ஜெயபாலன் த

ஜெயபாலன் த

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

University of Jaffna._._._._._.

பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2012ல் ஆரம்பமாகும் புதிய நிர்வாகக்காலத்தில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகலாம் என தேசம்நெற்க்கு அறிய வருகின்றது. பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் 2006ல் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் அவர் பதவியேற்க முடியாமலேயே அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையைவிட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தார். இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி அடையச் செய்யும் திட்டங்களுடன் அதற்குத் தயார் நிலையில் உள்ளார் என்பதையும் தேசம்நெற் அறிகின்றது.

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பாரிய அரசியல் மாற்றமானது இதுவரை இருந்த கட்டமைப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்கி நிற்கின்றது. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தின் அறிவியல் மையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான அரசியல் சமூக ஆய்வுகள் அவசியமாகின்றது. அந்த அவசியத்தின் அடிப்படையில் இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கின்றது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
._._._._._.

‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்பதே 19ம் நூற்றாண்டில் ஜேர்மனியின் பல்கலைக்கழகத்தின் கருத்துருவமாக இருந்தது. இதுவே அன்று வலுவான பல்கலைக்கழக கருவாகவும் அமைந்தது. இதனைவிடவும் ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம், தங்களுடைய சொந்த மதிப்பீடுகள் முதன்மைகளை வரையறுக்கும் சுயாதீன ஒழுங்குகள், சர்வதேசியம் என்ற வடிவங்களும் பல்கலைக்கழகங்கள் சிலவற்றினால் ஏற்கப்பட்டு இருந்தது. இவற்றினைவிடவும் ஆய்வுகளுக்கான தேவைகளின் அதிகரிப்பும் அதற்கான கேள்வியையும் பொருளாதாரத்தையும் பொறுத்து பல்கலைக்கழகங்கள் வேறு வேறு வடிவங்களை முயற்சித்து வருகின்றன. இன்றைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அம்சங்களில் ஆளுமை செலுத்துவதனூடு சிந்தனையையும் சமூகக் கட்டமைப்பையும் செப்பனிடுகின்ற, தேவையேற்படின் மாற்றி அமைக்கின்ற சமூகப் பொறியியலை மேற்கொள்கின்றன.

இதன் அடிப்படையில் கடந்த 36 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற மதிப்பீடு மிகவும் அவசியமானது. இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றினூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ்:

யூலை 15 1974 இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக யாழ்ப்பாண கம்பஸ் சை உருவாக்குவது என்ற அறிவித்தல் அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட்டினால் அறிவிக்கப்பட்டது.

Kailasapathy_K_Profயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது.

இதில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இந்திரபாலாவினது ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிச் சிந்தனையாளரான பேராசிரியர் கைலாசபதியின் உழைப்பிற்கு அப்போது இடதுசாரிகளின் துணையுடன் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயல்வடிவம் கொடுத்தது. யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரிகளை இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்ரோபர் 6ல் பரமேஸ்வராக் கல்லூரியில் யாழ்பாணக் கம்பஸ் அப்போதைய பிரதம மந்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1977ம் ஆண்டு இனக்கலவரமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சிங்கள மாணவர்களைத் தாக்க சிலர் முற்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாது பாதுகாத்து பத்திரமாக தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழரசுக் கட்சியின் எதிர்நிலை:

1960களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை திருகோணமலையில் அமைக்க விரும்பி அதற்கான காணியையும் திருகோணமலை நகரை அண்மித்து வாங்கப்பட்டது. இருப்பினும் தமிழரசுக் கட்சியால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சி தனது ஆதரவை வழங்கி வந்த ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. அதேசமயம் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றபோது தமிழ் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றது என்ற எண்ணத்தில் தமிழரசுக்கட்சி அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பெரும்பாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வேண்டாத ஒன்றாகவே அணுகி வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடயத்தில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய இன்னும் சில விடயங்களுக்கு தமிழரசுக்கட்சி தனது கட்சி நலனின் அடிப்படையில் அல்லது தாங்கள் ஆதரிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியை நோகச் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் ஆதரவு தர மறுத்து இருந்தது.

Thuraiyappa_Alfredசுதந்திரக் கட்சியின் ஆதரவில் ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உருவாவதையும் அதனை சுதந்திரக் கட்சியின் பின்னணியுடைய பேராசிரியர் கெ கைலாசபதி முன்னெடுத்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விருப்பமான விடயமாக இருக்கவில்லை. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்த சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிற்கு ‘இயற்கை மரணம் இல்லை’ என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிர பிரச்சாரங்களில் இறங்கி இருந்தது. இந்த வன்மம் பேராசிரியர் கைலாசபதி மீதும் இருந்தது.

இவ்வாறான நிலையில் தங்களுடைய கிராமங்களில் பல்கலைக்கழகம் திறக்கப்படுவதால் கிராமத்தின் சமூகக் கட்டுக்கோப்பு குலைந்துவிடும் என்பதனைக் காரணம் காட்டி யாழ்ப்பாணக் கம்பஸ் உருவான பகுதிகளில் எதிர்ப்பும் கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதை விரும்பாத தமிழரசுக் கட்சி, 1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்ததும் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஆதரவுடன் பல்கலைக்கழகத்தின் அதிபராக தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான பேராசிரியர் எஸ் வித்தியானந்தனை நியமித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தையெனக் கூறக்கூடிய பேராசிரியர் கெ கைலாசபதி ஒரே நிர்வாகக் காலத்திலேயே (ஒரு நிர்வாகக் காலம் மூன்று ஆண்டுகள்) அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அதனை உருவாக்கிய பேராசிரியர் கெ கைலாசபதி மிகக்குறுகிய காலமே உபவேந்தராக (அதிபராக) இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த உறவைப் பயன்படுத்தி கெ கைலாசபதியை பதவி இறக்கியது.

முளையிலேயே கருகிய இடதுசாரிச் சிந்தனை:

இலங்கையின் இனஉறவுகள் பலவீனமான நிலையில் தமிழத் தேசிய அலை வீச்சுப்பெற ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணக் கம்பஸ் உருவாகின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டங்கள் வெற்றியளித்து இடதுசாரிச் சிந்தனைமுறை பலம்பெற்றிருந்த காலகட்டம் அது. மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர மாற்றங்களுக்கான கோசங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

பேராசிரியர் கெ கைலாசபதி யாழ்ப்பாணக் கம்பஸின் அதிபராகவும் அதன் பின்னர் கலைப்பிரிவின் தலைவராகவும் இருந்தவரை இடதுசாரிச் சிந்தனைக்கான தளம் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டது. அவர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை 1980க்களின் முற்பகுதிவரை உணரக்கூடியதாக இருந்தது.

ஆனால் பொதுவாகவே இளைஞர் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரச் சிந்தனைகள் மீதான காதல் யாழ்ப்பாண சமூகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக சமூகத்தில் ஏற்படவில்லை. அல்லது ஏற்பட்ட போதும் அது குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமும் அதன் தூண்டுதலால் யாழ்ப்பாண சமூகமும் தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரசையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்ணிக்கு பின்னால் அணி சேர்ந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் அரசியல் இலக்கை நோக்கிச் செல்லவில்லை என்றவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வாரிசுகளான தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குப் பின் சென்றனர்.

யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனை:

ஆனால் 1974ல் உருவான யாழ்ப்பாண கம்பஸ் யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு உயர் கல்வி ஸ்தாபனமாகியது. அதனால் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனைப் போக்கைக்கொண்ட சிந்தனையாளர்களையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் தொடர்ச்சியாக உற்பத்தியாக்கி வந்துள்ளது. அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலும் ஒரே இன-மத-சமூகக் குழுவினரே காணப்பட்டமையும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

விரிவுரைகளுக்கு உள்ள அதே முக்கியத்துவம் பட்டதாரி மணவர்களது கூட்டுவாழ்வும் அவர்கள் சமூகத்துடன் கொள்ளும் பரிமாற்றமும் விரிவுரைகளுக்கு அப்பால் ஏற்படுத்துகின்ற உணர்வுரீதியான தாக்கம் முக்கியமானது. ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அது பல்கலைக்கழகத்திற்கு வெளியேயான கூட்டுவாழ்வு சமூகப்பரிமாற்றம் என்பவற்றைக் கொடுக்கவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் அதுவரை வாழ்ந்த அதே சூழலிலேயே வாழ்ந்து தங்கள் பட்டப்படிப்பைத் தொடர்ந்தனர். அதனால் அவர்கள் பல்கலைக்கழகச் சமூகத்திற்கே உரிய மாறுபட்ட சூழலிற்கு தங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழலானது யாழ்ப்பாணத்தின் ஒரே இன-மத-சமூகச் சூழலையே பல்கலைக்கழக வளாகத்திலும் ஏற்படுத்தியது. ஒரு குறுகிய காலத்திற்கு சிங்கள (1974 முதல் 1977 வரை) முஸ்லீம் மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றபோதும் வெகு விரைவிலேயே அவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

University_of_Jaffna_Logoஇந்த சமூகப் பின்னணியில் உருவான யாழ்ப்பாணக் கம்பஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக இருந்து 1979 ஜனவரி 1 முதல் யாழ்ப்பாணப் பல்லைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ் ஆக இயங்கிய காலப்பகுதியில் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கெ கைலாசபதி (01 ஓகஸ்ட் 1974 – 31 யூலை 1977). அவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் (01 ஓகஸ்ட் 1977 – 31 டிசம்பர் 1978) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறும்வரை யாழ்ப்பாணக் கம்பஸ் இன் அதிபராக இருந்தார்.

யாழ்ப்பாணக் கம்பஸ் ஜனவரி 1979ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் பொறுப்பேற்று யூலை 1988 வரை யாழ்ப்பாணத்தின் அதிஉயர் கல்வி ஸ்தாபனத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார்.  நீண்ட காலம் அப்பொறுப்பில் இருந்தவரும் இவரே.

பேராசிரியர் எஸ் வித்தியானந்தன்      1979 ஜனவரி   – 1988 யூலை
பேராசிரியர் ஏ துரைராஜா                        1988 செப்ரம்பர்  – 1994 ஏப்ரல்
பேராசிரியர் ஏ குணரட்னம்                      1994 ஏப்ரல்  – 1997 பெப்ரவரி
பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை   1997 பெப்ரவரி  – 2003 ஏப்ரல்
பேராசிரியர் எஸ் மோகனதாஸ்            2003 ஏப்ரல்  – 2006
பேராசிரியர் ஜீவன் கூல்  2006 பதவியை பொறுப்பேற்கவில்லை.
பேராசிரியர் என் சண்முகலிங்கம்         2008 ஜனவரி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்:

University_of_Jaffnaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் வேறான பாதைகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்ட போதும் அவை அடிக்கடி ஒன்றையொன்று குறுக்கீடு செய்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது ஆளுமையைக் கொண்டிருந்த போதும் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து வீச்சுப் பெற்ற – இந்திய ஆதரவுடன் வீச்சூட்டப்பட்ட – தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளுமை படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பிற்காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் – பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது ஆளுமை செலுத்தினர். ஒரு சமூகத்தினது அதி உயர் அறிவியல் நிறுவனம் அச்சமூகத்தில் காணப்பட்ட ஆயுதக் கலாச்சரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதன் விளைவுகளுக்கு இன்று நாம் சாட்சியமாக வாழ்கின்றோம்.

