தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்பட நாடு முழுவதும் 86 தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் உள்ளார்கள். இதில் உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 11, பஞ்சாபில் 9, உத்தர்காண்டில் 5, இமாச்சலப் பிரதேசத்தில் 4, காஷ்மீரில் 2, சண்டிகாரில் 1 தொகுதி ஆகியவை அடக்கம்.
தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 16 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 40.21 சதவீத சாவடிகள் பதட்டமானவை. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.
மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தவும், 15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.