சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

defence_press-2009-05-12.jpgபுலிகளின் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக சர்வதேச ரீதியில் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசு தாயாராக இருக்கிறது என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகளுக்கு தம்மைக் காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரே வழி சர்வதேச கவனத்தை ஈர்த்து இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா. வுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அதற்காகவே புலிகள் சிவிலியன்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு பழியை படையினர் மீது  போடுகின்றனர். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 1000 சிவிலியன்கள் பலியானதாகவும் 1600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் புலிகள் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்ட பொய்த்தகவலை சர்வதேச முன்னணி ஊடகங்கள் உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அவ்வாறானதொரு தாக்குதலை படையினர் அப்பாவிச் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளவில்லை என்பதை அரசின் சார்பில் மிகவும் உறுதிபடக் கூறுகிறேன்.

டொக்டர் சத்தியமூர்த்தி என்பவரே இந்தத் தகவலை வழயங்கியதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அந்தப் பெயரில் சுகாதார அமைச்சில் எந்தவொரு நபரும் பதியப்படவில்லை. புலிகளைக் காப்பாற்ற சர்வதேச ரீதியில் பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் முக்கிய பங்காளராக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்.

அவர் நோர்வேக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான சுற்றுப் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அதற்கான விளக்கம் இலங்கையிடம் கோரப்பட வேண்டும் என்றும் அதற்கான  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதே அவரது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

கடந்த 48 மணிநேரத்தில் புலிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி சர்வதேச ஊடகங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம். எனினும் சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாரா இருக்கின்றது என்றும் அமைச்சர் மேலும் ;கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *