தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னபோர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில்; திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத்துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.
இந்த தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உட்பட ஏராளமான இணை,துணை உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை எங்களது பிரசார பயணத்தை தொடங்குகிறோம்.
உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்.தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம் .விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவுதரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்கமுடியாது.
தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விடமோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார்.