::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

‘ருவென்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்

t20-world-cup.jpgஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. கிரிக்கட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள 9 நாடுகளுடன் புதிதாக ஸ்கொட்லாந்து,  அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்த 12 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் முதலில் நடைபெறும் 24 லீக் போட்டிகளில் 12 அணிகளும் கலந்துகொள்ளும். லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்த சுற்றுக்குத் தெரிவாகும் 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். சுப்பர் 8 முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.  இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி லண்டன்,  லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

muralitharan-sri-lankas.jpgஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாளை  5ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. இதன்போது நேற்று புதன்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் அணி உலக நாடுகளுடன் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளை பிரித்தானியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  போட்டிகள் நடைபெறும் தினங்களில் மைதானங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

20-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடைபெறவுள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போதான பாதுகாப்பு நடவடிக்கை, கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

லண்டனில் நடைபெறவுள்ள உலக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதன்கிழமை மாலை மோதின.

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்புக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூர் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அதுதான்.

இதில் ஆறு போலீசார் பலியாயினர், ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக மிக முக்கியமான போட்டிகள் என்று கருதப்படும் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னரும், லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னரும், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு போட்டியில் சந்தித்தன.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ளள இந்த 20-20 உலகக் கோப்பை போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றாலும் போட்டிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலலுத்தப்படுவததாக போட்டிகளுக்கான இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவிக்கிறார்.

ஆசிய பேஸ்போல் சம்பியன் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை

basketball.jpgதாய் லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 8ஆவது ஆசிய பேஸ்போல் சம்பியன்சிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. மலேசிய அணியை 9-1 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தன் மூலம் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் பேஸ்போல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

முதல் போட்டியில் 3-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் 10-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்னுமொரு போட்டியில் பாகிஸ்தானும் ஹொங்கொங் அணியும் பங்குபற்றவுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, ஹொங்கொங், மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒக்ஸ்போர்ட் விஜயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து

university-of-oxford.jpgஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் விவாத சங்கத்தின் நிகழ்ச்சியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பங்குபற்றவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் அணியின் முகாமையாளர் பிரண்டன் குறுப்பு ஆகியோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்யவிருந்தனர். எனினும் பிரிட்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் நேற்று முன்பக்கச் செய்தியொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சூழலில் இவ்விஜயம் ரத்துச்செய்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் யூனியன் நேற்று வெளியிட்ட அறிக்கை யொன்றில் “டைம்ஸ் பத்திரிகையின் இன்றைய முன் பக்கச் செய்தியினால் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக மேற்படி விஜயத்தை ரத்துச்செய்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்கள் எமக்குத் தெரிவித்தனர். இது எமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

20 ஓவர் உலக போட்டி 216 நாடுகளில் ஒளிபரப்பு

second-world-cup-of-twenty20.jpg12 நாடுகள் பங்கேற்கும் 2 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜுன் 5 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்.நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி பல்வேறு டெலிவிஷன் சேனல்கள் மூலம் 216 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

பிரெஞ்ச் ஓபன்-முதல் சுற்றில் சானியா தோல்வி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. பெண்களுக்கான ஓற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானை சேர்ந்த கலினா வஸ்கோபோயேவாவை எதிர்கொண்டார்.

போதுமான பயிற்சியில் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்ற சானியா துவக்கத்தில் தவறு மேல் தவறு செய்தார். இதையடுத்து அவர் முதல் செட்டை 4-6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டில் சானியா வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், இவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என இழந்தார். இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சானியா அடுத்ததாக பெண்கள் இரட்டையரில் சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங்குடன் இணைந்து விளையாடுகிறார்

ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .