ஜெயபாலன் த

ஜெயபாலன் த

உதவி வழங்குவதும் உரிமைப் போராட்டமும் : த ஜெயபாலன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இராணுவ பாடப்புத்தகம் போல் கால அட்டவணையிடப்பட்டு மே 18 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆயினும் யுத்தம் ஏற்படுத்திய அழிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் குறையவில்லை. வன்னி முகாம்களின் முட்கம்பிகள் இலங்கை அரசின் முகத்திரையை இன்னமும் கிழித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசோ அது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. தமிழ் மக்களின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தனிநாடு கேட்ட நிலை போய், தற்போது வன்னி முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை என்ற நிலைக்கு மறைந்த தலைவர் வே பிரபாகரனும், அவரது விடுதலைப் புலிகள் இயக்கமும், இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது.

வன்னி மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி அரசியல் சார்ந்ததே. முகாம்களில் உள்ள இம்மக்கள் இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயரவில்லை. தற்போது அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட்டு உள்ளது. இவர்களை 180 நாட்களுக்குள் மீளக் குடியமர்த்தப் போவதாக அரசு அறிவித்த போதும் அவர்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தடுத்த வைக்கும் திட்டமே இருக்கின்றது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நிரந்தரக் கட்டுமானங்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக உள்ளனர். இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வரைமுறைகளையும் மீறி எதேச்சதிகார அரசாக தன்னை கட்டமைத்துள்ளது. இந்நிலையில் வன்னி முகாம்களில் உள்ள தமிழ் மக்களுடைய நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் இன்னமும் தனக்குள் உடன்பட முடியாதவர்களாக முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவது உட்பட அம்மக்களின் நலன் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இணைந்து செயலாற்ற முடியவில்லை. இவர்கள் பல கோணங்களில் பிரிந்துள்ளனர். இதில் இரு பிரதான பிரிவுகள் உண்டு.
1. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது.
2. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது.

முதலாவது பிரிவினர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி, தனிநாட்டுக்கான தமது அரசியலைப் பலப்படுத்த நினைக்கின்றனர். தனிநாடு அமைப்பதே இப்பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வாக அமையும் என நினைக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காத சிறு பகுதியினரும் இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது அர்த்தமற்றது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு அரசுக்கு நிர்ப்பங்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் அரசுக்கு ஆதரவானவர்கள். முற்று முழுதாக அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கை அரசு நோகாமல் செயற்படுவதன் மூலமே வன்னி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என நம்புகின்றனர். அல்லது ரிஎன்ஏ தவிர்ந்த தமிழ் கட்சிகள் போன்று இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரரலின் கீழ் செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளுக்கு முன் சலுகைகளையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இருக்கின்றனர்.

மற்றுமொரு சிறு பிரிவினர் தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் அதே சமயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு அரச கட்டமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குவது தவிர்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனால் முகாம்களுக்கு உதவிகளை வழங்க முற்படுபவர்களும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகளைப் பேச முற்படுபவர்களும் தங்களுடைய பாத்திரங்களை ஒன்றையொன்று குறுக்கீடு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

‘வன்னி முகாம்களில் உள்ள மக்களுடைய பிரச்சினை அரசியல்ப் பிரச்சினை, அதனால் அதனை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக முடியும்’ என்பது தத்துவக் கோட்பாட்டுக்கு சரியாக அமைந்தாலும் யதார்த்தத்தில் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குறைந்தபட்ச உதவிகளைச் செய்வது தவிர்க்க முடியாது. ‘சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ அவலத்தில் இருந்து தப்பிய மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்துக் கொண்டு அவர்களது உரிமைகளுக்காக போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்வரை அவர்களால் காத்திருக்க முடியுமா? புலம்பெயர்ந்த நாடுகளில் போராடி மீட்கிறோம் காக்கிறோம் என்று முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் காத்திருந்த மக்களை இந்தப் போராட்டங்கள் எதுவும் காக்கவில்லை. மாறாக அம்மக்களை ஆயிரம் ஆயிரமாக மரணத்துள் தள்ளியது.

