முல்லைத் தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட 525 பொதுமக்களில், கள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கிஷோர்குமார் (வயது 30) யாழ்ப்பாண மாவட்டம் வேலணை மேற்கைச் சேர்ந்தவர் என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் (திங்கட்கிழமை) கள நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 16 இலிருந்து மே 9 ஆம் திகதி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை 10,191 ஆகும். 21 தடவைகள் கப்பல் மூலம் இவர்கள் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்டனர். இக்காலப்பகுதியில் புல்மோட்டையில் வைத்து உயிரிழந்த முல்லைத்தீவு பொதுமக்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவு பொதுமக்களில் 174 பேருக்கு கள வைத்தியசாலையில் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. பதவியா ஆஸ்பத்திரிக்கு 403 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு 121 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.