வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • palli
  palli

  //யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு//

  வலிக்கும் வரிகள்; எதாவது செய்ய வேண்டும்; அந்த அரசியல்வாதிகளை மீறி நம்மால் ஏதும் செய்ய முடியாவிட்டாலும் இப்படி சின்ன சின்ன உதவிகளை தொடங்குவதே நல்லது, அந்த வகையில் இவர்களை புலம்பெயர் தேசத்தில் வசிப்பவர்கள் தத்து எடுக்கலாமா?? அதுக்கான சட்டங்கள் தேசம் உங்களது சட்டவல்லுனர்களுடன் பேசி எழுதினால் சில குழந்தைகளுக்காவது பலன் அழிக்க வாய்ப்பு உண்டு; இது பற்றி பல்லி நேரடியாகவே ஜெயபாலனுடன் தொடர்புகொள்ள முயற்ச்சிக்கிறேன்; இருப்பினும் விபரத்தை தளத்தில் தருவது பலருக்கு பலன் தரும் என நினைக்கிறேன்
  நட்புடன் பல்லி;

  Reply
 • மாயா
  மாயா

  இன்னமும் உபாதைகள் தொடராமல் , உதவி இல்லாமல் இருப்போருக்கு நாம் உதவலாம். உங்களுக்கு நம்பகமான அமைப்பாக தெரிந்தால், அந்த அமைப்புகள் ஊடாக உதவலாம். இல்லையென்றால் , நமக்கு தெரிந்த , அல்லது நம்மோடு பழகும் ஒருவருக்குத் தெரிந்த ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்துக்கு உதவலாம். பெரிதாக வேண்டாம். பெரிய மனதோடு ஏதாவது வழி செய்தாலே போதும். அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். அவர்களது முகம் கூட நமக்கு தெரிய வேண்டாம். அது தவறானவருக்கு என்று தோன்றினாலும் பரவாயில்லை. எவ்வளவு அழித்திருப்போம். இதுவும் அதில் ஒரு சிறு விகிதமாக இருக்கட்டும். அதனால் யாரும் சாக மாட்டார்கள்.

  Reply
 • Ahmad Nadvi
  Ahmad Nadvi

  Thanks to Jayabalan for bring out the inside view of suffering innocent Tamils. How can the Tamil diaspora contribute to the fund raising events of the Transnational Govermnet (held at Clay Oven, Alperton- London last weak)? Don’t they have hearts, if not have proper functioning brain.

  The Tamils of fearness should start an effective campaign agaisnt this stupide idea of Transnational Governemt and stuff like that. We should not allow millions of pounds to be wasted in fantastice dreams of TG of Tamil Ealam.

  Save the suffering Tamils by giving as much as every one can. Simple is that.

  Reply