அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழமாநிலம் அமைய பாடுபடுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை

jayalalitha.jpgஇலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

– பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

– அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

– தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

– கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

– இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *