கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மக்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

vanni-0001.jpgவடகிழக்கு பகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவும், அங்கிருக்கும் காயமடைந்த மற்றும் நோய்வாய் பட்டவர்களை வெறியேற்ற முடியாத நிலையும் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

தற்போது அங்கிருக்கும் களநிலைமைகள் இதற்கு ஏதுவாக இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது. அங்கு மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஒரு கப்பல் வடகிழக்கு கடற்கரை பகுதியில் காத்திருப்பதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தமது இறுதி தாக்குதலை தொடங்கியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடக்கே மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

vanni0002.jpgஇலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளும் அந்த மருத்துவமனை தகவல்களும் தெரிவிக்கின்றன  என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை மீது இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி வாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் காயமடைந்து தங்கியிருந்தவர்களில் சிலரும் பலியாகியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இலங்கை அரசின் அதிகார்கள் கூறியுள்ளனர். இலங்கை இராணுவம் அப்பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

boat.jpgஇன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் பேசுகையில், “படகுகளில் தப்பி வந்த சிவிலியன்கள் எவரும் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவும் 20,000க்கும் அதிகமான மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இது வரையில் கடற்புலிகள் 7 தடவைகள் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். கடற்படையினர் டோராப்படகுகளின் உதவியுடன் முல்லைத்தீவுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் 17 படகுகளைத் தாக்கியழித்தும் சில படகுகளைக் கைப்பற்றியுமுள்ளனர். அதேவேளை, 100க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்போது பலமிழந்து காணப்படுகின்றனர். அதனால்தான் இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள்” என்றார்.

படையினர் வடுவக்கால் நந்திக்கடல் வழியாக தமது பலத்தை ஸ்திரப்படுத்தி முன்னேறி வருகின்றனர்.

udaya_nanayakkara_brigediars.jpgஇன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்,

“59 ஆவது படையினர் வடுவக்கால் நந்திக்கடல் வழியாக தமது பலத்தை ஸ்திரப்படுத்தி முன்னேறி வருகின்றனர். இப்பகுதியில் 3 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் 10 சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுவரை 1,88,500 பொதுமக்கள் வரை படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று 59 ஆவது படையணியினரால 40 பேரும் 58 ஆவது படையணியினரால் 50 பொதுமக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி 16 வயதுக்குட்பட்ட மூன்று விடுதலைப்புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். அதேபோன்று நேற்றைய தினமும் 5 பேர் வரை 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புனரமைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றையதினம் 58 ஆவது படையணியினர் 27எம்.எம். விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் கைப்பற்றினர்” என்றார்.

பிரான்சில் இன்று “அடங்காப்பற்று” மாபெரும் பேரணி

adangappattu-2.jpg37 நாட்களாக பிரான்சின் வரலாற்றுப் பேரெழுச்சியும் உண்ணா நிலைப்போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதேவேளை இன்று அடங்காப்ற்றுப் பேரணி பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது. தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள அரசை எதிர்த்தும் அதற்குத் துணைபோகும் நாடுகளை எதிர்த்தும் பிரான்சில் அடங்காப்பற்றுப் பேரணி இன்று பேரெழுச்சியோடு பி.ப.2.30மணிக்கு ஒபேரா எனும் இடத்தில் ஆரம்பமாகவிருக்கிறது. 

35 நாடகளாக உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொள்ளும் இளைஞர்களை நோக்கி நகரவுள்ள இப்பேரணியில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பை விடுத்துள்ளனர்.மேலும் மக்களின் பேரெழுச்சியும் பெரு வரவும்தான் இநதப்போராட்டத்தின் மாபெரும் மாற்றத்திற்க்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மக்கள் அனைவரும் விரைந்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். – எஸ்.பத்மநாதன்

pathmanathan.jpgகடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சினைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல் : பொதுமக்களை வெளியேற்றுவதில் பாரிய சிரமம்

waroooo.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் வடகடலோரப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் அண்மையில் புதிய பாதுகாப்பு வலயப் பகுதியை அறிவித்திருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைக் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வருவதற்காக நேற்று மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் இருந்து ஆழ் கடலில் நிறுத்தப்படும் ஐசிஆர்சி கப்பலுக்கு நோயாளர்களை படகுகளில் ஏற்றிய இடத்தைச் சூழ்ந்த பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதனால் நோயாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி பாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு இதுவரை 10,191 பொதுமக்கள் அழைத்து வருகை – இவர்களில் 42 பேர் உயிரிழப்பு

doctor.jpgமுல்லைத் தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட 525 பொதுமக்களில், கள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கிஷோர்குமார் (வயது 30) யாழ்ப்பாண மாவட்டம் வேலணை மேற்கைச் சேர்ந்தவர் என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் (திங்கட்கிழமை) கள நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 16 இலிருந்து மே 9 ஆம் திகதி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை 10,191 ஆகும். 21 தடவைகள் கப்பல் மூலம் இவர்கள் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்டனர். இக்காலப்பகுதியில் புல்மோட்டையில் வைத்து உயிரிழந்த முல்லைத்தீவு பொதுமக்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவு பொதுமக்களில் 174 பேருக்கு கள வைத்தியசாலையில் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. பதவியா ஆஸ்பத்திரிக்கு 403 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு 121 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இறுதிக் கட்டமாக நாளை வாக்குப் பதிவு – தமிழகத்தில் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை

india-elc.jpg தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்பட நாடு முழுவதும் 86 தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் உள்ளார்கள். இதில் உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 11, பஞ்சாபில் 9, உத்தர்காண்டில் 5, இமாச்சலப் பிரதேசத்தில் 4, காஷ்மீரில் 2, சண்டிகாரில் 1 தொகுதி ஆகியவை அடக்கம்.

தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 16 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 40.21 சதவீத சாவடிகள் பதட்டமானவை. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தவும், 15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

defence_press-2009-05-12.jpgபுலிகளின் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக சர்வதேச ரீதியில் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசு தாயாராக இருக்கிறது என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகளுக்கு தம்மைக் காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரே வழி சர்வதேச கவனத்தை ஈர்த்து இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா. வுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அதற்காகவே புலிகள் சிவிலியன்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு பழியை படையினர் மீது  போடுகின்றனர். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 1000 சிவிலியன்கள் பலியானதாகவும் 1600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் புலிகள் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்ட பொய்த்தகவலை சர்வதேச முன்னணி ஊடகங்கள் உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அவ்வாறானதொரு தாக்குதலை படையினர் அப்பாவிச் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளவில்லை என்பதை அரசின் சார்பில் மிகவும் உறுதிபடக் கூறுகிறேன்.

டொக்டர் சத்தியமூர்த்தி என்பவரே இந்தத் தகவலை வழயங்கியதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அந்தப் பெயரில் சுகாதார அமைச்சில் எந்தவொரு நபரும் பதியப்படவில்லை. புலிகளைக் காப்பாற்ற சர்வதேச ரீதியில் பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் முக்கிய பங்காளராக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்.

அவர் நோர்வேக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான சுற்றுப் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அதற்கான விளக்கம் இலங்கையிடம் கோரப்பட வேண்டும் என்றும் அதற்கான  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதே அவரது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

கடந்த 48 மணிநேரத்தில் புலிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி சர்வதேச ஊடகங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம். எனினும் சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாரா இருக்கின்றது என்றும் அமைச்சர் மேலும் ;கூறினார்.