ஜெயபாலன் த

ஜெயபாலன் த

9 பால்குடம் அறிமுகப்படுத்தினால் 10வது பால்குடம் இலவசம் ! தாயக மக்களின் பெயரில் வசூல் !! எட்மன்டன் நாகபூசணி அம்பாளுக்கே அனைத்தும் வெளிச்சம் !!! : த ஜெயபாலன்

Chief Priest Kamalanatha Kurukkalதாயக மக்களின் பெயரில் அரசியலும் வியாபாரமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வெகு அமோகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக தாயக மக்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களும் பொது ஸ்தாபனங்களும் தங்கள் கணக்கியல் கோவைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்படுகின்றது என்ற பெயரிலேயே ஒன்பது பேர் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயமும் அதே நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை நழுவிச் சென்றது.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் 2002 யூலையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தற்போது ஆலயம் அமைந்தள்ள கட்டிடம் 2003ல் 370 000 பவுண்களுக்கு வாங்கப்பட்டது. நவரட்ணம் சண்முகநாதன், அந்தோணிப்பிள்ளை காந்தரூபன், கதிரவேற்பிள்ளை சிவசின்மியநாதன், பொன்னையா கைலாயபதிவாகன் ஆகியவர்களின் பெயரில் தற்போதைய ஆலயக் கட்டிடம் அமைந்துள்ளது.

Nagapoosani Amman Trustee Vahanவடக்கு கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை தங்கள் நீண்டகாலத் திட்டமாக அறிவித்து இருந்த ஆலய நிர்வாகம் இந்த ஆலயத்தை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் Charity Commission கீழ் பதிவு செய்யவில்லை. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் கட்டிடங்கள் வாங்கும் போது நன்கொடைகள் பெறப்படும் போதும் வரி விலக்குச் சலுகைகள் இருந்தும் இவர்கள் தங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது என்பது ஒரு பொது அமைப்பினது நல்லநடைமுறை. கணக்கு விபரங்கள் பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும். ஆனால் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயம் அதனை பல ஆண்டுகளாகச் செய்யவில்லை.

Nagapoosani Amman Kodi Archchanaiஆயினும் தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் பல்வேறு ஆலயப் பூஜை முறைகளை அறிமுகப்படுத்தி நிதி வசூலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. வன்னி யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 2009 ஜனவரி முதல் மார்ச் வரை தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கோடி அர்ச்சனை என்ற பூஜையை அறிமுகப்படுத்தி ஒரு நாளுக்கு ஆயிரம் பவுண்கள் என்ற அடிப்படையில் 100 நாட்களுக்கு 100,000 பவுண்கள் திரட்டி இருந்தனர்.

தற்போது மாசி மகத்தை முன்னிட்டு 1008 குடம்பால் அபிசேகம் மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த நிதி தாயகத்தில் முதியோர் இல்லம் அமைக்க வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு பால் குடம் 10 பவுண்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒன்பது பேர்ரை அழைத்துவந்து பால்குடம் எடுத்தால் 10வது குடம் இலவசமாக வழங்கப்படுவதாக அவ்வாலயத்திற்குச் சென்றுவரும் பக்தர் ஒருவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இணையத்தளம் இருந்த போதும் அவ்விணையத் தளத்தில் ஆலய நிர்வாகம் பற்றியோ அல்லது ஆலயம் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் பற்றியோ எவ்வித தகவலும் அதில் காணப்படவில்லை.

Nagapoosani Amman Trustee Rubarah with LTTE Leader Thamilchelvanலண்டனில் உள்ள ஆலயங்களில் பொருளாதாரரீதியாகக் கூடுதல் லாபமீட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் அதன் கணக்கு விபரங்களையோ அதன் உதவி நடவடிக்கைகளையோ இணையத்தில் வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றது.

இது பற்றி ஆலயத்தின் தனாதிகாரி பசுபதி அவர்களிடம் கேட்டபோது ஆலயத்திற்கு நேரில் வந்து அவற்றைப் பார்வையிட முடியும் என்றும் தொலைபேசியில் அவற்றை தெரிவிப்;பது சிரமம் என்றும் தெரிவித்தார். ஆலயத்திற்கு வரும் அனைத்து வருமானங்களிலும் செலவு போக மிகுதியை தாயகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். எதற்காக இதுவரை பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யவில்லை எனக் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கே தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Nagapoosani Amman Trustee Rubarajமுதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் எனஉதவி கேட்பவர்களுக்கு உதவி வருவதாகத் தெரிவித்த அவர் நேரில் வரும்பட்சத்தில் அவற்றைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களில் கற்கும் 15 வன்னி மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களை வழங்கி வருவதாகவும் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னி மாணவர்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

லண்டன் குரலின் அடுத்த இதழில் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்துடனான சந்திப்பின் விபரங்களை வெளியிடுவோம்.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூஜைமுறைக்கு ஒத்த பூஜைமுறைகள் கனடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலேயே இடம்பெற்றது. இவ்வாலயம் ஸ்பாபறோவில் விக்ரொரியா பார்க் லோறன்ஸ் சந்திப்பில் அமைந்தள்ளது. இங்கு லட்ச தீப அர்ச்சனை என்ற முறையை அறிமுகப்படுத்திய குருக்கள் ஒரு சுட்டி தீபத்தை 2 கனடிய டொலருக்கு விற்பனை செய்தார். ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எத்தினை தீபச்சுட்டிகளையும் வாங்கி ஏற்றலாம். ஆனால் லட்ச தீபங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றப்பட வேண்டும். இது வெற்றியளிக்கவே குருக்கள் கோடி தீப அர்ச்சனையை அறிமுகப்படுத்தினார். இவற்றின் தொடர்ச்சியே என்பீல்ட் கோடி அர்ச்சனையும் பால்குடமும்.

தாயகத்திற்கு என்ற பெயரில் பெரும் எடுப்புகளில் நிதி வசூலிப்புகள் நடைபெறுகின்றது. ஆனால் இவ்வாறு பெரும் எடுப்புகளில் சேகரிக்கப்படும் நிதிக்கு என்ன நடந்தது என்பதனை நிதி சேகரிப்பில் முன்னிள்றவர்கள் வெளியிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வணங்கா மண். பலநூறாயிரம் செலவில் அனுப்பப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் பாவணைக்கு உதவாதி நிலையை அடைந்தன. சுண்டக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவில் புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதி விரயமானது.

Nagapoosani Amman Trustee Vahan with LTTE Leader Thamilchelvanதற்போது நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தமது கணக்குக் கோர்வைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் நீண்டகாலமாகவே பெருமளவு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் அதன் கணக்கு விபரங்களையும் இணையத்தில் வெளிப்படையாகவே வெளியிட்டும் வருகின்றது. அதனால் அடியார்களது நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

புலம்பெயந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் முடிந்தவரை தாயக மக்களுக்கு உதவமுன்வர வேண்டும் அதே சம்யம் தங்கள் கணக்குக் கோவைகளை வெளிப்படையாகப் பேணவும் முன்வர வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழி.

”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது! முன்பு வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு பத்திரிகையை அகற்றி இருந்தது! : த ஜெயபாலன்

Uthayan_Canada15 வருடங்களாக கனடாவில் வெளிவருகின்ற கனடிய உதயன் பத்திரிகை பெப்ரவரி 20 இரவு தாக்கப்பட்டு உள்ளது. 10,000 பிரதிகள் வெளியாகின்ற வாரப்பத்திரிகை கனடாவில் இடம்பெறுகின்ற அரசியல் கயிறு இழுப்பில் சிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது. கனடிய உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘உன்னுடைய நண்பர்கள் இலங்கை சென்று மகிந்தவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். நீ உன்னுடைய ஒபிஸ்க்கு போய்ப் பார். உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்.’ என்று தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறினார். மேற்படி தாக்குதலால் 12000 டொலர்கள் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு உள்ளதாகவும் உதயன் ஆசிரியர் தெரிவித்தார்.