இந்த அவலத்திற்கு தாக்குதலை நடத்திய இலங்கை அரசு மட்டும் குற்றவாளிகள் அல்ல. அப்பகுதிக்குள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே. அதனைக் கண்டிக்கத் தவறிய வன்னி மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்காத அதன் ஆதரவாளர்களும் அதற்குப் பொறுப்புடையவர்கள். ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்துவார்த்த ரீதியில் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தில் அரசை மட்டுமே கண்டிக்க முடியும் என்று முரண்டு பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

அதேசமயம் வன்னி மக்களின் நல்வாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றது. அவர்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வாழ வைப்பதன் மூலமே தங்கள் அரசியலைப் பலப்படுத்த முடியும் என்று எண்ணுவது மூன்றாம்தர அரசியல். வன்னி மக்கள் அனுபவித்த அவலம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குகின்ற அதேவேளை அதற்குச் சமாந்தரமாக அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதும் முடிந்த உதவிகளை மேற்கொள்வதும் அவசியம். ஒன்றிற்காக மற்றையதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.

சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் (ஐஎன்ஜிஓ) மங்களின் போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கின்றது, ஏகாதிபத்தியங்களின் முகவர்களாக செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உண்டு. அதற்காக வன்னி முகாம்களில் இருந்து ஐஎன்ஜிஓ க்களை அகற்ற வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தமானது என்பதும் அது இலங்கை அரசின் நோக்கிற்கே துணைபுரியும் என்பதும் வெளிப்படையானது. அதேபோல் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவது அரசுக்கு துணை செய்யும் என்கின்ற வாதம் அபத்தமானது. அரசின் விதிமுறைகளை மீறி முல்லைத் தீவுக் கடற்பரப்பில் வணங்காமண் கப்பலை தரையிறக்குவதாக தம்பட்டம் அடித்து பணம், பொருள், நேரத்தை வீணாக்கியது போன்று செய்ய வேண்டியம் அவசியம் யாருக்கும் இல்லை. உதவிகள் மக்களைச் சென்றடைவதற்காக அரசு விதிக்கின்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாதது.

அமைச்சர் அம்மானுக்கு மனைவி வித்யா ஒரு மாத காலக்கெடு

Karuna_ColVidyawadi_Muraleetharanகருணா அம்மான் என்று அறியப்பட்ட இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அவருடைய மனைவி ஒரு மாத காலக்கெடு வழங்கி உள்ளார். அமைச்சர் முரளீதரன் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிறிலங்கா கார்டியன் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் (July 22)தெரிவித்துள்ள வித்தியாவதி முரளீதரன் அவர் ஒரு மாத காலத்திற்குள் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

கருணா அம்மான் 2007 நவம்பர் 2ல் தனது குடும்பத்தினரைக் காண லண்டன் வந்திரந்த வேளையில் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக 9 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு 2008 யூலை 3 ல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இலங்கை சென்ற கருணாவிற்கு முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கருணா வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பங்தம் ஏற்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார். பீடில் வாசித்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் நிலையில் தனது கணவர் இருப்பதாகவும் வித்தியாவதி முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

Vidyawadi_Muraleetharanவித்தியாவதி சாதாரண குடும்பத் தலைவி மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவிகளில் ஒருவர். கணவர் கருணாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர். தற்போது இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஸ்கொட்லன்ட் பகுதியில் வசிக்கின்றார். கடைசியாக லண்டன் கென்சிங்ரன் பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த வேளையிலேயே கருணா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கருணா லண்டனில் இருந்து கடந்த யூலையில் திருப்பி அனுப்பபட்ட பின்னர் கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவருடைய பதவியும் அதையொட்டிய நடவடிக்கைகளும் குடும்ப உறவைப் பாதித்துள்ளதை வித்தியாவதி முரளீதரனின் நேர்காணலில் வெளிப்பட்டு உள்ளது. தொலைபேசியூடாக நான்கு மணிநேரம் இடம்பெற்ற நேர்காணலில் பல பகுதிகளை ஊடக நாகரீகம் கருதி வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்ற குழுவினரைச் சந்திக்க வந்திருந்த முரளீதரன் மது போதையில் காணப்பட்டதாகவும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அக்குழுவில் சென்ற சிலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். அமைச்சர் முரளீதரனுடைய கவனம் செக்ரிறரியில் இருந்த அளவிற்கு ஏனைய விடயங்களில் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசன் சந்திரகாந்தன் 13வது திருத்தச்சட்டங்களில் உள்ள அதிகாரங்களைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரம் இன்றி அரசு தனியாருக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிராக கிழக்கு முதல்வர் நேற்று (யூலை 23) மாகாண சபையில் தீர்மானமும் இயற்றி உள்ளார். ஆனால் அமைச்சர் முரளீதரன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியமில்லை என அரசுக்கு ஒத்திசைவாக செயற்பட்டு வருகின்றார்.

தொடரும் கருணா – பிள்ளையான் முரண்பாடு கிழக்கு மாகாண சபையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு முதல்வர் பிள்ளையானுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். கருணா அம்மானின் நிலைப்பாடு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இதுவரை பிள்ளையானிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு வந்த அமைச்சர் அம்மான் தற்போது மனைவி பிள்ளைகளிடம் இருந்து காலக்கெடுவை எதிர்நோக்கி உள்ளார். ஸ்கொட்லன்டில் வாழும் வித்தியாவதி முரளீதரனின் காலக்கெடுவை வெறும் அடுப்பு ஊதும் குடும்பப் பெண்ணின் மிரட்டலாக அமைச்சர் அம்மானால் தட்டிக் கழிக்க முடியுமா?

லண்டன் நிலாந்தனின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை : த ஜெயபாலன்

Nilanthan Moorthiஎந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என கடந்த ஆண்டு குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்கு அப்போது தெரிவிததிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று அன்று வேதனையுடன் தெரிவித்த அத்தாயின் வேண்டுகோளுக்கு சட்டம் பதிலளித்துள்ளது. யூன் 26 2009ல் ஸ்னேஸ்புருக் கிறவுண்கோட் ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) இக்கொலையைப் புரிந்ததாகத் நீதிபதி டேவிட் றட்போட் தீர்ப்பளித்து உள்ளார். யூலை 3ல் இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை இனத்தவரான குரொய்டனில் வாழ்பவரான ஸ்ரீபன் பிறித்வெயிற் நான்கு குழந்தைகளின் தந்தையாவார்.

ஓகஸ்ட் 16 2008 அதிகாலை 1:30 மணியளவில் குரொய்டனில் இடம்பெற்ற தெருவோரக் கை கலப்பில் நிலாந்தன் கத்தி வெட்டுக்கு இலக்காகி சில சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்ன பூரண உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) – கலா (கரணவாய்) தம்பதிகளின் புதல்வனே நிலாந்தன். நிலாந்தனும் அவருடைய நண்பர்களும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை குவேசியரும் ஜக் டானியலும் அருந்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த நிலாந்தன் தெருவில் சென்று வந்த சிலரை வம்புக்கு இழுத்ததாக இவர்களுடைய நண்பரான மாணவன் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அப்படி வம்புக்கு இழுக்கப்பட்டவர்களில் ஒருவரே கொலையாளியான ஸ்ரீபன் பிறித்வெய்ற்.

Place_Where_Nilanthan_Murderedஅவ்வழியால் மினிகப்பில் பயணம் செய்துகொண்டிருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை சம்மர் ரோட்டில் உள்ள ரபிக் லைற்றில் வைத்து நிலாந்தன் வம்பிற்கு இழுத்ததாக நிலாந்தனின் நண்பர்களில் ஒருவரான ரக்டிப் சிங் (23) நிதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அப்போது ஸ்ரீபன் பிறித்வெயிற் நிலாந்தனை ‘பக்கி’ என்று இனத்துவேசத்துடன் விழித்துள்ளார். அப்போது நிலாந்தன் மினிகப்பின் பின் இருக்கையில் இருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை யன்னலினூடாக இழுக்க முயன்றதாக அரச சட்டவாதி கியூசி கிறிஸ்தொப்பர் கின்ச் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சலசலப்பில் அவ்விடத்தை விட்டகன்ற ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் 20 நிமிடங்கள் கழித்து நிலாந்தனுடனான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள கத்தியுடன் வந்துள்ளார்.

கத்தியை விசுக்கி நிலாந்தனின் கழுத்தில் ஆழமான வெட்டை ஏற்படுத்தியதில் நிலாந்தன் நினைவற்று வீழ்ந்ததை அவருடைய நண்பர்கள் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தனர். நிலாந்தனின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருக்கையில் கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் லண்டன் வீதியில் இறங்கி நடந்து சென்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் அடிங்ரன் ரோட்டில் உள்ள குப்பைப் பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ தினம் தனது நான்கு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த மைத்துனியின் பிளற்இற்கு ஸ்ரீபன் பிறித்வெயிற் சென்றுள்ளார்.

நிலாந்தனை தான் தாக்கியதோ அல்லது நிலாந்தன் கொல்லப்பட்டதோ தனக்கு சில நாட்களின் பின்னர் பத்திரிகையில் பார்க்கும் வரை தெரியாது என கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

உடனடியாக மருத்துவவண்டி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயப்பட்ட நிலாந்தன் அருகில் உள்ள மேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மதுபோதையில் இருந்த சில தமிழ் இளைஞர்களை அள்ளிச் சென்றனர். அங்கிருந்த மதுப் போத்தல்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

நிலாந்தன் மூர்த்தியுடைய இறுதி நிகழ்வுகள் ஓகஸ்ட் 31 2008ல் ஸ்ரெத்தம் கிரெமற்ரோரியத்தில் இடம்பெற்றது.

நிலாந்தனுடைய கொலை தொடர்பாக சில தினங்களிலேயே ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. கொலையாளி சட்டன் மஜிஸ்ரேட் கோட்டில் ஓகஸ்ட் 21 2008ல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Nilanthan’s Final Journeyஓகஸ்ட் 21 2008ல் நிலாந்தனின் துயர சம்பவத்தை அடுத்து நிலாந்தனின் பெற்றோரை லண்டன் குரல் பத்திரிகை சந்தித்தது. அப்போது ”எமது பிள்ளைகள் கால நேரத்துடன் வீடுகளுக்கு வந்துவிட வேண்டும், குழுக்களாக குழுமி நிற்பது போன்றவைகளை தடுக்க நாங்களும் பொலிஸாரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது” என நிலாந்தனின் தாயார் தனது துக்கத்திலும் வேதனையிலும் உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் நிலாந்தன் உட்பட ஐந்து தமிழர்கள் வரை பிரித்தானியாவில் வேற்று இனத்தவர்களால் இனத்துவேசத்துடன் கொல்லப்பட்டு உள்ளனர்.

வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

தேசம்நெற் வன்னி முகாம்களில் மேற்கொள்ளும் கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும் & தேசம்நெற் வாசகர்களிடம் ஒரு விண்ணப்பமும்

students.jpgவன்னி முகாம்களில் தங்கியுள்ள 5ம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் விநியோகத்திட்டத்திற்கு இன்னமும் 3 65 000 ரூபாய் (2000 பவுண்) தேவைப்படுகின்றது. மேற்படி தொகையை தேசம்நெற் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரடியாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் மின்அஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்பு விபரங்கள்:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

வன்னி முகாம்களில் தமது புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுமுகமாக 28 இலட்சம் (27 77 000) ரூபாய் செலவில் நூல் வழங்கும் திட்டம் ஒன்றை தேசம்நெற் முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இத்திட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் உள்ளோம். மேலும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் பரீட்சைகள் நடக்க இருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கான நூல்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்திற்கு இதுவரை பங்களித்தவர்கள் விபரம் வருமாறு:
9 25 000 ரூபாய் : சிந்தனை வட்டம்
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
      
24 12 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை

இவற்றைக் கருத்தில்கொண்டு தேசம்நெற் அதன் வாசகர்களிடம் இந்த உதவி விண்ணப்பத்தை முன் வைக்கின்றது. இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை கேள்வி பதில் வடிவில் வழங்கி உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். இக்கல்வித்திட்டம் தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

தேசம்நெற் முன்னெடுக்கும் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும்

புலமைப் பரிசில் பரீட்சை என்றால் என்ன:
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை

இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும்.

இதனை லண்டனில் நடைபெறும் 11 பிளஸ் பரீட்சைக்கு ஒப்பிடமுடியும்.

இப் பரீட்சையில் சித்தியடைவதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

எத்தனை மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர்:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70 000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

தற்போது இப்பரீட்சையில் தோற்றவுள்ள எத்தனை மாணவர்கள் இடப்பெயர்வு முகாம்களில் உள்ளனர்:
இடப்பெயர்வு முகாம்களில் உள்ள 4872 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்ற உள்ளனர்.

இலங்கை இலவசக் கல்வி வழங்கும் நாடாக இருக்கையில் எதற்காக அம்மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது:
அண்மைய வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் கடந்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் விநியோகிக்கப்படவில்லை. தற்போது அவர்கள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பாடப் புத்தகங்களைப் பெற்று படிப்பதற்கான வாய்ப்பான சூழல் இடம்பெயர்வு முகாம்களில் இல்லை.

மேலும் இந்நிலைக்கு முன்னதாகவே புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் நூல்களை அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் வழங்குவதில்லை. அதனால் மாணவர்கள் அதனை தனிப்பட்ட முறையில் வாங்கியே தமது கற்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு துரித மீட்டல் செய்வதற்கான வினா விடைத் தொகுப்புகளும் அதற்கான வழிகாட்டி நூல்களும் மிகவும் அவசியம்.

எதற்காச் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகள் தெரிவு செய்யப்பட்டது:
சிந்தனை வட்டம் கடந்த 15 வருடங்களாக புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கை பூராவும் உள்ள 700க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிந்தனைவட்டம் இந்நூல்களை விநியோகித்து உள்ளது. சிந்தனை வட்டத்தின் நூல்களின் தரம் இத்துறையில் நீண்டகாலம் நிலை பெற்ற காரணங்களினால் விசேட கல்விப் பணிப்பாளர் தனது உதவிக் கோரிக்கையை சிந்தனை வட்டத்திடம் வைத்தார்.

இந்நூல் திட்டத்திற்கு ஏற்படும் செலவு என்ன:
ஒவ்வொரு மாணவருக்கும்
30 வினாத்தாள்கள் கொண்ட வினாத் தொகுப்பு (148 பக்கங்கள்) 180.00 ரூபாய்
வழிகாட்டி நூல் 1 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 2 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 3 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 4 97.50 ரூபாய்

570.00 ரூபாய் : ஒரு மாணவருக்கு இந்நூல் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு 
(வழிகாட்டி நூல்கள் இல்லாது 100 பக்கம் கொண்ட வினாத் தொகுப்பின் சந்தை மதிப்பு 200 முதல் 225 ரூபாய்)

27 77 000.00 ரூபாய் : 4872 மாணவர்களுக்கும் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு

வெளியீட்டாளர்களான சிந்தனை வட்டம் செலவு தொகையின் மூன்றிலொரு பகுதியைப் பொறுப்பேற்பதுடன் விநியோகத்தையும் மேற்கொள்கின்றனர்.
9 25 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்றசெலவுத் தொகை.

18 52 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்ற பின் நூல்தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு.

இந்நூல் திட்டத்திற்கான செலவை எவ்வாறு பெற்றுக்கொள்வது:
ஆரம்பித்தில் தேசம்நெற் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. தற்போது மாணவர்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் தேசம்நெற் தனித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருளாதாரப் பலத்தை கொண்டிருக்காததால் வெவ்வேறு உதவி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட உதவிகள் வருமாறு

7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)

14 87 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை.

3 65 000 ரூபாய் (2000 பவுண்) : இத்திட்டத்தினை நிறைவேற்ற இன்னமும் தேவையான நிதி.

இதன் நம்பகத் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது:
இந்நூல் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யதவர்களின் முழுமையான விபரங்கள் செலவீனங்களுக்கான கணக்கு விபரங்கள் நூல்கள் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேசம்நெற் இணையத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் எவ்வாறு உதவலாம்:
இந்நூல் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உதவியை வழங்கலாம். உதவி வழங்குபவரின் பெயரும் உதவித்தொகையும் முழுமையான கணக்கு விபரமும் தேசம்நெற் இணையத் தளத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படும்.

எப்படித் தொடர்பு கொள்வது:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

இந்நூல் திட்டத்தின் பயனை எவ்வாறு மதிப்பிட முடியும்:
சூழல் இடம்கொடுத்தால் இம்மாணவர்கள் மாதிரிப் பரீட்சைகளுக்கு அமர்த்தப்பட்டு அவற்றின் மதிப்பீடுகள் உதவி வழங்குபவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் இம்மாணவர்கள் ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றிப் பெறும் பெறுபேறுகள் உதவி வழங்கியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி!
இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

கொலை மற்றும் தலையை வெட்டிக் கொல்ல முற்பட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை!!!

Murder_Weaponநோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.

ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Murder_Weaponசம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Yogarajah_Balasinghamஇம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.

தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

Rita Ariyaratnam with her childrenஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் ஏழு மாத இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். மகப்பேற்றுக்குப் பின்னான மனஉளைச்சலுக்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட நிலையில் தாயும் குழந்தைகளுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஆபத்தான நிலையைக் கடந்து உடல்நிலை தேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிழக்கு பேர்த் பகுதியில் உள்ள குளோவர்டேல் பகுதியில் வாழும் செல்வின் அரியரத்தினம் எனபவரின் குடும்பத்திலேயே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. யூலை 6ம் திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அரியரத்தினம் அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் மனைவி றீட்டாவும் வரவேற்பறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவர்களுக்கு அருகில் றிட்டாவுக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மனஉளைச்சலுக்கான மாத்திரைப் போத்தலும் காணப்பட்டது.

உடனடியாக ‘000’ அவசரசேவைக்கு அவசர அழைப்புவிடுத்தார். மருத்துவ வண்டி வரும்வரை றீட்டாவின் இதயத்தை தொடர்ந்தும் இயக்குவதற்கான செயன்முறைகளை தொலைபேசியில் வழங்க அரியரத்தினம் அதனை மேற்கொண்டார். மருத்துவ வண்டி வந்தடைந்ததும் றீட்டா றோயல் பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் இருவரும் பிறின்சஸ் மார்கிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனையை அடைகையில் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் தாயார் றீட்டா பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்று நெருங்கிய உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்.