எண்பதுகளின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணிசமான பங்களிப்பு இருந்தது. ஒரு பக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் தமிழுணர்வைத் தூண்டிக்கொண்டிருந்தனர். மறுபுறம் கருத்தரங்குகள், அரசியல் விழிப்புணர்வுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள், ‘மண் சுமந்த மேனியர்’ போன்ற நாடகங்கள், தெருக்கூத்துக்கள் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக மறுமலர்ச்சிக் கழகம், கலாச்சாரக் குழு முன்னின்று மக்கள் மயப்படுத்தியது. இளைஞர்களையும் யுவதிகளையும் தமிழீழ விடுதலை இயக்கங்களை நோக்கித் தள்ளியதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் கணிசமான பங்களிப்பு இருந்தது. தமிழீழ விடுதலை இயக்கங்களின் போராளிகள் முதல் அரசியல் பொறுப்பாளர்கள் வரை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பொறுப்புக்களை ஏற்றிருந்தனர்.

அந்த முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வாழ்க்கைத்துணை என்ற பொறுப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே ஏற்றுக்கொண்டார். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கடத்திச் சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான விவசாயபீட இரண்டாவது ஆண்டு மாணவியான மதிவதனி ஏரம்புக்கும் வே பிரபாகரனுக்கும் 1984 ஒக்ரோபர் 1ல் தமிழகத்தில் திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது.

கெ பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன், ராஜசிங்கம் நிர்மலா, மு நித்தியானந்தன் ஆகியோர் புலிகளின் ஆரம்ப கால முக்கிய உறுப்பினர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் பின்னைய இருவரும் எண்பதுகளின் நடுப்பகுதியிலேயே புலிகளில் இருந்து வெளியேறினர். சிதம்பரநாதன் (முன்னாள் ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதனின் கணவர்), கஜேந்திரன் செல்வராஜா, மு திருநாவுக்கரசு ஆகியோர் பிற்காலங்களில் முக்கியமாக அறியப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள்.

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய முக்கிய விடுதலை இயக்கங்கள் அனைத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆதரவுத்தளம் இருந்துள்ளது. ஆனாலும் புலிகளின் உறுப்பினர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவமும் பிரபல்யமும் ஏனைய இயக்கங்களில் இருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கோ மாணவர்களுக்கோ கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் ஆதரவை இழப்பது அல்லது பகைப்பது எந்தவொரு விடுதலை இயக்கத்திற்கும் விருப்பமான விடயமாக இருக்கவில்லை.

ரெலோ அழிப்பு – இயக்கங்களில் இராணுவச் சமநிலையில் மாற்றம்:

முற்றுமுழுதான இராணுவச் சிந்தனையில் இருந்த விடுதலை இயக்கங்களின் இராணுவப் பிரிவுகள் அது பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவமனை வாசலில் வைத்து ரெலோ இயக்கத் தளபதிகளில் ஒருவரான தாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். பொது மக்களும் காயப்பட்டனர். அதற்கு எதிரான போராட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. இப்போராட்டத்திற்கு எதிராக ரெலோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல் யாழ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இவ்வாறான பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால் ரெலோ இயக்கத்தின் செல்வாக்கு கீழ்நிலைக்குச் சென்றிருந்தது. ரெலோவினை அழித்தொழிப்பதற்குக் காத்திருந்த புலிகளுக்கு இது சாதகமான சூழலாகவும், தங்கள் செயற்பாட்டை விளக்குவதற்கான அரசியல் காரணத்தையும் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து 1986 ஏப்ரல் 29 க்கும் மே 6க்கும் இடைப்பட்ட காலத்தில் புலிகள் ரெலோ இயக்கத்தினரையும் அதன் தலைமையையும் வேட்டையாடினர். ரெலோ இயக்கம் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக பேராசிரியர் க சிவத்தம்பி சில முயற்சிகைள எடுத்தபோதும் அது எவ்வித பலனையும் அளிக்கவில்லை. ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கங்களிடையே இருந்த இராணுவச் சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. புலிகளுக்கு சரிசம பலத்தில் இருந்த ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதன் மூலம் புலிகள் ஒற்றைத் தலைமையையும் இராணுவ வலிமையையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். ஏனைய இயக்கங்கள் இராணுவ ரீதியாக அவ்வளவு பலம்பொருந்தி இருக்கவில்லை. அதனால் புலிகளின் கரம் ஓங்க ஆரம்பித்தது. அவர்கள் ஒவ்வவொரு விடயத்தையும் இராணுவ ரீதியில் அணுகத் தலைப்பட்டனர்.

பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் மரணமும் அதற்கு எதிரான போராட்டங்களும்:

ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டு ஆறு மாதங்களில் 1986 நவம்பரில் அப்போதைய புலிகளின் யாழ் மாவட்டத்தளபதி கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்)வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மாணவன் விஜிதரன்  கடத்திச் செல்லப்பட்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழகத்தில் செயற்பட்டு வந்த மறுமலர்ச்சிக் கழகத்தை விமலேஸ்வரன் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அணுகினர். ஆனால் பின்னாளில் புலிகளின் ஐபிசி வானொலிக்கு பொறுப்பாக இருந்த பல்கலைக்கழக மாணவர்களான சர்வேஸ்வரன், சிவரஞ்சித் ஆகியோர் அன்று அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் விமலேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களைக் கூட்டி ‘விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக்குழு’ வை உருவாக்கினார்.  இக்குழுவினுள் விரைவில் சபாநாவலனும் உள்வாங்கப்பட்டார். அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன் சபாநாவலனின் அழுத்தத்தினால் விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக் குழுவினுள் இணைத்துக் கொள்ளப்பட்டார். ஒன்பது பேர் கொண்ட குழுவே விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பல்வேறு போராட்டங்களையும் சகமாணவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்தது. குடாநாட்டுப் பாடசாலைகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இதுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் செயற்பட்ட ஈபிஆர்எல்எப் அமைப்பு ஒரு உந்துசக்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டங்களுடன் தொடர்புபட்ட தற்போதைய தமிழரங்கம் இணையத்தளத்தின் ஆசிரியரும் அப்போது பல்கலைக்கழக மாணவருமாகிய பி இரயாகரன் புலிகளால் கடத்தப்பட்டு தடுத்த வைக்கப்பட்டிருந்த போது தப்பித்தார். மற்றுமொரு பல்கலைக்கழக மாணவனான சபாநாவலன் (இனியொரு இணையத்தள ஆசிரியர்) மற்றும் விமலேஸ்வரனின் உதவியுடனும் உரும்பராய் கிராம உழைப்பாளர் சங்கத்தினரின் ஒத்துழைப்புடனும் அவர்களின் மறைவிடத்தில் சிறிதுகாலம் வாழ்ந்தார். என்எல்எப்ரி அமைப்பில் இருந்த பி இரயாகரனிடம் அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையின் பணம் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்ட விபரம் இவருக்குத் தெரியும் என்பதினாலேயே இவரைத் தாங்கள் கைது செய்ததாக புலிகளின் தளபதி மாத்தையா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கூறிக்கொண்டிருந்த போது பல்கலைக்கழக மாணவர்கள் மாத்தையாவுடன் முரண்பட்டு சத்தமிட்டனர். அப்போது ஏற்கனவே திட்டமிட்டவாறு திடீரென இரயாகரன் அங்கு வந்து மாத்தையாவின் குற்றச்சாட்டை மறுத்து புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு அம்பலப்படுத்தினார். இது புலிகளுக்கு குறிப்பாக மாத்தையாவுக்கு மிகுந்த சங்கடத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மாத்தையா கூட்டத்தின் இடையே எழுந்து செல்ல பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மாத்தையாவை பதில் சொல்லுமாறு சத்தமிட்டனர்.

இதற்கு முன்னதாக ரெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட பின் ஈபிஆர்எல்எவ் முகாமில் வைத்து சபாநாவலன் புலிகளால் கைது செய்யப்பட்டு நல்லூரில் வைமன் றோட்டில் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு மேற்கொண்டு எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கையொப்பம் இட்டு அவரின் பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனின் மரணம்:

விஜிதரன் கொல்லப்பட்டு ஓராண்டான 1988 நவம்பரில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஈவிலின் ரட்ணம் இன்ஸ்ரிரியூற்றில் பின்னாளில் புலிகளின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மு திருநாவுக்கரசு (திரு), சபாநாவலனை அழைத்து அவரையும் விமலேஸ்வரனையும் இரயாகரனையும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர்களுக்கு உயிராபத்து இருப்பதாகவும் எச்சரிக்கின்றார். திருநாவுக்கரசு மிகவும் பயந்த சுபாவமுடையவர். ஆரம்பத்தில் அவர் புலிகளுக்கு ஆதரவானவராக இருக்கவில்லை. அவருடைய பயமே அவரை புலியாக்கியதாகவும் ஒரு அபிப்பிராயம் பல்கலைக்கழக வட்டாரத்தில் உண்டு.

சபாநாவலன் மு திருநாவுக்கரசுவின் தகவலை இரயாகரனுக்குச் சொல்ல அவர் உடனடியாக தலைமறைவாகிறார். விமலேஸ்வரன் திருநாவுக்கரசுவின் பயந்த சுபாவத்தைக் காரணம் காட்டி அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. திருநாவுக்கரசுவால் காலையில் எச்சரிக்கப்பட்டது. மதியம் அளவில்   விஜிதரன் கொல்லப்பட்டு சரியாக ஓராண்டு காலத்தில் 1988 நவம்பரில் விஜிதரனுக்காக முன்னின்று குரல்கொடுத்த விமலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். விமலேஸ்வரனிடம் கல்விகற்ற ரியூற்றரி மாணவனின் இரட்டைச்சகோதரன் புலிகளின் உறுப்பினன் விமலேஸ்வரனை சுட்டுக் கொன்றார்.

விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராட விமலேஸ்வரனும் அவரின் சக மாணவர்களும் துணை நின்றனர். ஆனால் விமலேஸ்வரன் கொல்லப்பட்ட போது அதனைத் தட்டிக் கேட்பதற்கான சூழல் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. மரண பயத்தினால் அறிவியல் சமூகம் மிரண்டு போயிருந்தது. விமலேஸ்வரன் கொல்லப்பட்டதை மாலையில் அறிந்துகொண்ட நாவலனும் உடனடியாகத் தலைமறைவாகினார்.

