கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘எழவு வீட்டில் ஓட்டு கேட்கும் சோனியா’ – பாரதிராஜா

bharathiraja1.jpg இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து அவர் ஓட்டு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசாத கூட்டமைப்பினர் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தமில்லை – அரசாங்கம் அறிவிப்பு

axman-yappa.jpg“தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழமாநிலம் அமைய பாடுபடுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை

jayalalitha.jpgஇலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

– பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

– அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

– தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

– கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

– இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிப்பு

images-ipl.jpgதென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 2 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகின்றன. 37 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

வழக்கமாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டமும் 31/4 மணிநேரம் நடைபெறும். கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் 10 ஓவர்கள் வீசப்பட்டதும், 71/2 நிமிடங்கள் இடைவெளி விடப்படும். இந்த வகையில் 15 நிமிடங்கள் அதிகமாக கிடைக்கும். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

வணிக நோக்கமே இந்த புதிய இடைவேளை திட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், ஆப்பிரிக்காவில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் இந்த இடைவெளியில் காண்பிக்கப்பட உள்ளன. இதன் மூலமும் ஐ.பி.எல்.க்கு வருவாய் கிட்டுகிறது. மொத்தம் 118 இரண்டரை நிமிட விளம்பர இடைவேளை விற்பனைக்கு தயாராக உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை சோனி மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்ழூ.எஸ்.ஜி.) பெற்றுள்ளன. அவை, 9 ஆண்டுகால ஒளிபரப்புக்கு ரூ.8200 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் சோனி செட்மேக்ஸ் சேனல் ஐ.பி.எல். ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 33 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்ப நேரம் தர வேண்டும் என்று ஒளிரப்பு தாரர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஓவர்கள் முடிவிலும் 40 வினாடிகளும், விக்கெட் விழுந்தால் அந்த இடைவெளியில் சுமார் ஒரு நிமிடமும் விளம்பரத்தை ஒளிபரப்ப அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், ஓர் இன்னிங்சில் மொத்தமே 2 அல்லது 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தாலோ அல்லது 15 ஓவர்களுக்குள்ளேயே போட்டிகள் முடிவடைந்தாலோ அது ஒளிபரப்புதாரர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

india-elc-2009.jpgஇந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மொத்தம் 124 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 வது கட்டமாக மே 13 ந்தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். 25ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

5வது கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு: தமிழ்நாடு 39, உத்தரபிரதேசம் 14 ,மேற்குவங்காளம் 11, பஞ்சாப் 9, உத்தரகாண்ட் 5, இமாச்சலபிரதேசம் 4, காஷ்மீர் 2, புதுச்சேரி 1, சண்டிகார் 1, மொத்தம் 86

ஏர்டன்குடாவில் பதினொரு கடற் கொள்ளையர்கள் கைது; பிரான்ஸ் வீரர்களின் துணிச்சலான செயலை உலக நாடுகள் பாராட்டு

somaliya-robbery.jpgசோமாலியாவின் கடல் எல்லையிலுள்ள ஏர்டன் குடாவில் வைத்து சென்ற புதன்கிழமை பதினொரு கடற்கொள்ளையர்களைக் கைது செய்த பிரான்ஸ் கடற் படையினர் கொள்ளையர்களின் கப்பலையும் தடுத்து வைத்துள்ளனர். சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது கடற் கொள்ளையர்கள் ரொக்கட் தாக்குதலை நடாத்தினர்.

இந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் மேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதி கடல் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏர்டன் குடாவில் இடம் பெறும் கடற் கொள்ளைகளை முறியடிக்க உலக நாடுகளின் கூட்டான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. வருடாந்தம் சுமார் 16 ஆயிரம் கப்பல்கள் சுயஸ் கால்வாயூடாக ஏர்டன் குடாவை நோக்கி பயணம் செய்கின்றன.

எரிபொருட்கள் தானியங்கள் இராணுவ உபகரணங்கள் என ஏராளமான பொருட்களை இக்கப்பல்கள் வியாபார உதவி நோக்கங்களுக்காக கொண்டு வருகின்றன. இந்தக் கப்பல்களை சோமாலியாவின் கடல் எல்லைகளிலுள்ள கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையிடுவது பெரும் தலையிடியை உருவாக்கியது. இதனால் பல நாடுகள் இணைந்து இக்கடல் எல்லைகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் கொடியுடன் ரோந்தில் ஈடுபட்டுள்ளன. சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதால் பிரான்ஸ் கடற் படைக் கப்பல் புதன்கிழமை மாலை ஏர்டன் குடாவில் தரித்து நின்றது.

