கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

காணாமல்போன பிரான்ஸ் விமானம் அத்லாண்டிக் கடலில் வீழ்ந்து விபத்து – விமானத்தில் பயணித்த 228 பேரும் பலி

01-air-france.jpg228 பயணிகளுடன் நேற்றுப் பயணம் செய்துகொண்டிருக்கையில் காணாமல்போன பிரான்ஸ் நாட்டின் விமானம் அத்லாண்டிக் கடலில் விழுந்து நொருங்கியுள்ளதாகவும் அதில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 82 பெண்களும், 9 குழந்தைகளும் அடங்குவதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன

01-air-france.jpgகாணாமல் போன  ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் பிரேசில் நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  நாட்டின் தலைநகருக்கு வடகிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபெர்ணாண்டோ டெ நொரானோ எனும் தீவிலிருந்து பிரேசிலின் வான்படை விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை பெருமளவில் கடந்த நிலையில் காணாமல் போயுள்ளதால், இந்தத் தேடுதல் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரேசிலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். காணாமல் போன விமானத்ததை தேடும் நடவடிக்கையில் செனிகல் நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

மலேசிய இளவரசர் மீது பாலியல் சித்ரவதை புகார்

மலேசிய இளவரசரை மணம் புரிந்த இந்தோனேஷிய மாடல் அழகி, தம்மை இளவரசர் பாலியல் சித்ரவதை செய்ததாக புகார் கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் மனோகரா ஓடிலியா. அமெரிக்க-இந்தோனேஷிய அழகியான இவரை, மலேசியாவின் கேலன்டான் மாநிலத்தின் இளவரசர் முகமத் பக்ரி, அவரது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தம்மை திருமணம் செய்ததிலிருந்து தம்மை ஒரு பாலியல் அடிமையாக நடத்தி, சித்ரவதை செய்ததாக தமது கண்வரும், மலேசிய இளவரசருமான பக்ரி மீது ஓடிலியா பரபரப்பான குற்றச்சாற்றை கூறியுள்ளார். திருமணம் ஆன நாளிலிருந்து தம்மை அரண்மனையில் உள்ள படுக்கை அறையில் ஒரு கைதியை போன்று அடைத்து வைத்து, இளவரசர் தம்மை தினம் தோறும் பாலியல் சித்ரவதை செய்து வந்ததாக ஓடிலியா புகார் கூறியுள்ளார்.

தினமும் தம்மை அவதூறாக பேசி, கட்டாய பாலுறவுக்கு உட்படுத்தியதோடு, உடலில் பல இடங்களில் பிளேடை வைத்து கீறி சித்ரவதை செய்து வந்ததாகவும், அத்துடன் தினமும் போதை மருந்து ஊசியையும் போட்டு தம்மை ஒரு பாலியல் அடிமை போன்று நடத்தி வந்ததாகவும் இந்தோனேஷியா தப்பி வந்த ஓடிலியா,ஜகர்த்தாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

தமது கணவரும், அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தபோது தம்மையும் அழைத்து வந்ததாகவும், அப்போது ரகசியமாக சிங்கப்பூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் தாம் ஜகர்த்தா தப்பி வந்ததாகவும் ஓடிலியா மேலும் கூறினார்.

தாம் இது தொடர்பாக இந்தோனேஷியா தூதரகத்தில் புகார் அளித்தும், அவர்கள் அதில் அலட்சியமாக இருந்ததாகவும் ஓடிலியா குற்றம்சாற்றினார். தமது கணவரிடமிருந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக சிங்கப்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்போவதாகவும் ஓடிலியா மேலும் தெரிவித்தார்.

400 விடுதலைப் புலிகள் ஊடுருவல்-சோனியா, ராகுல் தமிழகம் வர வேண்டாம் என எச்சரிக்கை

01-sonia-rahul.jpgஅகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையற்ற நிலை காரணமாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இப்போதைக்கு தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனராம்.

தமிழ் மன்ற ஸ்தாபகர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா காலமானார் – புன்னியாமீன்

sm.jpgஇலங் கையில் சிரேஷ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்,  வெளியீட்டாளரும்,  பன்னூலாசிரியருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் கடந்த 2009.05.29ஆம் திகதி இறையடியெய்துவிட்டார். இலங்கையில் முன்னணி தமிழ் நூல் பதிபகங்களில் ஒன்றான கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான இவர், 100க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். அன்னாரின் மறைவுச் செய்தி மூன்று தினங்கள் கடந்தே எனக்குத் தெரியவந்தது. தலைநகரிலுள்ள எமது எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  நண்பர்கள் சிறிய சிறிய விடயங்களுக்குக்கூட கடிதம் என்றும்,  மின்னஞ்சல் என்றும்,  SMS என்றும் தொடர்புகொண்டாலும்கூட,  இது போன்ற விடயங்களை அறிவிக்காமை வேதனைக்குரிய ஒரு விடயமே.

இவ்விடத்தில் ஒரு சிறிய விடயத்தை மனந்திறந்து குறிப்பிடல் வேண்டும். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இன்று நான் 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும்கூட ஏதோ ஒரு வகையில் புத்தக வெளியீட்டில் எனக்கு உத்வேகத்தைத் தந்தவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே. 1979ஆம் ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்த பின்பு சுமார் ஏழாண்டுகள் எந்தவொரு புத்தகத்தையும் நான் வெளியிடவில்லை. அதற்குரிய வசதிகளும் என்னிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் அப்போதைய மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.யின் செயலாளர் நாயகம் அஸ்ரப் ஹாசிம் அவர்களினால் எஸ்.எம். ஹனிபாவிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். எமது முதல் அறிமுகத்துடனே எனது இரண்டாவது நூலான “நிழலின் அருமை”யை கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 28ஆவது வெளியீடாக வெளியிட அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா ஒப்புக்கொண்டார். 1986 மார்ச்சில் அப்புத்தகம் வெளிவந்தது.

அவரின் சுறுசுறுப்பும்,  பழகும் சுபாவமும், விருந்தோம்பும் பண்பும்,  அவரின் தமிழ் இலக்கியப் பணிகளும் என்னை வெகுவாகக் கவர்ந்ததினால் அவரைப் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். இதன் விளைவாக 1987ஆம் ஆண்டு “இலக்கிய உலா”,  “இலக்கிய விருந்து” ஆகிய இரண்டு நூல்களை நான் எழுதினேன். “இலக்கிய உலா” அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியது. இந்நூலின் முதலாவது பதிப்பு 1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. சென்னை மில்லத் பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டது. “இலக்கிய விருந்து” அதுகாலம்வரை தமிழ்மன்றம் வெளியிட்ட 30 நூல்களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந்தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 30ஆவது வெளியீடாக 1977 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இதேகாலகட்டத்தில் இந்தியா அல்பாசி பப்ளிசர்ஸ் வெளியீடாக எனது “அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் வெளிவரவும் பூரண ஒத்துழைப்பினை அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே வழங்கினார்.

இவ்வாறாக இரண்டாண்டுகளுக்குள் என்னுடைய நான்கு புத்தகங்கள் அச்சாவதற்கு ஒத்துழைத்ததுடன்,  அச்சீட்டுத்துறையிலும்,  வெளியீட்டுத்துறையிலும் பல்வேறுபட்ட நுணுக்கங்களை எனக்கு அவர் போதித்தமையினாலேயே பிற்காலத்தில் என்னால் சுயமாக 150 புத்தகங்களை எழுதி வெளியிடவும்,  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எனது சிந்தனைவட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடவும் முடிந்தது.

எம்மைவிட்டுப் பிரிந்தாலும் இலங்கை தமிழ் இலக்கியத்துக்கும், இலக்கியவாதிகளுக்கும் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களினால் வழங்கிய ஒத்துழைப்பும்,  வழிகாட்டலும் என்றும் நிலைத்திருக்கும். இச்சந்தர்ப்பத்தில் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் முஸ்லிம் கிராமங்களுள் ஒன்றான கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவரே எஸ்.எம். ஹனிபா அவர்கள். இவர் 1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் திகதி செய்யது ஹாஜியார்ää சபியா உம்மா தம்பதியினரின் ஏக புதல்வராக கல்ஹின்னையில் பிறந்தார்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டங்களிலே கிராமப் புறங்களின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. காரணம் கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பாடசாலைகள் இக்கிராமங்களில் இன்மையே. பொதுவாக தமது பிள்ளைகளை உலகளாவிய கல்வியைக் கற்பதற்கு முன்பு மார்க்க அறிவினை வழங்குவதற்கு இக்காலப் பெற்றோர் கூடிய ஆர்வம் காட்டுவர். இந்த அடிப்படையில் எஸ்.எம். ஹனிபா அவர்கள் தனது நான்கரை வயதிலே திருக்குர்ஆனையும்ää மார்க்கக்கல்வியையும் கற்றுக் கொள்ளத் தூண்டப்பட்டார். இரண்டாண்டுகளுக்குள் திருக்குர்ஆனின் 30 பாகங்களையும் ஓதி முடித்ததுடன்ää மார்க்க அடிப்படை தொடர்பாகவும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் 1934ஆம் ஆண்டு ஜுன் 01ஆம் திகதி கல்ஹின்னை கிராமத்தின் கமாலியா முஸ்லிம் பாடசாலை எனும் பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையே தற்போதைய கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்ப தினத்தின் 21ஆவது மாணவராக சேர்ந்த ஹனிபா ஐந்தாம் வகுப்பு வரை இப்பாடசாலையிலேயே தமிழ்மொழி மூலமாக கற்றார். பின்பு 1939ஆம் ஆண்டில் மாத்தளை விஜய கல்லூரியில் ஆங்கிலமொழி மூலம் கற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியிலும்,  கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் இவர் இடைநிலைக் கல்வி,  உயர்தரக் கல்வியைப் பெற்றார். பின்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார்.