கனடிய உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு தேசம்நெற் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளைத் தடுக்கின்ற இவ்வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமானவை என்றும் இவற்றுக்கு எதிராக அனைத்து உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தேசம்நெற் கேட்டுக்கொண்டுள்ளது. மக்களுக்கு தகவல் அறியும் சுதந்திரத்தை தடுக்க முனைகின்ற இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல எனவும் தேசம்நெற் குறிப்பிட்டு உள்ளது.

வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகை வழமை போன்று பெப்ரவரி 19 வெள்ளிக்கிழமை வெளியானது. அதன் பிரதிகள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் பொது இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு இருபத்திநான்கு மணிநேரத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்த உதயன் ஆசிரியர் இச்சம்பவத்திற்கு முன்னர் தனக்கு சில தொலைபேசி மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் அந்தப் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Logendralingam_Lமே 2009 வரை கனடாவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு தான் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்த உதயன் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மே 2009க்குப் பின் அன்று போராடியவர்களிடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்தார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பை முன்னெடுத்த குழுவினர் ஏற்கனவே தங்களது பத்திரிகையை வியாபார நிறுவனங்களில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அகற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு சார்பான ஆக்கங்களை வெளியிட்ட போதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காரணம் கூறியே கனடிய உதயன் பத்திரிகையை அவர்கள் அகற்றியதாகத் தெரிவித்தார் லோகேந்திரலிங்கம்.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதை கனடா தமிழீழச் சங்கத்தின் பிரதிநிதி துரைராஜாவும் கண்டித்திருந்தார். இது தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த துரைராஜா ‘உதயன் பத்திரிகை செய்திப் பத்திரிகை என்ற வகையில் கனடாவில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்தகொண்டு நடுநிலைமையாகச் செய்திகளை விடுகின்ற பத்திரிகை’ என்றும் ‘அதனைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றும் தெரிவித்தார்.

அண்மையில் கனடிய வர்த்தகக் குழுவொன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அனாதைச் சிறார்களுக்குச் சேகரித்த 20 000 கனடிய டொலர்களை ஜனாதிபதியிடம் கையளித்து இருந்தது. இச்சந்திப்பில் கனடிய தமிழர் ஐக்கிய சபை, கனடிய – ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் வர்த்தக பிரபலங்கள் குலா செல்லத்துரை, கணேசன் சுகுமார், இருதய மருத்துவ நிபுணர் பொன் சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இவர்கள் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தின் நண்பர்கள்.

‘ஜனாதிபதியைச் சந்தித்தவர்கள் எனக்கு மட்டுமல்ல கனடாவில் உள்ள பலருக்கும் நண்பர்கள்’ என்று தெரிவித்த உதயன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததிலோ அல்லது ஜனாதிபதியிடம் நிதியைக் கையளித்ததிலோ தனக்கு எவ்வித உடன்பாடும் இல்லையெனத் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்புப் பற்றிய எவ்வித செய்தியும் உதயன் பத்திரிகையில் வெளிவரவில்லை எனவும் அவர் தெரிவி;த்தார். அச்செய்தியை வெளியிட்டால் தன் மீதும் தனது அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் தனக்கு இருந்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவ்வாறான செய்தி எதுவுமே பிரசுரிக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் அவ்வாறான செய்தி வெளியாகியதாலேயே தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் உதயன் ஆசிரியர் குற்றம்சாட்டினார்.