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

Memorail_in_UnnivercityOfJaffnaஇந்த பல்கலைக்கழக மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் பற்றி கிட்டு குறிப்பிட்ட பொழுது ‘அப்ப சனம் கம்பஸ் பொடியல் சொன்னால் தான் கேட்கும். இப்ப சனம் நாங்கள் சொன்னாலும் கேட்கும்” என்று கூறியதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. கிட்டுவினது அக்கூற்று மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது யாழ் அறிவியல் சமூகத்தின் ஆளுமை முற்றாக நீங்கி புலிகள் பல்கலைக்கழகம் மீது தங்கள் ஆளுமையை நிறுவ முற்பட்ட காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் கலாச்சாரக் குழு, மறுமலர்ச்சிக் கழகம் ஆகியவையும் புலிகளின் செல்வாக்கினுள் வந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்ற புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் தமக்கு எதிரான சக்திகளை களையெடுத்த அதேசமயம் பல்கலைக்கழகத்தின் தலைமையையும் தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முற்பட்டனர்.

பல்கலைக்கழக உபவேந்தர் சு வித்தியானந்தன் கடத்தப்பட்டார்:

Vithiyanandan_S_Profஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருதடவை உபவேந்தர் தெரிவு செய்யப்படுவார். அதன்படி 1988 அத்தெரிவுக்கான காலமாக இருந்தது. பேராசிரியர் கைலாசபதியைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வளர்த்தெடுப்பதில் பேராசிரியர் வித்தியானந்தனின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தடவைகள் உப வேந்தராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், மருத்துவத்துறை, விவசாயத்துறை ஆகியவற்றை உருவாக்கியவர் பேராசிரியர் வித்தியானந்தன். இவர் மீண்டும் உபவேந்தராக போட்டியிட்டால் செனட்சபை அவரையே மீண்டும் உபவேந்தராகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பே அப்போது இருந்தது.

பேராசிரியர் வித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழழீழ விடுதலை இயக்கங்களுக்கோ எதிரானவரல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கோ அவர்கள் நினைத்தபடி எடுபட்டுச் செல்லக்கூடியவருமல்ல. அவர் தமிழரசுக் கட்சியின் பின்னணியைக் கொண்டவர். அதனால் அடுத்த உபவேந்தராக பேராசிரியர் வித்தியானந்தனை வரவிடாது தடுத்து தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஏ துரைராஜாவை நியமிப்பதே புலிகளுக்கு அவசியமானதாக இருந்தது.

புலிகளுக்காக இந்தக் காரியத்தைச் செய்ய புலிகளுக்கு தலையையும் இடதுசாரிகளுக்கு வாலையும் காட்டுகின்ற ஈரோஸ் முன்வந்தது. 1988ல் பேராசிரியர் வித்தியானந்தன் ஈரோஸ் இயக்கத்தினால் மொட்டையடிக்கப்பட்டு இம்சிக்கப்பட்டு அவரது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டார். அது தொடர்பாக பாசறை இயக்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பு அவர் ஊழல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பாசறை இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர். அவர்களுக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால் ஈரோஸ் பழியை அவர்கள் மீது போட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புலிகளின் விருப்பத்திற்கேற்ப பேராசிரியர் ஏ துரைராஜா தெரிவு செய்யப்பட்டார். அவரிடம் அதற்கான தகுதியும் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தெரிவு செய்யப்பட்ட முறையும் தெரிவு செய்யப்பட்ட நோக்கமும் ஒரு அறிவியல் சமூகத்தின் உயர்ந்த ஸ்தாபனத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தனது உள்ளுணர்வை இழந்தது. தங்களது உப வேந்தருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் முடியவில்லை. இதற்கு மற்றுமொரு காரணம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் வித்தியானந்தனின் சில நடவடிக்கைகள். மேலும் அவரால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள். பேராசிரியர் வித்தியானந்தனுக்கு அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குரல் எழுப்பாததும் அவருக்கு மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றின் காரணத்தால் அவர் வெகுவிரைவிலேயே காலமானார். அவர் அச்சம்பவத்திற்குப் பின் தான் இறக்கும்வரை அப்பல்கலைக்கழகத்திற்குச் செல்லவில்லை. அவரது உடலைக்கூட பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்ல அவரது பிள்ளைகள் மறுத்தனர். பின்னர் பல்வேறு வற்புறுத்தலால் அஞ்சலிக்காக அவரது உடல் பல்கலைக்கழகத்தில் சிறிதுநேரம் மட்டுமே வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக மைதானத்தில் இந்தியபடைகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்:

IPKF-Mil-8இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அதன் சுற்றுவட்டாரமும் புலிகளின் தளமாகி இருந்தது. 1987 யூலை 29ல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான முறுகல்நிலை ஒக்ரோபர் 12ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட மைதானத்திலேயே யுத்தமாக வெடித்தது. இந்தியப் படைகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட புலிகள் இந்தியப் படைகள் தரையிறங்க முற்பட்ட பல்கலைக்கழக மைதானத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் பதுங்கியிருந்து தாக்குதலை நடாத்தினர். இதில் 30 வரையான இந்திய கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து பிரம்படியில்  இந்தியப்படைகள் மோசமான பழிவாங்கல் படுகொலைகளில் ஈடுபட்டனர். இதில் 50 பேர்வரை படுகொலை செய்யப்பட்டு ராங்கிகளினால் நெரிக்கப்பட்டு அவர்களது உடல் சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தியப் படைகளுக்கும் புலிகளுக்குமான யுத்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்தியப் படைகளின் கண்காணிப்பிற்குரிய இடமாகியது.

பல்கலைக்கழகத்தில் இலங்கை இந்திய இராணுவத்தின் தலையீடுகள்:

1983ல் யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை ஆரம்பித்த மாணவர்கள் இரண்டு மடங்கிலும் கூடுதலான காலத்தைச் செலவிட்டு 1990 இலேயே தங்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறக் கூடியதாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டங்கள், ஹர்த்தால், பகிஸ்கரிப்புக்கள், பல்கலைக்கழகம் மூடப்பட்டமை என்று பல்வேறு காரணங்களால் பட்டப்படிப்புப் பாடத்திட்டங்களை திட்டமிட்டமுறையில் மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு இலங்கை இந்திய இராணுவங்களின் தமிழ் பகுதிகள் மீதான நடவடிக்கைகள் முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் இலங்கை இராணுவமோ, இந்திய இராணுவமோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவோ அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு எதிராகவோ திட்டமிட்ட தாக்குதல் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் நாளாந்த இயக்கத்தைப் பாதித்து இருந்தது.

மேலும் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போது புலி ஆதரவாளர்கள் சிலர் இராணுவத்தை நோக்கி கல்எறிந்து இராணுவத்தைக் காயப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவன் சத்தியேந்திரா மரணமடைந்தார்.

மருத்துவபீட விரிவுரையாளர் ரஜனி திரணகமவின் மரணம்:

Rajani_Thiranagama_Drஇந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முழுவீச்சுப் பெற்றிருக்கையிலும் புலிகள் தங்கள் மீதான எவ்விதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவ்வாறான விமர்சனங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கினர். இந்த விமர்சனங்கள் அறிவியல் சமூகத்தில் இருந்து வந்த போதும் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கியதில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்தவபீட விரிவுரையாளரும் மனித உரிமைப் போராளியுமான ரஜனி திரணகம 1989 செப்ரம்பர் 21ல் யாழ்ப்பாண மருத்துவபீடத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தவர். பின்னர் அவர்களுடன் கருத்தியல் ரீதியில் முரண்பட்டிருந்தார். அவருடைய ‘முறிந்த பனை’ என்ற நூலுக்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். முறிந்த பனை இலங்கை, இந்திய இராணுவங்களின் கொடிய மனித உரிமை மீறல்கள், தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் மனித உரிமைமீறல்கள் என்பனவற்றை அம்பலப்படுத்தி இருந்த போதும் விமர்சனங்கள் மீது எள்ளளவும் சகிப்புத்தன்மையில்லாத புலிகள் ரஜனி திரணகமவை படுகொலை செய்தனர். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட மிக முக்கியமான ஒருவர் ரஜனி திரணகம.

ரஜனி திரணகமவின் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் நடாத்த பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான போது ‘எமது விடுதலை இயக்கத்திற்கோ எமது தலைவருக்கோ எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என புலிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாயினை கறுப்புத் துணியால் கட்டி போராட்டத்தை நடாத்தினர்.

ரஜனி திரணகமவின் மரணம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (யுரிஎச்ஆர் – ஜெ) சக விரிவுரையாளர்களான கலாநிதி சிறிதரன் கலாநிதி ராஜன் கூல் ஆகியோரது இருப்பையும் அச்சத்திற்குரியதாக்கியது. இவர்கள் இன்னமும் தலைமறைவாக வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

சிவரமணி – செல்வி ஆகியோரின் மரணங்கள்:

Sivaramani_S மக்களுக்கான விடுதலையை வென்றெடுப்பதற்கு அறிவியல் சக்தியை சுதந்திரமாக செயற்பட புலிகள் அனுமதிக்கவில்லை. தனது அறிவியல் சக்தியை சுதந்திரமாக உலாவவிட்டு கவிதைகள் வடித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி சிவரமணி சிவானந்தன் புலிகளின் அழுத்தங்கள் காரணமாக தனது கவிதைகளை தீயிட்டு தன்னையும் அழித்துக்கொண்டார்.

Selviசிவரமணி சிவானந்தனின் நண்பர்களான செல்வி தியாகராஜா, மனோகரன் ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 1990ல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய காலத்தவரான சிதம்பரநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வி தியாகராஜா, மனோகரனின் கொலைகள் தொடர்பாக புலிகளுடன் நெருக்கமாக இருந்த சிதம்பரநாதன் அறிந்திருந்ததாக செல்வி தியாகராஜாவுக்கு நெருக்கமானவர்கள் இன்றும் வலுவாக நம்புகின்றனர்.

செல்வி கடத்திச் செல்லப்பட்ட காலத்தில் பென் என்ற சர்வதேச அமைப்பு அவருடைய எழுத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது. செல்வியுடன் அப்போது பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரடிய அங் சன் சூச்சி க்கும் இவ்விருது வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. செல்வியை விடுவிக்கும்படியும் அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்து இருந்தது. செல்வியின் தாயார் நீண்டகாலமாகத் தன்னுடைய மகள் உயிருடன் இருப்பதாகவே எண்ணி இருந்தார்.

அறிவியல் சுதந்திரத்திற்குத் தடை:

1990க்களின் முற்பகுதியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முற்று முழுதாக புலிகளிடம் சரணாகதி அடைந்தது. தங்களுக்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என்று கருதப்பட்டவர்கள் களையெடுக்கப்பட்டனர்.

‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தின் நோக்கமே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம் என்பன மறுக்கப்பட்டு சுதந்திரமான சிந்தனை மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. தமிழ் சமூகத்தின் அறிவியல் மையம் மௌனமானது. ஆயுதத்தின் மேலும் அதிகாரத்தின் மேலும் மட்டும் நம்பிக்கையும் காதலும் கொண்ட வே பிரபாகரனின் புலிகள் சிந்தனையற்ற துப்பாக்கி ஏந்தும் இயந்திர மனிதர்களை உருவாக்கினர். இந்த இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தொழிற்சாலையாக்கினர்.

யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் புலிகளின் கட்டுப்பாட்டில்:

Gajendran_Selvarajahபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாணம் மீண்டும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னரும் புலிகள் வன்னியில் இருந்து மாணவர்களுக்கு ஊடாக தங்கள் ஆளுமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது கொண்டிருந்தனர். கஜேந்திரன் செல்வராஜா போன்று பல இளைஞர்கள் வன்னிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்காக புலிகள் திறமையான மாணவர்களைக் கொண்டு பரீட்சையை எழுதி இவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பினர். இதன் காரணமாகவே கஜேந்திரன் செல்வராஜா குதிரைக் கஜேந்திரன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுக் கொண்டார். இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதிலும் பார்க்க புலிகளின் முழுநேர உறுப்பினர்கள் என்பதே உண்மை. இவர்களே பல்கலைக்கழகத்தை நிர்வகித்தனர். வெறும் கடிதத் தலைப்பு அமைப்புகளையும் சங்கங்களையும் உருவாக்கி அறிக்கை விடுவது போன்ற நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊர்வலங்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் பொங்கு தமிழ் போன்ற நடவடிக்கைகளிலும் இவர்களே ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்களில் திறமையான மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய புலமைப்பரிசில்கள் இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களும் சமாதான காலத்தில் நோர்வே அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கு நாடுகளுக்கு வந்தவர்களுமே பெரும்பாலும் மேற்கு நாடுகளில் புலிகளின் நலன்சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். மேற்கு நாடுகளின் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டுவதில் இவர்கள் முன்நின்றனர்.

விரிவுரையாளர் பொங்கு தமிழ் கணேசலிங்கத்தின் மீது பாலியல் குற்ற வழக்கு:

20.09.2005, யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம், ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்நாட்களில் முத்தையா யோகேஸ்வரி தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றவர் காணாமல் போய்விட்டார். அவர் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? அல்லது படுகொலை செய்யப்பட்டாரா? என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். இதனை தேசம்நெற் உறுதிப்படுத்தியும் உள்ளது. ஒரு அறியப்பட்ட பாலியல் குற்றவாளி இலங்கையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இன்னமும் அதே பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் தொடர்கின்றார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைத் தொழிலாளி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே தெரியவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் தங்கள் கல்வித் தகமையையும் பொறுப்பையும் துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகச் சூழலில் காணப்படுகின்றது. தொழில் ரீதியான ஒழுக்க கட்டுப்பாடுகளை இவர்கள் மீறுவதாகவும் அக்குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானதாக இருந்த போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண சமூகத்தைப் போன்றே மூடிய சமூகமாக இருப்பதால் இந்த ஒழுங்கீனங்கள் வெளிவருவதில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் பழமைவாதத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொண்டேயுள்ளது. இப்பல்கலைக்கழகம் புதிதாக வெளியில் இருந்தும் யாரையும் உள்வாங்க விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சூட்சுமங்கள் வெளியே வந்துவிடும் என்கின்ற அச்சமே. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களையே பிற்காலங்களில் விரிவுரையாளர்களாக்கியது. இந்தச் சுழற்சியிலேயே பல்கலைக்கழகம் இயங்குகின்றது.

பேராசிரியர் ரட்ணஜீவன் கூலின் நியமனமும் நாட்டைவிட்டு அவர் வெளியேறியதும்:

Ratna_Jeevan_Hooleஇந்தப் பின்னணியில் 2006ல் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவால் University Grants Commission உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராதணைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றிய இவரது கல்வித்தகமையும் அதற்கேற்ற நேர்மையையும் பல்கலைக்கழகச் சமூகத்தில் அவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தங்கள் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள், தங்கள் பொறுப்புக்களைச் செய்யத் தவறுபவர்கள் மத்தியில் இவர் கடுமையான ஒருவராகக் கணிக்கப்பட்டார்.

ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தார். அவர் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரானவர் என தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் ரட்ன ஜீவன் கூலுக்கு நெருக்கமானவர்கள் அவரை ஒரு தமிழ் தேசியவாதியாகவே காண்கின்றனர். ஆனால் புலிகளுக்கு ரட்ன ஜீவன் கூலில் இருந்த பிரச்சினை அவர் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவராக இருந்தது. புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக தங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்க புலிகள் முற்பட்டனர். ரட்ன ஜீவன் கூல் அதற்கு ஏற்ற ஒருவரல்ல. மிகுந்த ஆளுமை உடையவர். புலிகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடியவரல்ல. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ரட்ன ஜீவன் கூல் உபவேந்தராக்கப்படுவது யாழ்ப்பாண அறிவியல் மையத்தில் தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை புலிகள் உணர்ந்தனர். அவரது நியமனத்தை பல வழிகளிலும் எதிர்த்தனர். தனிப்பட்ட எச்சரிக்கைகளை அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர்க்கும் விட்டனர்.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. நடப்பில் உள்ள உபவேந்தருக்கான பதவிக்காலம் முடியும்போது பல்கலைக்கழகக் கவுன்சில் புதிய உபவேந்தருக்கான விண்ணப்பத்தைக் கோரும். அதற்காக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் பல்கலைக்கழகக் கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு விடப்படும். இந்த வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரது பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தனது தெரிவின் அடிப்படையில் உபவேந்தராக நியமிப்பார். ஜனாதிபதியின் தெரிவு கட்டாயமாக கூடுதலான வாக்கைப் பெற்றவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ரட்ன ஜீவன் கூலின் விடயத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் உறுப்பினர்களை ரட்ன ஜீவன் கூலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகளும் அவரது பல்கலைக்கழக ஆதரவு சக்திகளும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இருந்தும் ரட்ன ஜீவன் கூல் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். இது புலிகளுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதுடன் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நெருக்கடிகளையும் வழங்கினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பெயர்களில் இருந்து பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலை ஜனாதிபதி தெரிவு செய்தது ஆச்சரியமான விடயமல்ல.

புலிகளின் முகவர்களாக இயங்கிய கஜேந்திரன் செல்வராஜா தலைமையிலான பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தது. பல மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ரட்ன ஜீவன் கூலின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தனிப்பட்ட பயமுறுத்தல்கள் பல வகையிலும் அவருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் விடுக்கப்பட்டது. ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தலையில்லாத முண்டம் பெட்டியில் வரும்’, என்று மார்ச் 11 2006ல் மக்கள் எழுச்சிப் படை தொலைபேசி மிரட்டல்களை ரட்ன ஜீவன் கூலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விடுத்தனர்.

புலி ஆதரவு ஊடகங்களும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக்கி இருந்தனர். வழமையான துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக் கொடுப்பவர் என்ற பிரச்சாரங்கள் அப்போது தீவிரமாகி இருந்தது.

ஏப்ரல் 11ல் இதுபற்றிய அறிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்திருந்தது. அதில் ரட்ன ஜீவன் கூலுக்கு இருந்த உயிராபத்தை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

இவற்றினைவிடவும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிராக மதமும் பயன்படுத்தப்பட்டது. ரட்ன ஜீவன் கூல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். அதேநேரம் இந்து சமயத்தின் அடிப்படைவாதத்திற்கு எதிரானவரும் கூட. குறிப்பாக தமிழர்களிடையே உள்ள சாதியப் பாகுபாட்டிற்கு இந்துசமயத்தின் அடிப்படைவாதமே காரணம் என்ற அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு ரட்ன ஜீவன் கூல் இந்து சமயத்திற்கு எதிரான கத்தோலிக்கர் என்ற துருப்புச்சீட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

இவற்றுடன் ரட்ன ஜீவன் கூல் சிறந்த நிர்வாகியாகவும் அடிப்படை நேர்மை விடயங்களில் கடுமையானவராகவும் இருந்ததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வழமையாகிப் போன நிர்வாக ஒழுங்கீனங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் உள்வீட்டு அரசியல் சகிடதித்தங்கள் தொடரமுடியாது என்ற அபிப்பிராயமும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் இருந்தது. ரட்ன ஜீவன் கூல் உபவேந்தரானால் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் தொடர முடியாது என்பது மிகத்தெளிவாகி இருந்தது. அதனால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை.

புலிகளுடைய கடும்போக்கை கைவிட்டு ரட்ன ஜீவன் கூலை தனது கடமையைத் தொடர வெவ்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டது. புலிகளுடனும் இது தொடர்பாகப் பேசப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் தலையீடு செய்தது. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தித்தது. 

யாழ்ப்பாணப் பல்கைலக்கழகத்தை சிறந்தவொரு பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டங்களையும் முழுமையான பொறியியல்துறையை நிறுவும் முயற்சியையும் ரட்ன ஜீவன் கூல் வெளியிட்டு இருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் University Grants Commissionஇன் உறுப்பினராகவும் இருந்ததால் அவருக்கு யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. அவ்வாறு இருந்தும் அவ்வாறான ஒருவரை புலிகளும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் நிராகரித்தன.

இறுதியில் ரட்னஜீவன் கூல் நாட்டைவிட்டு வெளியேறுவதே தனதும் தனது குடும்பத்தினரதும் பாதுகாப்பிற்கு ஏற்றது என்று முடிவுக்குத் தள்ளப்பட்டார். தனது தொழிலில் இருந்து நீண்ட விடுமுறையைப் பெற்றுக்கொண்ட ரட்ன ஜீவன் கூல் ஏப்ரல் 20ல் இலங்கையைவிட்டு வெளியேறினார். கலிபோர்னியாவில் உள்ள Harvey Mudd Collegeல் 12 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து இலங்கைச் சூழலில் தனது பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றவர் மீண்டும் அமெரிக்க பல்கலைக்கழகத்திலேயே தனது கற்பித்தலைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தராக மீண்டும் ரட்ன ஜீவன் கூலை நியமிக்க முயற்சி:

Ratna_Jeevan_Hooleதற்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ரட்ன ஜீவன் கூலை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை தேசம்நெற்க்கு அறிய வந்துள்ளது. ரட்ன ஜீவன் கூல் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டுச் செல்லவில்லை. அவர் நீண்ட விடுமுறையை எடுத்துக்கொண்டே நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார். தற்போது நாட்டில் அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் அபிவிருத்திக்கு உந்துதலாக அமையும். 2006ன்
உபவேந்தர் பதவிக்காலம் 2009ல் முடிவுற்றது. அடுத்த மூன்றாவது ஆண்டு 2012 முற்பகுதியில் முடிவுறும். பெரும்பாலும் 2012 முற்பகுதியில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்படலாம். அல்லது அதற்கு முன்னதாக அவரை நியமிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதியிடம் உண்டு.

இறுதியாக …..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 36 ஆண்டுகளில் அதன் முற்பகுதியான காலகட்டமே ஒப்பீட்டு அளவில் ஓரளவு சுயாதீனத்துடன் இயங்கக் கூடியதாக அமைந்தது. அதன் பின் வந்த காலங்கள் பெரும்பாலும் ஆயுத நெருக்கடிக்குள் சுயாதீனத்தை இழந்தே இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது ஆளுமையை முற்றாக இழந்துள்ள நிலையே இன்று உள்ளது. இந்த நிலையில் சடுதியாகவும் வேகமாகவும் ஆனால் விவேகமாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அதனை உருவாக்கிய பேராசிரியர் கைலாசபதியின் இலக்கு நோக்கி – ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக – கொண்டு செல்வதற்கு மிகுந்த ஆளுமையும் பரந்த சிந்தனையும் உடைய ஒருவர் உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியானவர் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் என்பதற்கு அவரது கடந்தகால கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் ஒரு எடுத்துக்காட்டு.