கொள்ளையர்களின் பத்து மீட்டர் நீளமான படகு ஆயுதங்களுடன் வந்த பொழுது பிரான்ஸ் கப்பலிலிருந்து கிளம்பிய ஹெலிகொப்டர் கொள்ளையர்களின் படகைச் சுற்றி வளைக்க பிரான்ஸின் கடற்படை கப்பல் கொள்ளையர்களின் படகை நெருங்கி கப்பலையும், கொள்ளையர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கென்யாவின் ஐநூறு மைல் கடல் எல்லையில் வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் கடல் எல்லைகளில் அதிகரித்துச் செல்லும் கடற் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கவென அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ள வேளையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர் .

கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்குதல் அவர்கள் செயற்படும் நாடுகளில் கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட யோசனைகளிலுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள போதும் பிரான்ஸ் கடற்படையே முதற் தடவையாக கடற் கொள்ளையர்களைக் கைது செய்துள்ளது.

குடாநாட்டில் தங்கியுள்ள அகதிகள் மாற்று உடைகளின்றி பெரும் அவதி

_mullai_1.jpgயாழ். மாவட்ட நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள வன்னி அகதிகள் மாற்று உடையில்லாமல் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாற்று உடைகளை கொண்டுவரும் உடைகளின் பார்சல்களை சிலர் வீசி எறிவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக உடைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் அலுவலர்களுக்கு ஒரு சாரம் அல்லது சேட்டும்,பெண்களுக்கு கவுன் ஒன்றை வழங்குவதால், ஒன்றுமேயில்லாமல் உடுத்த உடையுடன் வந்த அகதிகள் பெரும் இன்னல்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்ட இந்து அமைப்புக்கள்,வணிகர் கழகங்கள்,பொது அமைப்புக் கள் இந்த அகதிகளுக்கு உணவுப்பொருட்களையே சேகரித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்து வருகின்றனர். இம் மக்கள் உணவுப்பொருட்கள் வேண்டாம்,மனமுகந்து மாற்று உடையாக ஆடைகளை தாராளமாக தந்து உதவுங்கள் என வேண்டுகின்றனர்.

130 மி.மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களிலிருந்து 130 மி. மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களைப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முழுமையாக கிரீஸ் பூசப்பட்டு பொலித்தீன்களால் சுற்றப்பட்ட நிலையிலேயே புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களில் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாது காப்புப் படையினர் நிலத்தின் கீழ் ஏதோ புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

130 மி. மீ. ரக பீரங்கி வைக்க பயன்படுத்தும் உபகரணம், தொலைத் தொடர்பு கருவிகள் – 02, கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் மிக நீள மான குழல்கள் இரண்டு, கைக்குண்டுகள் – 27, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புல்மோட்டை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 514 பேரில் இரு குழந்தைகள் பலி

முல்லைத்தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பல் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 514 பேரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் கப்பலில் வந்துகொண்டிருந்த போது மரணமானார். மற்றவர் புல்மோட்டை கள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போது உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு;

1. குகதாஸன் ஒபிசன், (வயது 03), குருநகர், யாழ்ப்பாணம்.

2. தினேஷ்யாழினி, (வயது 03), புதுமாத்தளன் இவர்களையும் சேர்த்து நேற்று புதன்கிழமை காலை 9.00 மணிவரை முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் புல்மோட்டைக்கு மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 14 வரை கூட்டி வரப்பட்ட 5,456 பேர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 16, 20, 22, 26, 28, 30 ஆகிய திகதிகளிலும் ஏப்ரல் மாதத்தில் 4, 9, 13, 14 ஆகிய திகதிகளிலும் 11 தடவைகள் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 27 சதவீதத்தினருக்கே புல்மோட்டை கள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,806 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பதவியா ஆஸ்பத்திரிக்கு 2,918 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 48 ஆண்கள், 48 பெண்கள், 13 சிறுவர்கள், 16 சிறுமிகள் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியா ஆஸ்பத்திரியில் 314 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் காயமடைந்தவர்களும் நோயாளர்களும் ஆவர்.

மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

jayalalitha.jpgஅதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக்குழுவின் முடிவிற்கேற்ப என்னுடைய அருமைச் சகோதரி அவர்களை, அவருடைய இல்லத்திலே சந்தித்து, எங்களின் பொதுக்குழுவினுடைய முடிவிற்கு ஏற்ப இந்த கூட்டணில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் பேசினோம்.

வெளியிலே வந்து ஊடக நண்பர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் (ஜெயலலிதா) பேட்டியளித்தார்கள். என்னிடம் அந்த மைக்கை கொடுத்து, நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன். 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்லுகிறேன் மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது.

அதற்கு காரணம் மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான் என்பதால்தான் நான் சொல்லுகின்றேன். அந்த வகையிலே தமிழகம் முழுவதும் சென்று வருகின்ற இந்த கூட்டணி தலைவர்கள், மக்களுடைய நாடி துடிப்பை பார்த்து சொல்லுகின்றோம். இன்று எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும், மக்கள் சக்தி அன்பு சகோதரி பக்கமே என்பதை உணர முடிகிறது. திமுகவுக்கு எதிரான அலை இப்போது வீச தொடங்கியுள்ளது என்றார்.