கட்டமாக 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேற்று  கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில், முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (நேற்று) ஜனாதிபதி செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

எனது பங்குபற்றலுடன், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரத்ன, பாதுகாப்புப் படைப் பிரிவின் உயர் அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவில் புலிகளால் நிலக் கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு தரைமார்க்கமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு கடந்த ஓரிரு வாரங்களாக தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்திற் கொண்டு தரைவழியாக அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்க முடியாமல் போனது. இதனைத் தவிர உணவுத் தட்டுப்பாடுகளோ வேறு சிக்கல்களோ எமக்கு இருக்கவில்லை.

இந் நிலையில் சில ஊடகங்கள் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக தவறான பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களாகும். முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களும் எமது நாட்டு பிரஜைகளே. அவர்கள் எமது தமிழ் சகோதரர்கள். புலிகளின் செயற்பாடுகளால் எந்த தடைகள் வருகின்றபோதிலும் அந்த மக்களுக்கு கடல் வழியாகச் சரி அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் தகவல்களுக்கும், வேண்டுகோளுக்கும் அமைய ஆயிரத்து எண்ணூற்றியொரு (1,801) மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மக்களுக்கென அரசாங்கம் தரைவழியாக அனுப்பி வைத்துள்ளது.

இந் நிலையில் கப்பல் மூலம் கடல் வழியாக முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப தீர்மானித்தமை இதுவே முதற் தடவையாகும். இன்று இரவு 8 மணியளவில் இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி புறப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க இங்கு உடன்பட்டனர்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பார். அவர் இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க, கூட்டுறவு அமைப்புக்கள், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பார். முதற் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களில் அரிசி, சீனி, பருப்பு, பால் மற்றும் குழந்தைகளுக்கான பால் மா போன்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தவிர இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் சுகாதார நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பதற்கும் விரிவாக ஆராயப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்தக் கப்பல் திரும்பும் போது காயமடைந்த அப்பாவி தமிழ் மக்களையும் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் ஆலோசகர் ஏ. சி. எம். ராசிக் உட்பட முக்கியஸ்தர்களுக்கு கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்தோருக்கு முதற்தடவையாக தனியார் நிவாரண உதவி

lorry__food.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்களுக்கு முதற்தடவையாக தனியார் துறையினர்; நிவாரண உதவி  வழங்கியுள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் எட்டு லொறிகள் மூலம் நேற்று முற்பகல் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இப்பொருட்களை இலங்கை மத்திய வங்கி தலைமையில் பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணியளவில் ராஜகிரியாவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றதுடன் அதில் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன். ஜனாதிபதி விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சப்ரகமுவா மாகாணசபை முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய வங்கி ஆளுனர் பொருட்களைக் கையளித்ததுடன் அமைச்சர் பதியுதீன் மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் அவற்றை அரசாங்கம் சார்பாக பொறுப்பேற்றனர்.

மத்திய வங்கியின் தலைமையில் யுணி லீவர்ஸ் நிறுவனம், மஞ்சி பிஸ்கட் நிறுவனம், ஆர்.ஆர்.ஆர். அன்ட் எஸ் நிறுவனம் பசினேட் எக்ஸ்போர்ட் நிறுவனம், டிப் லங்கா நிறுவனம்,  ஐ.டி.எல். லங்கா நிறுவனம் ஆகியன இப்பொருட்களை வழங்கியுள்ளன. வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக இப்போருட்கள் இடம்பெயர்ந்தோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இலங்கைப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல இந்திய அரசுக்கு பா.ம.க. இருநாள் கால அவகாசம்

drramadoss.jpgஇலங்கை விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருநாள் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அரசின் பங்காளிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த நேற்று புதுடில்லிக்கு பயணமாகவிருப்பதாக பா.ம.க.வின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ராமதாசை சந்தித்து இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் டி.சுதர்சனம் கூறியதாவது;

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம். பா.ம.க.வை பொறுத்தவரை மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இன்னும் உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.தொடர்ந்து நீடிப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பாடுபட்டு இருக்கிறார்கள். எனவே காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கு வரும் தேர்தலில் மக்களிடம் இருக்காது என்றே நம்புகிறேன் என்றார் சுதர்சனம். அதன் பிறகு ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் என்னை வந்து சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இதற்காக கண்டனக் குரல் எழுப்பி வருவதுடன் இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

தமிழின அழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரை ஆறுதலாக அமைந்துள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதாது, போரை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு இந்தியா கட்டளையிட வேண்டும். அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு செல்லவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதனை இரண்டே நாட்களில் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா.மன்றத்திற்கு மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இந்த பிரச்சினையை கொண்டு சென்று இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் இந்தியா சொன்னால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். புலிகள் தரப்பில் போரை நிறுத்த தயாராக இருப்பதாக அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.  ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து விட்டு ஒரு போராளி இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.

