காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமாரை மக்களவை சபாநாயகராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெருமைமிகுந்த மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீராகுமாரை மக்களவை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐந்து முறை எம்.பி.யாகி இருக்கும் மீராகுமார் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியுமான மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமைமிகுந்த அரசியல் சாசன பதவியான மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார். அதன் பிறகு அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.