Related Article:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்

Kayts_St_Antonys_Collegeஊர்காவற்துறை சென் அந்தனிஸ் கல்லூரியின் அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்தள்ளார். சென் அந்தனிஸ் கல்லூரியில் தங்கிக் கல்வி கற்கும் 50 மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொருளாதார ரீதியாகப் பொறுப்பெற்று அதற்கான நிதியுதவியை ஆரம்பித்து உள்ளது.

Kayts_St_Antonys_Collegeஊர்காவற்துறை சென் அன்தனிஸ் கல்லூரியில் 470 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 150 மாணவர்கள் இந்துக்கள். ஏகனயவர்கள் கத்தோலிக்கர். இம்மாணவர்களில் 110 மாணவர்கள் யுத்தத்தினால் அனாதரவானவர்கள். பெரும்பாலும் இந்துக்கள். இவர்களைப் பராமரிக்க அரசு மாதாந்தம் 88 000 ரூபாய்களை வழங்கி வருகின்றது. ஆனால் 110 மாணவர்களது உணவு உடை உறையுள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளுக்கு அரசு வழங்கும் நிதி சில தினங்களுக்கே போதுமானது. நிதிப்பங்களிப்பை அதிகரிக்கும்படி அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெளியில் இருந்து நிதி உதவியைக் கோரும் நிலைக்கு அருட்தந்தை நிர்ப்பந்திக்கப்பட்டு லிற்றில் எய்ட் டை அணுகி இருந்தார்.

லிற்றில் எய்ட் ஏற்கனவே மன்னாரில் டிலா பிரதேர்ஸின் பராமரிப்பில் இருந்த 50 மாணவர்களை வோல்தம்ஸ்ரோ பிள்ளையார் ஆலயத்துடன் இணைப்பை ஏற்படுத்தி அவ்வாலயமே தற்போது அந்த மாணவர்களின் பொருளாதாரப் பொறுப்பை மேற்கொண்டு வருகின்றமை அறிந்ததே. இதே போன்றதொரு ஒருங்கிணைப்பை ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரியிலும் லிற்றில் எய்ட் வெற்றிகரமாக சாத்தியமாக்கி உள்ளது.

சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து இரு வேறுபட்ட சமய நிறுவனங்கள் இணைந்து ஒரு பொது நோக்கில் செயற்படுகின்ற வேலைத்திட்டம் அண்மைய காலத்திற்கு முன் சாத்தியமாக இருக்கவில்லை. ஆனால் தற்போது அது சாத்தியமாகி உள்ளது என இந்த உதவி முயற்சிகளை முன்னெடுத்த லிற்றில் எய்ட் அறிவித்துள்ளது.

Kayts_St_Antonys_Collegeதங்களது பாடசாலை பல வருடங்களாக மதசார்பற்ற கல்லூரியாகவே செறப்பட்டு வருவதாகத் தெரிவித்த அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் இந்து மாணவர்கள் தங்கள் சமய விடயங்களை பின்பற்றுவதற்கு இந்துக்களுக்கான சமய அறை ஒன்று இந்துக் கடவுள்களின் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

யூன் 23ல் லிற்றில் எய்ட் அமைப்பு குழு ஒன்று ஊர்காவற்துறைக்குச் விஜயம் ஒன்றை மேற்கொண்டது. இதில் லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எய்ட் இன் இலங்கைப் பிரதிநிதி டொக்டர் நிமால் காரியவாசம் மற்றும் ஆனந்தகுமார் கபில கொரலகே சாகரா ஹெற்றியாராச்சி ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் எழுவை தீவு மற்றும் ஊர்காவற்துறை பொது மருத்துவமனைக்கும் வேறு வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகச் சென்று பார்வையிட்டனர்.

Kayts_St_Antonys_Collegeஇவர்கள் சென் அந்தனிஸ் கல்லூரியின் தலைவர் நவராஜாவையும் சந்தித்து உரையாடினர். நவராஜா கடந்த 15 வருடங்களாக அக்கல்லூரியுடன் தொடர்புபட்டவர். இவர் லிற்றில் எய்ட் குழுவினருடன் கல்லுரியின் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்காலத்திட்டம் குறித்து கலந்தரையாடினர்.

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மேற்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா யாழ்ப்பாணம் பதுளை ஆகிய பகுதிகளில் அனோதரவான அல்லது பெற்றோர்களால் பராமரிக்க முடியாத பிள்ளைகளைப் பொறுப்பேற்று அவர்களைப் பராமரித்து வருகின்றனர். அத்துடன் முதியோர் பராமரிப்பு இலவச கணணிப் பயிற்சிகள் பெண்களுக்கான தையல் பயிற்சிகள் என இவர்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தனது கணக்கு விபரங்களை வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Link: http://littleaid.org.uk/st-anthonys-college-kayts-report-on-the-orphanage

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

Arudkumar_Velayuthapillai_DrCharles_Antonythasஇலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் ‘அருட்குமார் இலங்கைப் பயணத்தின் முடிவில் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை’ என்றும் ‘குமரன் பத்மநாதனின் (கே பி) அபிவிருத்திப் பணிகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தார்’ என்றும் சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 29 2010) மாலை தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அருட்குமார் தமிழ்நெற் க்கு வழங்கிய செவ்வியில் குமரன் பத்மநாதன் ஒரு துரோகி என்ற வகையிலேயே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அருட்குமார் லண்டன் வந்த பின்னரேயே இவ்வாறு தனது கருத்தை மாற்றிக்கொண்டார்’ எனத் தெரிவித்தார். ‘தமிழ் சமூகத்தில் இன்னமும் சுயாதீனமாகக் கருத்தை வெளியிடுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்பதனையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது’ என்றும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

2006ல் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண கே பி யைச் சந்தித்தாக அருட்குமார் குறிப்பிட்டடுள்ளமை பற்றி சார்ள்ஸிடம் கேட்ட போது ‘அந்த உரையாடல் இடம்பெற்ற போது அருட்குமார் அங்கிருக்கவில்லை’ என்றும் ‘விமலதாஸ் அருட்குமாருக்கு கூறிய விடயத்தையே அருட்குமார் தவறாகப் புரிந்துகொண்டார்’ எனவும் சார்ள்ஸ் தெரிவித்தார்.

‘2006ல் தாய்லாந்தில் கபில ஹத்துரசிங்க பணியில் இருந்தபோது கே பியை தேடித் திரிந்தது பற்றிய விடயமே நகைச்சுவையாகப் பரிமாறப்பட்டது’ எனவும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

அருட்குமார் குறிப்பிட்டது போல் ‘சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளுடைய பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி எதுவும் பேசப்படவில்லை’ என்று தெரிவித்த சார்ள்ஸ் ‘இலங்கையில் தமிழ் மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்றே  கேட்டுக்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்காகவே இந்த விஜயத்தை ஏற்பாடு செய்ததாக அருட்குமார் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அவ்வாறான நோக்கம் இருந்ததாக தனக்குத் தெரியவில்லை’ என்றும் ஆனால் ‘தங்களுடைய நோக்கம் தமிழ் மக்களை மேம்படையச் செய்ய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

அருட்குமாரின் கருத்துக்கு மாறாக ‘நான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சில பணிகளைச் செய்ய முடியும் எனக் கருதுகிறேன். அதற்காக மீண்டும் இலங்கை செல்வேன். எனது மக்களுக்கு உதவித் திட்டங்களை முன்னெடுப்பதே எனது நோக்கம். அந்த மக்கள் பொருளாதார விடுதலையைப் பெறுவதே தற்போது மிக முக்கியமானது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இந்த விஜயம் தொடர்பாக பயணத்தை மேற்கொண்டவர்களது அறிக்கையொன்று தயாராகிக் கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ். அருட்குமார் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கும் போது எவ்வாறு இந்த அறிக்கையை வெளியிட முடியும் எனக் கேட்டபோது ‘அவர் தவிர்ந்த ஏனையவர்களின் உட்பாட்டுடன் இன்னும் சில தினங்களில் அவ்வறிக்கை வெளியிடப்படும்’ என சார்ள்ஸ் தெரிவித்தார்.

சார்ள்ஸ் அன்ரனிதாஸ் இன் முழுமையான நேர்காணல் அடுத்தவாரம் முற்பகுதியில் தேசம்நெற் இல் முழுமையாக வெளியிடப்படும்.

இலங்கை சென்ற புலி ஆதரவுக்குழுவின் சார்ள்ஸ் – அருட்குமார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்து வெளியிட்டு உள்ளனர்!

 புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் சூடான சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. யூன் 15 முதல் யூன் 20 வரை லண்டன், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்டகுழு கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் அழைப்பில் இலங்கை சென்று திருப்பி இருந்தது. நாடு திரும்பியவர்கள் ஒரு வாரகாலமாக மௌனம் காத்தனர். தேசம்நெற், ரிபிசி ஊடகங்கள் இலங்கை சென்று திரும்பியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் மறுநாளே அவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்தனர்.

இந்த விஜயம் தொடர்பாக தேசம்நெற், ரிபிசி இல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிபிசி தமிழோசையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டவர்களில் ஒருவரான சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 28 2010) ஒரு நேர்காணலை வழங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை, ‘டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் பயணம் செய்யவில்லை. அவ்விஜயம் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை’ யென அவ்வமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நெற் டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நேர்காணலை இன்று (யூன் 29, 2010) வெளியிட்டது. ஆனால் இந்த நேர்காணல் இருநாட்களுக்கு முன் (யூன் 27 2010) பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நெற் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சார்ள்ஸ் இனதும் அருட்குமாரினதும் நேர்காணல்கள் முற்றிலும் முரண்பட்ட தகவல்களை வழங்குகின்றது. இலங்கைக்குச் சென்றது யார் யாரைச் சந்தித்தது, எங்கெங்கு சென்றது என்ற தகவலைத் தவிர ஏனைய உள்ளடக்கங்களில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களையும் தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த விஜயத்தினை கே பி யே ஏற்பாடு செய்ததாகவும் இந்த விஜயத்திற்கு முன்னதாகவே கே பி இங்குள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டதாகவும் இந்த நேர்காணல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சென்றவர்கள் கே பி யை முதலில் சந்தித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் படை அதிகாரிகளையும் சந்தித்தாக இவ்விருவருமே தெரிவித்துள்ளனர்.