“1987ஆம் ஆண்டும் தற்போது நடைபெறுவதுபோல இலங்கையில் தமிழின படுகொலை நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி விமானம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினார். அதே நிலைதான் இப்போதும் உள்ளது. இது தொடர்பாக எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் தொகுப்புகளையும் சுதர்சனத்திடம் கொடுத்துள்ளேன். ராஜீவ் காந்தியை இழந்தது வருத்தத்திற்குரியது. தீட்சித் போன்றவர்களின் தவறான ஆலோசனைகளே அவரது இழப்புக்குக் காரணம். இப்போதும் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தவறான ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. இந்த போக்கை கைவிட்டு ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும், வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் மத்திய அரசு ஆலோசனை பெற வேண்டும்.

நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மீது தாக்குதல்

_swamy_.jpgஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்துவரும் சுப்பிரமணியம் சுவாமி, நேற்று, சிதம்பரம் நடராஜர் ஆலய தீ‌ஷிதர்கள் சார்பாக வாதாட நீதிமன்றம் வந்திருந்தார்.

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, மற்றும் சந்துரு முன்னிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சில வழக்கறிஞர்கள் அறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீதிபதிகளின் கண்டனங்களையும் மீறி சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசியதோடு அவரைத் தாக்கவும் முயன்றனர்.

பின்னர் பொலிசார் விரைந்து வந்து வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி தனக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கத் தவறிவிட்டதென்றும், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வாறு தாக்குதல் நடைபெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி

tamilnaadu.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  17 ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் அரசவை கவிஞர் புலமை பித்தன், திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, ஓவியர் புகழேந்தி, ‘புதிய பார்வை  இதழ் ஆசிரியர் ம.நடராஜன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கி மனித சங்கிலி, செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் வழியாக குமரி வரை நீடித்தது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தமிழின உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, சோனியா அழைப்பின் பேரில்  ராமதாஸ் டெல்லி சென்றதால், பாமக மேல்மலையனூர் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், முகையூர் எம்எல்ஏ களிவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

”தப்பியோடுவதா? தற்கொலை செய்வதா? தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன்” – கோதபாய : ”நாங்கள் போராடுவோம்!! சரண் அடையமாட்டோம்!!!” – யோகி

gothabaya.jpgஅப்பாவி மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் வன்னியில் மறைந்துள்ளார்கள். தாம் தப்பியோடுவதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் அரசியல் புகலிடம் கோரக்கூடுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம். பாதுகாப்பு படையினர் உயிர் தியாகத்துடன் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கோதபாய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் அளித்த விசேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களுக்குள் 30 ஆயிரம் பேரை புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகவும் 50 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடையிலான மக்களை புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

yokaradnam-yoki.jpgநாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்று விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்து பகிர்வு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்து இருப்பதாவது:-

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல. இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம். எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். போராடியிருக்கின்றோம். இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். ‘ஜெயசிக்குறு’ காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மை காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.  எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன. இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுக்கப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு இலட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50 இலிருந்து 60 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100 க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார்.

வன்னி மக்கள் பாதுகாப்புடன் வெளியேற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

வன்னியில் மோதலில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பொன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பகுதியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட கால வரையறைக்குள் உடனடியாக ஒருதலைப்பட்சமாக மோதல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் கேட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.

அத்துடன், பலவந்தமாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக அவர்களை வைத்திருக்கக்கூடும். ஆனால், இது தொடர்பான சர்வதேசத்தின் அபிப்பிராயம் தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்று சமாதானத்திற்கான தமிழர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சகல பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். அத்துடன், அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தார்மீக உரிமை இந்த நிலையில் உண்டு. தங்களின் தரப்பில் அந்த நடவடிக்கையானது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். நீங்கள் புலிகளுடனேயே போரிடுகிறீர்கள். தமிழ் சமூகத்திற்கு எதிராக அல்ல என்பது குறித்தும் தமிழ் மக்களின் துன்பம் தொடர்பாக மனிதாபிமான ரீதியான கரிசனையை மனதில் அதிகளவுக்கு கொண்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பில் இலங்கை தெளிவுபடுத்த வேண்டும் -சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை.

sathiyamoorthy.jpgஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படுகாயமடைந்து மரணமடைந்தமை தெரிந்த விடயமே. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர் தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர். மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.  இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம்  அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

 படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.

தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார்.  புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணை:

இதே நேரம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. நேற்று புலனாய்வுபிரிவின் அலுவலகத்தில் (6ம் மாடியில்) சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு  புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அவர் இந்த விசாரணைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

இந்த விசாரணையின் போது வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவு நிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம், கடந்த வெள்ளிக் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. 

கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாலசிங்கம் கூறியுள்ளார். அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுத்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் – உலக பத்திரிகைகள் ஒன்றிய அறிக்கை.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் இன்று

election-commissioner.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் இன்று (17) தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளது. கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், வாக்குச் சாவடிகள் அமைத்தல் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளது. மேல்மாகாண சபை கடந்த மாதம் கலைக்கப் பட்டதோடு வேட்பு மனுக்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன. தேர்தல் ஏப்ரல் மாதம் முதற் பகுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இன்று மனிதச்சங்கிலி

1102-vaiko.jpgஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.

நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.

இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.