இவர் 1956ஆம் ஆண்டில் கொழும்பு டென்காம் பாடசாலையில் (தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மு.மகாவித்தியாலயம்) ஆசிரியர் சேவையில் இணைந்தார். இருப்பினும் இரண்டாண்டுக்குள் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் உதவியாசிரியர் பதவி கிடைத்தமையினால் ஆசிரியர் தொழிலில் இவர் நீடிக்கவில்லை. 1958ஆம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான நாழிதலான தினகரன் பத்திரிகையில் உதவியாசிரியராக சேவையில் இணைந்தார். தினகரன் உலக செய்திகள் பக்கத்தை இவரே பொறுப்பாக நின்று நடத்திவந்தார். இதைத் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் திங்கள் விருந்து எனும் சஞ்சிகைப் பக்கத்தையும் பொறுப்பாக நின்று நடத்தினார்.

இக்காலகட்டத்தில் தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த கலாநிதி க. கைலாசபதி அவர்களின் விசுவாசத்துக்குரிய ஒருவாராகவும் காணப்பட்ட எஸ்.எம். ஹனிபா சுமார் 6 ஆண்டுகள் தினகரன் ஆசிரியர் பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். பின்பு தினகரனின் சகோதர பத்திரிகையான சிலோன் ஒப்சேவரில் துணையாசிரியர் பதவிக்கு நியமனம் பெற்று உள்நாட்டு,  வெளிநாட்டு செய்திகளை அழகுற தொகுத்தளித்தார். சுமார் 1 வருட காலத்துக்குள் சிலோன் டெய்லி நிவுஸ் பத்திரிகையில் உதவியாசிரியாராக இணைந்து 3 ஆண்டு காலம் பணியாற்றினார். இக்கட்டத்தில் தனக்கு இந்தோனேசியாவில் மார்க்கக் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தமையினால் லேக்ஹவுஸிலிருந்து 1968 ஜுன் மாதம் இராஜினாமாச் செய்தார்.

பின்பு 1971ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பகுதியில் சிரேஷ்ட உதவியாசிரியராக நியமனம் பெற்றார். இவரின் கடமையுணர்வும்,  தொழில் நுணுக்கமும் ஒன்றிணைந்து இவரை பொறுப்பாசிரியர் பதவி உயர்வுபெற வழிவகுத்தது. 1977ஆம் ஆண்டில் தன் சுயவிருப்பின் பெயரில் இவர் இப்பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தார்.

பள்ளிப் பராயத்திலிருந்தே தமிழை நேசிக்கவும்,  தமிழை வளர்க்கவும் பழகிக் கொண்ட எஸ்.எம். ஹனிபா அவர்கள் கற்கும் காலத்திலே ஓர் இலக்கிய சஞ்சிகை, ஒரு கல்லூரி சஞ்சிகை,   இரண்டு இயக்க சஞ்சிகைகள், பல்கலைக்கழக சஞ்சிகையொன்று என மொத்தம் ஐந்து சஞ்சிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இதே காலப் பகுதியில் வேறு மூன்று பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கும் இவர் முழுப் பொறுப்பாக நின்று வெளிக்கொணர்ந்தார். இவரது 21வது வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் இவர் ஆசிரியராக நின்று பணியாற்றிய சஞ்சிகைகளை எடுத்துநோக்குமிடத்து சமுதாயம் எனும் இலக்கிய சஞ்சிகை இவருடைய சொந்த வெளியீடாகவும் தரமான இலக்கிய சஞ்சிகையாகவும் மிளிர்ந்ததை அவதானிக்கலாம்.

100க்கணக்கான இலக்கிய ஆக்கங்களையும்,  கட்டுரைகளையும் தேசிய பத்திரிகைகளிலும்,  சஞ்சிகைகளிலும், வானொலியிலும் எழுதியுள்ள இவர்,  சுமார் 15 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய வானில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களில் உலகம் புகழும் உத்தம தூதர்,  துஆவின் சிறப்பு,  உத்தமர் உவைஸ்,  The Great Son ஆகியன குறிப்பிடத்தக்கது. பாரதி நூற்றாண்டின்போது மகாகவி பாரதி நூலினை சிங்களத்தில் வெளியிட்டார். அதேபோல உத்தும் நபி துமானோ,  உவைஸ் சிரித்த ஆகிய நூல்களை சிங்களத்திலும் எழுதி வெளியிட்டார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி எனும் நூல் அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்டுள்ளதாகும். இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் “அன்னை சோனியா காந்தி” என்பதாகும்.

கல்ஹின்னை தமிழ்மன்றம் எனும் முத்திரையில் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஈழத்துத் தமிழ்த் தாயின் மடியில் தவழ விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது வெளியீட்டுப் பணிகளை அவதானிக்கும்போது இன, மத,பேதங்களுக்கு அப்பாட்பட்டிருப்பதை அவதானிக்கலாம். அதேநேரம், வளர்ந்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் என்ற வட்டத்துக்குள் தமது வெளியீட்டினைச் சுருக்கிக் கொள்ளாமல் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும்,  அறிமுக எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளதை விசேட பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். இவர் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ்மன்றம் பல நூல்களை வெளியிட்ட போதிலும்கூட,  சில நூல்களை மாத்திரம் கீழே உதாரணப்படுத்தியுள்ளேன்.

• தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு (ஆங்கிலம்). இந்நூல் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இந்நூலின் நூலாசிரியர் கலாநிதி எம்.எம். உவைஸ் ஆவார். இதுவே தமிழ்மன்றத்தின் முதல் நூலாகும்.

• இலக்கியத்தென்றல். (தமிழ் இலக்கிய வரலாறு) கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது.

• தமிழர் சால்பு. (சங்ககால இலக்கியம் பற்றியது) இந்நூலினையும் கலாநிதி சு. வித்தியானந்தன் எழுதியுள்ளார். 323 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் 01ஆம் பதிப்பு 1954ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்தது.

• துணைவேந்தர் வித்தி. இந்நூலை பேராசிரியர் கலாநிதி அ.சன்முகதாஸ் எழுதியுள்ள இந்நூலின் முதற்பகுதி 1984 மே மாதம் வெளிவந்தது.

• என் சரிதை. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை அவர்களினால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். இந்நூல் 1983 ஜனவரியில் வெளிவந்தது. இதேயாண்டு இந்தியாவில் பிரபல எழுத்தாளர் ஜே.எம். சாலியின் “சாயல்” எனும் சிறுகதைத் தொகுதியை தமிழ்மன்றம் வெளியிட்டது.

• 1984 ஜனவரியில் கவிமணி எம்.ஸி. சுபைர் அவர்களின் “எங்கள் தாய்நாடு” எனும் புத்தகத்தை வெளியிட்ட தமிழ்மன்றம் இதேயாண்டில் கவியரசு எம்.எச்.எம். ஹலீம்தீனின் “காலத்தின் கோலங்கள்” எனும் நூலினையும் வெளியிட்டது. 1985ஆம் ஆண்டு மார்ச்சில் புலவர்மணி அ.மு. சரீபுத்தீனின் “கனிந்த காதல்” நூல் வெளிவந்தது. 

எஸ்.எம். ஹனிபா அவர்கள் 1965ஆம் ஆண்டில் “நூருல் அன்பேரியா”வை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். தமிழன்பர் ஹனிபாவின் இலக்கிய சேவைகளை பாராட்டி பல அமைப்புகள் கௌரவம் அளித்துள்ளன. பல விருதுகளை வழங்கியுள்ளனர். ஹனிபா மறைந்தாலும் அவரால் ஆற்றப்பட்ட சேவைகள் நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

ஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.

hajj.jpgஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள்  பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் முக்கிய நகரம் எம் வசம் – பாகிஸ்தான் இராணுவம்

pakarmy_.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரிய நகரம் ஒன்றின் பெரும்பகுதியை தாலிபான் வசமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது.

மிங்கோரா நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும் சில பகுதிகளில் சிப்பாய்கள் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறினார்.

ஆரம்பத்தில் தாலிபான் தரப்பிலிருந்து வலிமையான எதிர்த்தாக்குதல் வந்திருந்தது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட ஆரம்பித்துள்ளன என்று உணர்ந்ததை அடுத்து அவர்கள் சண்டையிடாமல் பின்வாங்கிக் செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

தாலிபான் ஆயுததாரிகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லை என்றும். அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க மக்கள் உதவி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமாரை மக்களவை சபாநாயகராக்க   காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெருமைமிகுந்த மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்  அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீராகுமாரை மக்களவை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐந்து முறை எம்.பி.யாகி இருக்கும் மீராகுமார் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியுமான மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமைமிகுந்த அரசியல் சாசன பதவியான மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார். அதன் பிறகு  அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒக்ஸ்போர்ட் விஜயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து

university-of-oxford.jpgஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் விவாத சங்கத்தின் நிகழ்ச்சியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பங்குபற்றவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் அணியின் முகாமையாளர் பிரண்டன் குறுப்பு ஆகியோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்யவிருந்தனர். எனினும் பிரிட்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் நேற்று முன்பக்கச் செய்தியொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சூழலில் இவ்விஜயம் ரத்துச்செய்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் யூனியன் நேற்று வெளியிட்ட அறிக்கை யொன்றில் “டைம்ஸ் பத்திரிகையின் இன்றைய முன் பக்கச் செய்தியினால் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக மேற்படி விஜயத்தை ரத்துச்செய்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்கள் எமக்குத் தெரிவித்தனர். இது எமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் – புன்னியாமீன்

may-31.jpgஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization   உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.  1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA  40.38  தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட,  அதேயாண்டில் WHA 42.19  தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும்.  இத்தாவரத்தின் தண்டுப் பகுதியைவிடவும்,  இலைப் பகுதியிலேயே அதிக இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.  இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி. டி. ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார் தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர். 

புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.     

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் ‘வில்லியம் பொலின்’  வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம்  (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 
‘பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்’. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது?  இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதையீ புற்றுநோய்இ சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரபையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.

அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறைமாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப் பையினுள்ளே சிசு இறந்து பிறப்பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.

இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்றவாறான பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும். அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic)  முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே  (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.

புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டு வந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிவறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது.

பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகைபிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை,  சிலநாடுகளில் புகையிலையும்,  மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங்கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில்,  புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்கு பெருமளவுக்கு வருமான வரியை ஈட்டுகின்றன.

1988ல் பின்லாந்தும்,  1994ல் பிரான்சும் மதுபான,  புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன்,  நியூஸிலாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் இந்நிலையை துரிதப்படுத்துகின்றன. எவ்வாறிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்.  புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக ‘நாட்டிங்காம்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப்பிடிக்கின்றார்கள் என்று  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பழக்கவழக்கங்கள் காரணமாக 21 %, மகிழ்ச்சிக்காக 21.1% , புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 22.7% , நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக  8.2%, தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5% , ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் 7.6% , நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6 % , பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 3.3%  த்தினரும் புகைப்பிடிப்பதாக தெரிய வருகின்றது. மேலும், இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் 17.1% ,  கொழும்பு மாவட்டத்தில் 20.4%,  கேகாலை மாவட்டத்தில் 24.5% ,  அநுராதபுர மாவட்டத்தில் 27.9% ,   கம்பஹா மாவட்டத்தில் 29.8%,  காலி மாவட்டத்தில் 44.2%   இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற்பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன்வைக்கின்றது. அவை வருமாறு:

1990 – Childhood and youth without tobacco: growing up without tobacco
1991 – Public places and transport: better be tobacco free
1992 – Tobacco free workplaces: safer and healthier
1993 –  Health services: our windos to a tobacco free world
1994 –  Media and tobacco: get the message across
1995 –  Tobacco costs more than you think
1996 –  Sport and art without tobacco: play it tobacco free
1997 –  United for a tobacco free world
1998 –  Growing up without tobacco
1999 –  Leave the pack behind
2000 – tobacco kills, don’t be duped
2001 – second-hand smoke kills
2002 – tobacco free sports
2003 – tobacco free film, tobacco free fashion
2004 – tobacco and poverty, a vicious circle 
2005 – health professionals against tobacco
2006 – tobacco: deadly in any form or disguise
2007 – smoke free inside
2008 – tobacco-free youth
2009 – tobacco health warnings