சார்ள்ஸ் தனது பேட்டியில், ‘‘நாங்கள் இந்த அழைப்பிற்காக கனநாளாகக் காத்திருந்தோம். நாங்கள் வன்னி முகாம்களுக்கு, போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களுக்கு செல்ல விரும்புவதை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் பல காலமாகப் பதில் வரவிலை.’’ என்று தெரிவித்தவர், கே பி அவர்களின் ஏற்பாட்டால் இது சாத்தியமானதாகத் தெரிவித்தார். இவ்விஜயத்திற்கு முன்னதாக கே பி தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆனால் மற்றையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் சார்ள்ஸ் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த அருட்குமார், ‘‘என்னை வரச்சொல்லிக் கேட்ட ஆளிடம் நான் அங்கு வந்தால் பிரச்சினை இருக்காதா என்று கேட்க, அவர் சொன்னார், ‘ஸ்ரீலங்கன் கவர்மன்ற் செல்வராஜா பத்மநாதனுக்கால் தான் இதை அரேஞ் பண்ணுகிறது. அதால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. உங்களை ஒரு விஐபி போலத்தான் ரீற் பண்ணுவார்கள்’ என்று சொன்னார். அப்படி ஒரு உத்தரவாதத்தைத் தந்தபடியால்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.’’ என்று தெரிவித்து உள்ளனர்.

தங்கள் விஜயத்தின் போது பொதுமக்களைப் போராளிகளைச் சந்தித்தது பற்றி, ‘‘ஐடிபி காம்புகளுக்குப் போய் ஆட்களைச் சந்திக்க என்றுதான் போனது ஆனா அங்க வின்டோவால் பார்த்தமாதிரி எங்களை பிறியா சந்திக்கவிடவில்லை. எங்களைச்சுற்றி முன்னாலை பின்னாலை எல்லாம் சுற்றிக்கொண்டு நிண்டவை. ஆக்களை அங்கு என்ன நடக்குது என்று சொல்ல விடேல்லை. 16ம் திகதி கிளிநொச்சிக்குச் சென்றம். அங்கு மக்கள் ஒருத்தரையும் சந்திக்கவிடேல்லை. அடுத்தநாள் வவுனியாவில் 2007, 2008ல் இயக்கத்தில் சேர்ந்த போராளிகள் உள்ள பாடசாலைக்கு கூட்டிச் சென்றவை. அங்கையும் அவர்களுடன் தனிய கதைக்க விடாமல் அவை சுத்திக்கொண்டு நிண்டவை. பிறகு மனிக்பாமில் சோன் 4க்கு எங்களைக் கூட்டிச்செல்லக் கேட்க அவர்கள் அதை சாதுரியமாக விட்டுப்போட்டு சோன் 2க்கு கூட்டிச்சென்றார்கள். அங்க ஒராளிட்டை தம்பி எங்க இருந்து வந்தனி? என்ன படிக்கிறாய்? எந்தப் பள்ளிக்கூடம் என்று கேட்க அவருக்கு எந்தப் பள்ளிக்கூடம் என்று தெரியெல்லை. அவருக்கு கொன்ரினியூ பண்ணேலாமப் போச்சு அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு அவை ஆமியின்ர ஆள் என்று.’’ அருட்குமார் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி குறிப்பிடும் சார்ள்ஸ்,”மக்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பிரிஅரேஞ்மன்ற் மீற்றிங்கிலும் செய்யப்பட்டு இருந்தது. தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொது மக்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது. கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்களையும் சந்திக்கக் கூடியதாய் இருந்தது. விடுதலைப் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்று பார்க்கக் கூடியதாக இருந்து. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் ஏ எல் ஸ்ரூடன்சை மாத்திரம் தான் பார்க்கக் கூடியதாய் இருந்தது.’’

அருட்குமார் தனது பேட்டியில் சுயாதீனமாக யாருடனும் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்பயணம் முற்றிலுமாக இலங்கை அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயணம் என்பதை முழுமையாக அறிந்து சென்றிருந்த அருட்குமார் தன்னை சுயாதீனமாக மக்களையும் போராளிகளையும் சந்திக்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையை எப்படிப் பெற்றார். இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருடன் மேற்கொண்ட விஜயத்தில் என்ன சுயாதீனம் காண விளைந்தார். ஆனால் சார்ள்ஸ், ‘‘தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொதுமக்களையும் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது.’’ என்று பொசிட்டிவ் ஆகவே தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். சார்ள்ஸ் இவ்விஜயத்தை பொசிடிவ்வாகவே அணுகி உள்ளதை அவருடைய பல பதில்களில் இருந்து காணலாம்.

குமரன் பத்மநாதன் பற்றி அருட்குமார், ‘‘நான் இங்க இருந்து வெளிக்கிட்டுப் போகேக்க செல்வராசா பத்மநாதனுக்கால ஏதாவது செய்யலாம் என்று நினைச்சுத்தான் போனது. அங்க திரு கோத்தபாய ராஜபக்ச உள்ளுக்கு வரேக்க செல்வராஜா பத்மநாதன் எழுந்து அவரை ஆரத்தழுவ முற்பட்டார். அதே எனக்கு பார்க்க ஒரு அந்தரமா இருந்திச்சு. கபில ஹெந்தவிதாரனவின்ர மாஸ்டர் மைன்ட்ல தான் இதெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தான் நான் நினைச்சன். ஆனா பிறகு இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் சொல்கிறார் நான் இவரை 2006ல் சந்தித்தனான் என்று. எனக்கு 2006ல் எங்கு சந்திச்சவை என்று விளங்கேல்ல. என்னோட வந்த ஆக்களும் அதைத்தான் யோசிச்சு இருக்கினம். அந்தக் கேள்வியை திரு செல்வராஜா பத்மநாதனிடம் திருப்பிக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. அவர்கள் சொல்ல வாறது என்ன என்றால் உங்களுக்காளையோ வேறுவழியாலையே டயஸ்போராவை காலடியில் கொண்டுவருவம் இதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.’’ என்றார்.

குமரன் பத்மநாதன் பற்றிய சார்ள்ஸின் கருத்து அருட்குமாரின் கருத்தில் இருந்து முற்றாக மாறுபட்டதாக இருந்தது. ‘‘எங்கட மக்களை நாங்கள் பார்க்க விரும்புகிறம். எங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ரிப்பியுஜி காம்புகளையும் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தம். குறிப்பாக பழைய போராளிகளைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தம். நாங்கள் எடுத்த முயற்சிளை குமரன் பத்மநாதன் தான் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடியதான சூழ்நிலையை உருவாக்கி இருந்தார். தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை நாடிநிற்கிறேன். மக்களின் ஒத்தழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டிருந்தார். இப்படி ஒரு சூழ்நிலைக்குள் பத்மநாதன் அவர்கள் வந்தது எங்களுக்கு சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது…. ஆனால் நாங்கள் கண்டது கே பி தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். அவரின் கையில் விலங்கிடப்படவில்லையே தவிர எப்போதும் நான்கு பேர் காவலுக்கு நிற்பதை நாங்கள் கண்டோம். அவர் இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குக் கீழ் இருப்பதாகச் சொல்லலாம் ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்துடன் கோப்ரேற் பண்ணுகிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சில விசயங்களில் உறுதியாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.’’ என்று சார்ள்ஸ் குமரன் பத்மநாதன் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார். அருட்குமாரின் கருத்துக்கள் நம்பிக்கையீனத்தின் அடித்தளத்தில் இருந்து உருவாகி இருப்பதையும் சார்ள்ஸின் கருத்துக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

‘‘எல்ரிரிஈ இன் காசுகள் நிறைய வெளிநாடுகளில் இருக்கின்றது அந்தக் காசை நாட்டை கட்டியெழுப்ப பாவிக்க வேண்டும் என்று கேட்க அப்ப நான் கேட்டன் ரிஆர்ஓ வின் பண்டுகள வைச்சிருக்கிறீங்கள் தானே அதில ஸ்ராட் பண்ணங்கோ என்று. அதுக்கு அவர் நீங்கள முதலில் அந்தக் காசுகளைக் கொண்டுவாங்கோ அதுக்குப் பிறகிட்டு இதுகளைப் பார்ப்பம் என்றார்.’’ என நிதி பற்றிய விடயத்தில் அருட்குமார் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் பற்றி சார்ள்ஸ் குறிப்பிடும் போது, ‘‘அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் என்னவாக இருந்தாலும் தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல கண்மூடித்தனமாக நடப்பதற்கு. நாங்களும் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பணத்தை திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்பது பற்றிய எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.’’ எனத் தெரிவித்தார். 

இந்த விஜயம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவுத்தளத்தில் இது கணிசமான பிளவை ஏற்படுத்தி உள்ளது. அருட்குமாரின் கூற்றுப்படி இந்த இலங்கை விஜயத்தை அந்த நோக்கிலேயே அரசு திட்டமிட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அருட்குமார் குமரன் பத்மநாதனை பச்சையாகத் துரோகி என்று சொல்லாமல் சுற்றிவளைத்து அதனையே தனது நேர்காணலில் வெளிப்படுத்தி உள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இனவாதத்தை நியாயப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் அருட்குமார் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டமே கே பி இன் தமிழர் புனர்வாழ்வு மையம் – ரீஆர்சி என்கிறார் அருட்குமார்.

அருட்குமார், சார்ள்ஸ் உட்பட ஒன்பதுபேர் சென்று வந்த இவ்விடயம் அவர்கள் இலங்கை செல்வதற்கு முன்னரேயே உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடப்பட்டு வந்தது. ‘இவர்கள் செல்கிறார்கள் என்ன விடயம் எமக்கு முன்னரே தெரியும்’, என பிரிஎப் உடன் நெருக்கமாக பணியாற்றுபவர் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரிஎப் இந்த விஜயம் பற்றி தங்களுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை என நேற்று (யூன் 28 2010) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மரணமாகிய செய்தியை ஜிரிவி ஒலி பரப்பியது. அச்செய்தி ஒலிபரப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜிரிவி தாக்குதலுக்கு இலக்கானது. அதனைத் தொடர்ந்து ஜிரிவி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ”தலைவர் தலைமறைவாகி பாதுகாப்பாக உள்ளார்”, என அறிவித்தது. இது பற்றி ஜிரிவி ஊடகத்தினரிடம் கேட்டபோது. ”நாங்கள் என்ன செய்ய. ரிவியை நடத்த வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். உண்மை அறிய மக்கள் விரும்பாவிட்டால் என்ன செய்ய?” எனப் பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பீடுகையில் ‘’வந்த தொலைபேசி அழைப்புகளும் மிரட்டல்களும் போனை எடுக்கவே பயமாக இருந்தது’’ எனவும் தெரிவித்தார்.

அருட்குமாரின் கருத்துக்கள் ஆச்சரியமானதோ அல்லது புதியவையோ அல்ல. அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் அறிந்தே உள்ளனர். அருட்குமார் இலங்கை செல்வதற்கு முன்பே இக்கருத்தை அறிந்தே வைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கைதியாக உள்ளவருடன் சேர்ந்து சுயாதீனமாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என எவ்வாறு எண்ணி இலங்கை சென்றார் என்பது ஆச்சரியமானது. இல்லையேல் தகவல் பெறுவதற்காக சென்றிருக்க முடியும்.

சென்றவர்கள் செல்லமுன் அல்லது வந்தவுடன் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அருட்குமாருடைய தொலைபேசி கூட செயலிழந்த நிலையிலேயே இருந்தது. மாறாக ஊடகங்கள் தகவல் அறிந்து செய்திகளை வெளியிட்டு கேள்விகளை எழுப்பிய பின்னரே அழுத்தங்கள் காரணமாக மக்களுக்கு கதை சொல்லப் புறப்பட்டு உள்ளார். அதுவே இந்த முரண்பட்ட தகவல்களின் பின்னணி பற்றிய பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

மக்களுக்கு இந்த விஜயத்தில் நடந்த உண்மைகளை அறிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. இந்த விஜயத்தில் பங்கு கொண்ட ஏனையவர்களும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதன் மூலமே மக்கள் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து ஒரு முடிவுக்கு வரமுடியும். 