Twins_Ariyaratnamஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி றீட்டா அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார்.

அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்துள்ளார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தாய் தனது குழந்தைகளை கொலை செய்து தன்னையும் அழித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் இது முதற்சம்பவம் அல்ல. கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு லண்டனிலும் இவ்வாறான ஒரு துயரம் நிகழ்ந்தது. (அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன், கனவிலும் தோண்றாத கொடூரம் – தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!) வேறு வேறு நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களிலுமே இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தாய்மார்களின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றின் தாக்கம் முழுமையாக உணரப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர்களது பிரசவத்திற்கு முன் பின்னாக இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

லிப்ற் கொடுப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவு கொண்ட இருவருக்கு, 17 ஆண்டுகள் சிறை!!!

Rapists_Tharmaseelan_and_Arunanலிப்ற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வல்லறவிற்கு உட்படுத்திய இரு தமிழ் இளைஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தர்மசீலன் தங்கவேல் (27) அருணன் தனபாலசிங்கம் (30) ஆகிய இரு இளைஙர்களுமே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். யூலை 6ல் போற்ஸ்மோத் கிறவுண் நீதிமன்றத்தில் மூன்றுநாள் வழக்கின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி கிரகாம் உவைற் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இவர்கள் குற்றவாளிகளாகக் கணப்பட்டு உள்ளதால் பாலியல் குற்ற ஆவணத்தில் அவர்களது பெயர் விபரம் காலவரையறையின்றி பதிவு செய்யப்படும். இதனால் இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் தங்களது நகர்வுகள் இருப்பிடம் வாழ்விடம் பற்றி பொலிசாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்டவர்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் நீண்டகாலச் சிறைத் தண்டனை பெற்றது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இவர் மூன்று நாட்கள் நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை விபரித்து மற்றையவர்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடாது தடுத்துள்ள அம்மாணவியின் துணிச்சலை டிடெக்டிவ் சார்ஜன் சூ முரே பாராட்டினார்.

பிரித்தானியாவின் ஹம்பசெயர் என்ற இடத்தில் உள்ள போஸ்ட்மவுத் பிரதேசத்தில் சவுத்சீ பகுதியில் வெளியே சென்று குடித்துக் கொண்டிருந்த மாணவியை தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் வீட்டில் இறக்கி விடுவதாக்க கூறி தங்கள் காரில் ஏற்றினர். காரில் ஏற்றியவர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இன்னுமொரு அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி அதில் தங்கலாம் தூங்கலாம் என அந்த மாணவிக்குத் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி அந்த மாணவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சிய போதும் இவர்கள் வல்லுறவு கொள்வதை நிறுத்தவில்லை என அம்மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அம்மாணவியை காரில் ஏற்றிவந்து சவுத்சீயில் வீதியோரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதை மறுத்துள்ளனர். அம்மாணவியின் சம்மதத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யூரிகள் மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின் மூன்று மணிநேரம் அவற்றை ஆராய்ந்து தர்மசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகளும் ஆறுமாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடினமான குடிவரவு விதிகளுக்கமைய நீதிபதியின் பரிந்துரைக்கு அமைய குற்றவாளிகள் திருப்பி அனுப்புவதற்கு உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் குழுக்களிடையே வன்முறையைப் போன்று பாலியல் துஸ்பிரயோகங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் ஊடகங்களில் மிகச்சிலவே வெளிவந்துள்ளது. வயது குறைந்தவர்களை பாலியல் இச்சைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன்

Jaffna_Map1. 

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி  Revolutionary Armed Forces of Colombia (FARC),  என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review தெரிவிக்கின்றது.

குறிப்பாக ரிஆர்ஓ மற்றும் எல்ரிரிஈ இன் முன்னிலை அமைப்புகளினூடாக நிதி திரட்டல்கள் இடம்பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டை எல்ரிரிஈ மறுத்தே வந்தள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மனமுவந்து நிதியை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு அழிவையும் நிதிதிரட்டுவதற்கான உபாயமாகவே எல்ரிரிஈ பயன்படுத்தி வந்தது. சுனாமி – சுனாமி நிதி, வெள்ளம் – கண்ணீர் வெள்ளம், வன்னி அவலம் – வணங்கா மண் என்று நிதி திரட்டலில் எல்ரிரிஈ க்கு நிகராக யாரும் இருக்கவில்லை. தங்களுடைய ஒட்டு மொத்த தலைமையே அழிந்த போதும் அதை வைத்தும் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னி முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்க நிதி சேர்க்கின்றனராம்.