சுதந்திரமாக ஊடகங்களை நடாத்த முடியாத அளவுக்கு சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டிய நிலை இன்னமும் கனடாவில் உள்ளதாக தனது மனவருத்தத்தை வெளியிட்ட லோகன் லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு எதிராக 300 000 மக்கள் வாழும் கனடாவில் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெறாதது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

Sampanthan_Rதமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

Viyoogamஇலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று!, தற்போது ஜனாதிபதி தேர்தலும் நடந்து முடிந்து விட்டது!, பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று!’ ஆயினும் ‘யுத்தம் முடிந்த பின்பு அரசியல் தீர்வு என்றார்கள்!’ ஆனாலும் தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன …’ என மே 18 இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?’ என்ற கேள்வியுடன் தங்கள் கலந்தரையாடலை மேற்கொள்ள அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போன்று என்ஜிஓ க்களிலும் வேகமாக பல்வேறு அமைப்புகள் ‘புரட்சிகர’ கோசத்துடன் ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே உறக்க நிலையில் இருந்த அமைப்புகளும் அறிக்கைகளை வெளியிட்டு தங்கள் இருப்பை வெளியிட்டுக் கொண்டன. இவற்றினிடையே மே 18 இயக்கம் தன்னுடைய கோட்பாட்டு இதழ் ஒன்றையும் வெளியிட்டு தொடர்ச்சியாக ரொறன்ரோ, லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் தொடர்ச்சியாகவே ஸ்காபுரோவில் தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றிய பொதுக் கூட்டத்தையும் கலந்துரையாடலையும் மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பல்வேறு அமைப்புகளும் அரிசியல் ரீதியில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் இருக்கையில் மே 18 இயக்கம் இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணரட்னாவில் விமர்சனங்கள் இருந்த போதும் இன்றைய சுழலில் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இக்கலந்துரையாடலிலும் மே 18 இயக்கம் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்: மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!

இடம்: Scarborough Civic Center (Room 1 & 2)
காலம்: 20-02-2010 (Saturday)
நேரம்: 2:30 pm – 6:00 pm

தொடர்புகளுக்கு: viyooham@gmail.com

மே 18 இயக்கம் தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.

புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன்

Sambandan R TNA MPதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.

இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.

இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன்

Karuna_Election_Campaignதற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்”  என்பதன் லட்சணம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.

Buses_on_Election_Duty_25thJan10தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.

MR_Poster_Jaffnaஇவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசியலமைப்பும் பாராளுமன்றத் தேர்தலும்

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அமைப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்புச் சபை தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே சாத்தியம் ஏற்படும். அந்த ஆணையையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை கோரவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதனாலேயே 17வது திருத்தச் சட்டதுக்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதனை நிறைவேற்றவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு தேவையாக உள்ளது.

இந்தப் பெரும்பான்மையைப் பெற்று தேர்தல் முறையை மாற்றி அமைக்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரையாவது வாங்க அரசு முயற்சிக்கலாம்.

இவ்வாறான மாற்றங்களுக்கு ஊடாக அரசியல் அமைப்பை அரசு மாற்றி அமைத்தாலும் அது இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. இது பற்றிய தெளிவான அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.

ரிஎன்ஏ உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே அடுத்த நான்கு வருடத்தில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதையொட்டியே தங்கள் காய்களை நகர்த்துவர். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளிப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அவ்வாறு வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

வே பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளது. வே பிரபாகரன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தம் ஆவணங்களை இலங்கை அரசு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ க்கு அளித்துள்ளதாக மத்திய உள்நாட்டு அமைச்சர் ப சிதம்பரம் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனது உடல் மே18ல் சர்வதேசத்திற்கும் காட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பக்கத்தில் அதனை பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. பிரபாகரனது மரணத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு வழங்கப்பட்ட காரணங்களில் இலங்கை அரசு இந்தியாவுக்கு பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதும் ஒன்று. தற்போது அதுவும் செய்யப்பட்டு உள்ளது.

Pirabakaran V & Mahathayaதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பல்லாயிரம் பேருக்கும் அஞ்சலிகள் செலுத்தப்பட்ட போதும் அதன் தலைவருக்கு இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பிரிவினர் இதுவரை எவ்வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகள் அஞ்சலி செலுத்தி இருக்கவில்லை.