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

Pirabakaran VKumaran_Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட் புரொஜக்ற் பீக்கனின் இறுதிக் கட்டத்தை மேற்கொள்வதில் முக்கிய நபராக உள்ளார். புலிகளின் பெரும்பாலான தலைமைகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களை களையெடுக்கும் முயற்சிகளுக்கு கே பி யின் பங்கு தற்போது இலங்கையில் மிக அவசியமான ஒன்றாகி உள்ளது. கே பிக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றியும் கே பி யை முதலமைச்சராக்குவது தொடர்பாகவும் இலங்கையரசு தீவரமான ஆலோசணைகளை நடாத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியை கே பி யை வைத்து முன்னெடுப்பதன் மூலம் முள்ளை முள்ளால் எடுக்கும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம் என இலங்கையரசு கருதுகின்றது. அதன் ஒரு அம்சமாக புலம்பெயர்ந்த ஒன்பது பேர்கொண்ட குழுவொன்று கே பியின் அழைப்பில் இரகசியமாக இலங்கை சென்றிருந்தது. இக்குழுவில் புலிகளின் முன்னணி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் சுகாதார அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வணங்கா மண் ஆகிய நிதிசேகரிப்பில் முன்னின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அல்லது அவ்வமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கலந்த கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அவ்விஜயம் பெரும்பாலும் பரகசியமாகி விட்டுள்ளது. இக்குழுவில் சென்றவர்கள் விபரம் வருமாறு:

பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், டொக்டர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
பிரான்ஸ்: கெங்காதரன்
சுவிஸ்லாந்து: டொக்டர் சந்திரா மோகன் ராஜ்
அவுஸ்திரேலியா: டொக்டர் ரூபமூர்த்தி
கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இவர்களில் நால்வர் லண்டனில் இருந்து சென்றுள்ளனர். இவர்களில் சார்ள்ஸ் அந்தோனிதாஸ் முன்னாள் ரெலோ முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். அவ்வியக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர். பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலிகளின் முன்னரங்க அமைப்புகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். கே பி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த போது அவரை விடுவிப்பதற்காக சில முயற்சிகளையும் எடுத்தவர். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள இவரை இவருடைய அண்மைய விஜயம் பற்றி கருத்தறிய அவருடன் தொடர்பு கொண்ட போதும் தகவல்பெற முடியவில்லை.

இந்த விஜயத்தில் லண்டனில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் காரைநகரைச் சேர்ந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளர். இவருடைய சகோதரர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருந்தனர். இவரும் பிரித்தானியத் தமிழர் பேரவையில் அறியப்பட்ட முக்கிய உறுப்பினர். பரமேஸ்வரன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தபோது பரமேஸ்வரனுடைய உடல்நிலையை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் வேலாயுதம் அருட்குமார் முக்கியமானவர்.

சிறிபதி சிவனடியார் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர். இவரது குடும்பமே புலிகளுக்கு மிக ஆதரவானவர்கள். இவரது சகோதரி புலிகளுடன் நிதிகொடுக்கல் வாங்கல் உறவுகளை மேற்கொண்டு இருந்தவர். ஒரு தடவை புலிகள் இவரிடம் இருந்து பெற்ற நிதியை திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையால் இவரும் இவரது கணவரும் தூக்கிட்டு மரணித்தனர். இருந்தும் சிறிபதி சிவனடியார் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவந்தவர். இவர் தீபம் தொலைக்காட்சியின் பங்குதாரர் செல்வகுமாரின் மைத்துனர். தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றி வருகின்றார். தீபம் தொலைக்காட்சிக்கான கலையகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தீபம் தொலைக்காட்சி இரகசிய சந்திப்பு ஒன்றையும் நடாத்தி இருந்தது. இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் சிறிபதி சிவனடியார் இலங்கையிலேயே நிற்பதாக அறியமுடிகின்றது. அவருடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.

இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

‘வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி கே பி வெளிநாடுகளில் இருந்து சென்ற குழுவினருடன் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்களை சேகரிப்பதிலும் அதனை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு வருமானத்தை வழங்குகின்ற 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாக ஜேன்ஸ் வீக்லி என்ற புலனாய்வுச் சஞ்சிகை 2007ல் மதிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிதியின் சிறுபகுதி மீண்டும் ஆயுத வன்முறையை மேற்கொள்ள விரும்புபவர்களின் கைகளுக்குச் செல்லுமாயின் அவர்களால் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஸ்தீரத்தன்மையை குலைக்க முடியும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது.

மே 18 2009ல் யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் முற்றுமுழுதாக புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடவில்லை என இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மத்தியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டும் உள்ளது. தப்பியோடிய புலிகளில் சிலர் இன்னமும் இலங்கையின் காட்டுப் பகுதிகளில் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக ஊடகங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. ஆங்காங்கு இராணுவ வீரர்கள் ஒரு சிலர் காயமடைந்து அல்லது மரணமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன. இவை புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் நிகழ்வதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத நிலையொன்று உள்ளது. அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீபன் சார்க்கரின் ஹாட் ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு போராளியின் வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருவதற்குள்ள பல காரணங்களில் முக்கிய காரணமாக இருப்பது புலிகள் மீண்டும் தங்களை ஒழுங்கமைக்க முற்படும் போது, விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் அவர்களினால் இயக்கத்திற்குச் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதே. அதனாலேயே கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை விடுவிப்பது காயப்பட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் முற்றுமுழுதான மனமாற்றத்தை ஏற்படுத்தவே கே பி மற்றும் வெளிநாட்டுக் குழுவினர் இந்தப் போராளிகளைச் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் கைப்பற்ற 12 மாதங்களை ஒதுக்கி 3 ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் போட்டு அதனை வெற்றிகரமாகவும் அரசு நிறைவேற்றியது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றியது.

இதன் மூலம் புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகள் (அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை) முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி – தற்போதைய காலப்பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த புரொஜக்ற் பீக்கன் திட்டம் 2007ல் வெளியே கசிந்திருந்தது. இது பற்றிய விரிவான கட்டுரை ஏப்ரல் 7 2009ல் தேசம்நெற்றில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது புலிகளை களையெடுக்கின்ற இறுதி நடவடிக்கைகளில் இலங்கையரசு மிகத் தீவிரமாக உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2011 ஏப்ரலில் புலிகள் முற்றாக களையெடுக்கப்பட்ட பின்னரேயே நடாத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகளுடனான யுத்தத்தால் கிடைத்த இராணுவ வெற்றி சரத்பொன்சேகாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அடிபட்டுச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதாலும் ஜனாதிபதித் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இடம்பெற்றது.

புரஜக்ற் பீக்கனின் இறுதிக்கட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைக் களையெடுக்கின்ற நடுநிலையாக்குகின்ற முயற்சிகளுக்கு புலிகளையே அரசு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. உள்நாட்டில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையில் கிட்டத்தட்ட போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்தது போன்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பு யுத்தத்தினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் புலிகளின் தலைமைகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றுத் தலைமையின்றி ஆளுக்காள் ஆழமான சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். இருந்தாலும் இந்த வெளிநாட்டுப் பிரிவில் ஒரு பகுதியினர் மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுத வன்முறையை உருவாக்கத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இவர்கள் அங்கு காடுகளில் பதுங்கியுள்ள மீளிணைகின்ற புலிகளுக்கு ஒரு பின்பலத்தை பொருளாதார பலத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு நம்புகின்றது.

அண்மைக் காலமாக ஒட்டுக்கேட்கப்படும் தொடர்பாடல்கள் புலிகளின் நடமாட்டங்களை உறுதிப்படுத்துவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மே 18 முடிவில் சரணடைந்தவர்களில் புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், அவர்கள் புலிகள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பெரும்தொகைப் பணத்தைச் செலுத்தி முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைக்கு வெளியே சென்றுவிட்டதையும், இலங்கை இராணுவத்தரப்பு தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். யுத்தத்தின் இறுதிநாளில் இலங்கைப் படையிடம் சரணடைந்த மு திருநாவுக்கரசு குடும்பத்தினர் முகாமை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு தப்பித்த பலர் இந்தியா, மலேசியா, வியட்நாம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் யாராவது மீளிணையும் புலிகளுக்கு தலைமை கொடுத்து நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் இலங்கை இராணுவத்தரப்பில் தற்போது வெளிப்படுகின்றது. அதனைத் தவிர்ப்பதற்கும் கையாள்வதற்கும் கே பி யின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அரசு ஆராய்கின்றது.

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக கே பி க்கு பொதுமன்னிப்பு அழிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல யூன் முற்பகுதியில் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கே பி வெளியிட்ட தகவல்களால் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் பல சொத்துக்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது’ என்றும் தெரிவித்தார். ஆயினும் அச்சொத்துக்களின் பெறுமதி பற்றியோ அல்லது அவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா என்ற தகவல்களையோ அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார். ‘மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்’ என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

2009 மார்ச் 27 – 29 ல் வெளிநாட்டுத் தமிழர்கள் குழு இலங்கை அரசின் அழைப்பில் தலைநகர் கொழும்பு சென்றது. ‘ஸ்ரீலங்கன் டயஸ்பொறா டயலொக்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முக்கிய தலைவரான திரு கே பத்மநாதன் உடன் இலங்கை அரசு ஒழுங்கான தொடர்பில் இருப்பதாக அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச கே பியை அழைக்கும் போது திரு கே பத்மநாதன் என்று கௌரவமாகவே அழைத்திருந்தமையும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கே பி பெரும்பாலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளில் தலைமறைவாகவே செயற்பட்டு வந்தவர். 2007 செப்ரம்பர் 10ல் கே பி பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ற் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாழும் நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் தாய்லாந்துப் பொலிஸார் இச்செய்தியை மறுத்து இருந்தனர். கே பி கைது செய்யப்பட்ட போதும் ஊழல் நிறைந்த தாய்லாந்துப் பொலிஸ் உயர் அதிகாரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்த நிலையிலேயே கே பி கைது செய்யப்பட்டதான செய்தி அல்லது வதந்தி வெளிவந்தது. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.