மாவீரர் நிகழ்வில் கார்த்திகைப் பூ விற்றல் முதல் ஊர்வலங்களில் புலிக்கொடி, தமிழீழ பச், ரீசேட் என ஒரு வர்த்தக நிறுவனமாகவே அவர்கள் செயற்பட்டனர். இவ்விடயங்களில் எல்ரிரிஈ இன் வர்த்தக தொழில் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு வந்திருந்த இந்தியப் பொருளியலாளரும் இராஜதந்திரியுமான கிருஸ்ணனுடன் ஹரோ நகரசபை அறையொன்றில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் எல்ரிரிஈ இன் பொருளாதாரம் பற்றிக் குறிப்பட்ட கிருஸ்ணன், வரியை எப்படி அறவிடுவது என்று எல்ரிரிஈ இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ‘இந்தியாவில் வாழ்பவர்களையே வரி செலுத்த வைக்க முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழன் ஒருவன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவனுடைய வருமானத்தையும் அவன் செலுத்த வேண்டிய வரியையும் கணித்து வைத்து வரியை அறவிடும் அளவுக்கு நிர்வாகத் திறனுடைய அமைப்பு எல்ரிரிஈ’ என்று கிருஸ்ணன் விபரித்து இருந்தார்.

எல்ரிரிஈ வரி அறவிடுவதிலும் வியாபாரத்தைப் பெருக்கி வருமானத்தை பெருக்குவதிலும் காட்டிய ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை. அரசியல் வங்குரோத்து ஒட்டுமொத்த அமைப்பையும் ஒரே நாளில் அழித்தொழிக்க வழிகோலியது. அன்று அழிந்தொழிந்தது புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் ஆவணங்களும் தான்.

200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.
 
எல்ரிரிஈ இன் சர்வதேச நியமனங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். வன்னியில் இருந்து ஐரோப்பாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள் – கஸ்ரோவுக்கு நெருக்கமானவர்கள் – பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிதி மற்றும் அனைத்து விடயங்களையும் பெறுப்பேற்றனர். ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவின் பொறுப்பிற்கு வந்தது.

இப்புதிய நபர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டிய ஒருவர் அன்று கூறுகையில், ‘வன்னியில் துவக்கைப் போட்டுவிட்டு அப்படியே இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று அவர்களின் இயல்பை விபரித்தார்.

புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட கஸ்ரோ செப்ரம்பர் 11க்குப் பின்னான சூழலைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களை வைத்து மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுகள் தோற்றப் போய் மிகப்பெரும் நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.

2006ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசின் புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையும் நெருக்குவாரத்தை வழங்கியது. 2009 முற்பகுதியில் கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ச்சியடைய மறைந்த எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மீண்டும் கே பி யை நியமித்தார். ஆயினும் நிதி விடயங்கள் அவற்றின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கஸ்ரோவிற்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இந்நிலையில் மே 18ல் எல்ரிரிஈ இன் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ளது.

2.

தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை. அதனாலேயே இவர்கள் தமிழக அரசியல் வாதிகளைத் தூண்டிவிட்டு கே பி க்கு எதிராக அறிக்கைவிடத் தயங்கவில்லை. அதனால் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள கடைசிவரை முரண்டு பிடிக்கின்றார்கள்.

மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவர் உயிருடன் இருக்கும்போதே சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே பி மட்டுமே பிரபாகரன் உயிரிழந்ததை அறிவித்து உள்ளார். முன்னர் கே பி யின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்ட எல்ரிரிஈ சர்வதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுகொண்டு அஞ்சலி செய்துள்ளார். அதே போன்று வழுதி என்கின்ற புலிகளின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளதுடன் கே பி இன் கரங்களைப் பலப்படுத்தும்படி கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அல்லர்.

ஆனால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன் – நோர்வே, ரிஆர்ஓ தலைவர் ரெஜி – லண்டன், ஒவ்வவொரு நாடுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் எவருமே இதுவரை உயிரிழந்த தலைவருக்கோ முக்கிய போராளிகளுக்கோ அஞ்சலி செலுத்துவதற்கே முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் கே பி க்கு எதிரான அணி ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட இவர்கள் வல்வெட்டித்துறையை – வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.

