சோமாலியாவின் கடல் எல்லையிலுள்ள ஏர்டன் குடாவில் வைத்து சென்ற புதன்கிழமை பதினொரு கடற்கொள்ளையர்களைக் கைது செய்த பிரான்ஸ் கடற் படையினர் கொள்ளையர்களின் கப்பலையும் தடுத்து வைத்துள்ளனர். சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது கடற் கொள்ளையர்கள் ரொக்கட் தாக்குதலை நடாத்தினர்.
இந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் மேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதி கடல் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏர்டன் குடாவில் இடம் பெறும் கடற் கொள்ளைகளை முறியடிக்க உலக நாடுகளின் கூட்டான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. வருடாந்தம் சுமார் 16 ஆயிரம் கப்பல்கள் சுயஸ் கால்வாயூடாக ஏர்டன் குடாவை நோக்கி பயணம் செய்கின்றன.
எரிபொருட்கள் தானியங்கள் இராணுவ உபகரணங்கள் என ஏராளமான பொருட்களை இக்கப்பல்கள் வியாபார உதவி நோக்கங்களுக்காக கொண்டு வருகின்றன. இந்தக் கப்பல்களை சோமாலியாவின் கடல் எல்லைகளிலுள்ள கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையிடுவது பெரும் தலையிடியை உருவாக்கியது. இதனால் பல நாடுகள் இணைந்து இக்கடல் எல்லைகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் கொடியுடன் ரோந்தில் ஈடுபட்டுள்ளன. சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதால் பிரான்ஸ் கடற் படைக் கப்பல் புதன்கிழமை மாலை ஏர்டன் குடாவில் தரித்து நின்றது.
கொள்ளையர்களின் பத்து மீட்டர் நீளமான படகு ஆயுதங்களுடன் வந்த பொழுது பிரான்ஸ் கப்பலிலிருந்து கிளம்பிய ஹெலிகொப்டர் கொள்ளையர்களின் படகைச் சுற்றி வளைக்க பிரான்ஸின் கடற்படை கப்பல் கொள்ளையர்களின் படகை நெருங்கி கப்பலையும், கொள்ளையர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கென்யாவின் ஐநூறு மைல் கடல் எல்லையில் வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இவர்கள் பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் கடல் எல்லைகளில் அதிகரித்துச் செல்லும் கடற் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கவென அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ள வேளையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர் .
கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்குதல் அவர்கள் செயற்படும் நாடுகளில் கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட யோசனைகளிலுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள போதும் பிரான்ஸ் கடற்படையே முதற் தடவையாக கடற் கொள்ளையர்களைக் கைது செய்துள்ளது.