கே பி யும் கே பியை எதிர்க்கின்ற அணியினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் கே பி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரல்ல. அவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். அதனால் வல்வெட்டித்துறை குலக் குழுமத்தினால் அவர் நிராகரிக்கபட்டு உள்ளார். தற்போது கே பி உடன் சமரசத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழுமமே நிர்வகிக்கின்றது. இதில் பல நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அவ்வளவு இலகுவில் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளர்கள்
முகிலன் – நோர்வே
அப்துல்லா – சுவிஸ்
பிரியன் – டென்மார்க்
வாகீசன் – ஜேர்மன் (மற்றும் ஐவர் அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.)
மேத்தா – பிரான்ஸ்
தனம் – பிரித்தானியா
தமிழ் – கனடா
நெடியவன் – சர்வதேசப் பொறுப்பாளர்.
ரெஜி – சர்வதேச நிதிப் பொறுப்பாளர். (ரிஆர்ஓ ஊடாகவே புலிகள் அமைப்பின் நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றது.)

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது முற்றாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது எழுந்தமானமான ஒரு நிகழ்வு அல்ல. இது புலிகளின் குலக் குழு மனோநிலையின் வெளிப்பாடே. புலிகள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடையாமையினால் இந்தக் குலக் குழு மனோநிலையில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. வல்வெட்டித்துறை – வடமராட்சியில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் புலிகள் இயக்கம் குலக் குழுவுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொண்டது. புலிகள் இன்று தங்கள் குலத் தலைவனைப் பறிகொடுத்துவிட்டு அவரது பெயரை மட்டும் வைத்து அசையும் அசையாச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய முற்படுகின்றனர். அவர்களது அகராதியில் தமிழ் மக்கள் அசையும் சொத்துக்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3.

கே பி – வல்வெட்டித்துறை (வடமராட்சி) அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனப்டுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வே பிரபாகரன் உயிருடன் இருக்கம் போதே சில மாதங்களுக்கு முன்னதாகவே கே பி சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் ஏற்கனவே சர்வதேசரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக கே பி இருப்பது அவருக்கு சாதகமாக உள்ள விடயங்கள். ஆனால் மறைந்த தலைவர் வே பிரபாகரனுடன் இறுதி வரையும் இலங்கையில் உள்ள போராளிகளுடன் இன்னமும் உறவுகளைக் கொண்டிருந்த போதும் புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் கே பி க்கு ஒரு ஆதரவுத்தளம் இல்லை. புலி ஆதரவு ஊடகங்களிலும் புலி ஆதரவு அமைப்புகளிலும் கூட அவருக்கு கட்டுப்பாடு இல்லை. காரணம் அவையனைத்தும் அந்தந்த நாடுகளின் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. அதனாலேயே தனக்கென ஒரு இணையத் தளத்தை அவர் உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட கே பி க்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் பொறுப்பாளரான ஜெயா என்ற ஜெயச்சந்திரன் சர்வதேச இணைப்பாளர் பொறுப்பு தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்.

கேபிக்கு எதிரான அணி பலமாக இருந்த போதும் தலைமைத்துவ ஆளுமையுடன் ஒரு குலத் தலைவனை முன்னிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அவ்வாறு ஒருவரை முன்னிறுத்தம் போதும் அவர்கள் சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்.

மாறாக கே பி புலிகளின் சில கடும்போக்குகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். யூன் 14ல் அவர் தேசம்நெற்றுடனான உரையாடலிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். அந்த உரையாடலில் ஏகபிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளுடனும் அவர் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஆயினும் புலிகள் மீதான விமர்சனம் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை அவர் முன்வைத்தால் பெரும்பான்மையான புலிகளிடம் இருந்து அவர் அன்னியப்படும் நிலையேற்படும். அதனால் அவ்விடயங்களில் அவர் அடக்கியே வாசிப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனாலும் விவாதங்கள் உரையாடல்கள் எதுவும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசுக்கான செயற்குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அவை தொடர்பான விடயங்கள் அவரால் உடனடியான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் உள்ளதனை வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விவாதம் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசு அரசியல் ரீதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்காமல் தொடர்ந்தும் வன்னி மக்களை முட்கம்பிகளுக்குள் தடுத்த வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை (வடமராட்சி) குலக் குழு மனோ நிலைக்குள் இருந்து கொண்டு பரந்தபட்ட தமிழ் மக்களை பரிபாலனம் செய்ய முற்படுவது வேடிக்கையானது.

கடந்த காலம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கும் கனவை தமிழ் மக்களைப் பரிபாலனம் செய்யும் கனவை புலம்பெயர்ந்து வாழும் புலிகளும் புலிகளது ஆதரவு அமைப்புகளும் கைவிட வேண்டும். மக்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டிர்கள் என்பதற்காக எப்போதும் ஏமாறுவார்கள் என முடிவு கட்டிவிடக் கூடாது.