இச்சம்பவத்திற்கு முன்னதாகவே கே பி அவருடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார். பின்னர் 2008ன் பிற்பகுதியில் கே பி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2009ல் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் சிரேஸ்ட பிரதிநிதியாகவும் பிரதிநிதியாக புலிகளின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மே 18ல் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் கே பி தன்னையே புலிகளின் தலைவராக அறிவிக்கின்றார். அவ்வாறு ஒருவரை அறிவிப்பதற்கான அதிகாரம் கே பியைத் தவிர வேறு யாரிடமும் இருந்திருக்கவும் இல்லை. தலைவராக அறிவிக்கப்பட்ட கே பி மாறுபட்ட கருத்தடையவர்களையும் இணைத்து நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க வி உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கினார். அதற்காகப் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இரகசியத் தன்மையை மிகக்கடுமையாக பின்பற்றுகின்ற அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியில் இரண்டறக் கலந்த கே பி சாதாரணமாகவே பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அவரை பலரும் மலேசியா சென்றே சந்தித்து வந்தனர். அவர் தனது இருப்பு பாதுகாப்புப் பற்றி அதிகம் கவனம் கொண்டிருக்கவில்லை. தனது பாதுகாப்பை வேறுவழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தற்போது கொள்ளமுடியும்.

அதன் பின்னர். ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

தற்போது கே பிக்கு பொது மன்னிப்பு அழிப்பது பற்றியும் அவரை முதலமைச்சராக்குவது பற்றியும் அரசாங்கத்தரப்பில் தீவரமாக ஆலோசிக்கப்படுகின்றது. கே பி தற்போது இலங்கையில் இருந்து நாடுகடந்த தமிழீழக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் சுகாதார அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை என புலிகளின் முன்னரங்க அமைப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்.

கே பி முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை தன்னிடம் பேசியவர்களுக்குத் தெரிவிப்பதாக தேசம்நெற் அறிகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர் என்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்றும் அவர் தன்னைச் சந்தித்தவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கே பி யின் அழைப்பில் இலங்கை சென்றவர்கள் தொடர்பில் கே பியுடன் முரண்பட்டவர்கள் குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றச்சாட்டுக்களை வைப்பதில் அல்லது அவர்களுக்கு வழமைபோல் துரோகிப் பட்டம் வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. சென்றவர்களில் சிலர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.

கே பி யின் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் எவ்வளவுதூரம் வெற்றிகரமாகச் செயற்படப் போகின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாகப் பலவீனமடைகின்றனர். அதேநேரம் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிறுகுழுவினரினால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டும் உள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் மத்தியில் கே பி யின் நிலை முக்கிய விவகாரமாகி உள்ளது. கே பி யின் நிலையை விளங்கிக்கொள்வதில் சர்ச்சைகளும் சங்கடங்களும் காணப்படுகிறது. புலிகள் எப்போதும் அரசியல் அடிப்படையில் அணிசேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் நபர்களின் அடிப்படையிலேயே அணி சேர்ந்தனர். அதனால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைக் கையாள முடியவில்லை. தொடர்ந்தும் நபர்கள் தொடர்பான முரண்பாடுகளிலேயே காய்களை நகர்த்துகின்றனர்.

கே பி இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படுவது என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது தற்போது மில்லியன் பவுணுக்குரிய கேள்வியாக உள்ளது. 2006 மேயில் புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்ட போதே கே பி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.

புலிகளை அழிக்கின்ற புரொஜகற் பீக்கன் வீச்சுடன் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக இலங்கை இராணுவம் அதற்கு நன்றியைத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் எங்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை கே பி யும் முக்கியமான தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக லண்டனில் உள்ள இந்திய அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்த தமிழ் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

புலிகள் முற்றுமுழுதாக இலங்கை அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தநிலையில் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்த போது அவர்களின் பிரதான வெளித்தொடர்பு கே பி உடனேயே இருந்தது. அதேசமயம் புலிகளின் உள்ளுர் தலைவர்கள் தமிழக அரசியல்வாதிகள் நோர்வேயில் எரிக்சோல் ஹெய்ம், ரைம்ஸ் பத்திரிகையாளர் போன்றவர்களுடன் தொடர்பைப் பேணி வந்தனர். இவர்களுடைய படுகொலைகள் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் இவர்கள் மேற்குறிப்பிட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கே பி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து இருந்தால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் கே பி க்கும் தொடர்பு இருந்தால் புலிகளின் தலைமையை சரணடைய வைக்கும் முயற்சியிலும் சரணடையும் பட்சத்தில் சர்வதேச பாதுகாப்புடன் அவர்கள் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படுவார்கள் போன்ற நம்பிக்கைகளையும் கே பி அவர்களுக்கு வழங்கி இருக்கக் கூடும். ஆனால் இவை யாவும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அறுதியிட்டுக் கூறிவிடக் கூடியதல்ல.

அதேவேளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களின் பிரதிநிதியாக கே பி புலிகளாலேயே நியமிக்கப்பட்டு இருந்தவர். ஆனாலும் புலிகள் கே பி இல் மட்டும் தங்கி இருக்கவும் இல்லை. கே பி முன்னர் புலிகளின் ஒரு பகுதியினரால் ஓரங்கட்டப்பட்டு பின்னர் மீண்டும் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். கே பி மீதான சந்தேகம் புலிகளுக்கு ஏற்பட்டு இருந்தால் அப்படியான ஒருவரின் கையில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியது. பேச்சுவார்த்தைகளுக்கு கே பி புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்தையில் ஈடுபட்டவர்களிடையே குறிப்பாக கோதபாய ராஜபக்சவுக்கும் கே பி க்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டு இருக்கக் கூடும்.

யூன் 14 2009ல் தேசம்நெற்றுடன் கே பி தொடர்புகொண்டதில், 2002 பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேற வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வந்ததாகவும், தலைவர் தனது ஆலோசனையிலும் பார்க்க தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து தினம் கிடைக்கும் ஆலோசணைகளையே கூடுதலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கே பி பிற்காலங்களில் யுத்தத்தைத் தொடர்வதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை பெரும்பாலும் அறிய முடிகின்றது. கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறுகின்ற முடிவை எடுத்ததற்கும், புலிகளின் தலைமை தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பதே காரணம் எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த கருணா எடுத்த அதே முடிவுக்கே கே பியும் வந்துள்ளார்.

கே பி க்கும் இலங்கை அரசுக்குமான நெருக்கமான உறவு யுத்தத்தின் பிற்பகுதியில் கே பி பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது முதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் அதற்கு முன்பே கே பி இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் புலிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தனமாக அது அமையும்.

புலிகள் தங்களில் இருந்து மாறுபட்ட கருத்துடையவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் தங்களுக்குள்ளேயே துரோகிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளை யுத்தத்தின் ஆரம்பம் முதலேயே பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியதாக கே பி தேசம்நெற்றுக்குத் தெரிவித்து இருந்தார். இதனை கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் கூறியதாகவும் ஆனால் தமிழகத் தேர்தல் முடிவுகளில் தலைமை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது யுத்தமுனையில் இருந்து வந்த தகவல்கள் அனைத்தும் தாங்கள் தமிழீழத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்து வந்தன. மே 16 2009 இலேயே சூசை முதற்தடவையாக தாங்கள் ஆயுதங்களை மௌனிக்க வைக்கத் தயார் என்று அறிவிக்கின்றார். இப்பேச்சு புலிஆதரவு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. புலிகள் தாங்கள் சரணடையத் தயார் என முதலும் கடைசியுமாகத் தெரிவித்தது அப்போதே.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் திறமையாகப் பேரம்பேசக் கூடியவருக்கும் இந்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகக் கஸ்டம். ஓரிரு சதுர கிலோ மீற்றருக்குள் முழுமையாக இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் தலைமையை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் இல்லை. சரணைடைவதற்கான நிபந்தனைகளை விதிக்கவும் புலிகளிடம் ஒருபிடியும் இருக்கவில்லை. தங்களை சில மணிநேரத்திற்குக் கூட தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சரணடைவதற்கான முடிவை அவர்கள் அறிவித்தனர். சரணடைவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அங்கு நேரம் இருந்திருக்கவில்லை. அதனால் இலங்கை அரச தரப்பில் அல்லது இராணுவம் சொல்வதையெல்லாம் நம்புவதைத் தவிர அங்கு புலிகளுக்கோ, அவர்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே பி க்கோ வேறுவழி இருந்திருக்க முடியாது.

இலங்கை அரசு கே பி க்கு சில நம்பிக்கை சமிஙைகளை வழங்கி கே பி மூலமாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கலாம். இதுவரை புலிகளின் தலைமை சரணடைந்ததும் அவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் மட்டுமே உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. எவ்வாறு அது சம்பவித்தது என்பது இன்னமும் ஊகங்களுக்கே விடப்பட்டு உள்ளது.

இவற்றைத் தொடர்ந்து ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் இன்றியே கே பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்த வைக்கப்பட்டு இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது இலங்கை அரசாங்கத்தாலும் கே பி ஆலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்றே தற்போது அறிய வருகின்றது. இந்தக் கைதுக்கு முன்னதாகவே கே பி க்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கே பி யால் புலிகள் அமைப்பை நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க முடியாது. சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஆலோசிக்கப்படுவது போல் வட மாகாண முதல்வராக கே பி நியமிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்றும் கொள்ள முடியும். அங்கு எழக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவானாலும், காடுகளில் உள்ள புலிகள் மீளினைந்து சில தாக்குதல்களை மேற்கொண்டாலும், அதனை புலிகளை வைத்தே இலங்கை அரசினால் கையாள முடியும். இலங்கையின் எந்தக் காடுகளின் மூலைகளில் எப்படிப் பதுங்க முடியும் என்பது முதல் சர்வதேச பாதாள உலகில் எவ்வாறு ஆயுதங்களை வாங்கி எப்படிக் கொண்டுவர முடியும் என்பதுவரை அனைத்தையும் அறிந்தவர்கள், ஒரே பாசறையில் உண்டு உறங்கியவர்கள், இன்று இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதும் நன்கு தெரிந்தே இருக்கும்.

இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமைகொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று  அவருக்கு என் கருத்தைத் தெரிவிப்பதைவிட என்ன சொல்ல முடியும்.

புலிகளின் பெயரில் மட்டுமே தமிழ் மக்களின் விடுதலை இருந்ததே அல்லாமல் அவர்களின் அரசியலிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உணர்வோ சிந்தனையோ இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையின் பெயரில் மிகப்பெரிய அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளது. பானையில் இருப்பதே அகப்பையில் வரும் என்பதற்கமைய இன்று புலிகளில் எஞ்சி நிற்பது கே பி, பிள்ளையான், கருணா….. புலம்பெயர்ந்த நாடுகளை எடுத்தால் நெடியவன், ரூட்ரவி, தனம் ….

இந்த சூழலுக்கள் தான் தாயகத்தின் தமிழ் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. இவர்களையோ இலங்கை அரசாங்கத்தையோ நிராகரித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தமும் அதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஏற்படுத்திய அழிவும் சாதாரணமானதல்ல. இது தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை தடுத்தது மட்டுமல்ல பல பத்து ஆண்டுகள் பின்நோக்கியும் தள்ளியுள்ளது. மீண்டும் அந்த மக்களை கொண்டு வந்து வளர்ச்சிப் பாதையில் விடுவது அவசியமாகின்றது. அதற்கு எதிரான அரசியல் தடைகளை உடைப்பதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.

இச்சூழலில் தமிழ் மக்களின் அபிவிருத்தி கருதிச் செயற்படுபவர்கள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். தமிழ் மக்கள் என்ற பெயரில் செய்யப்படும் எந்த விடயமும் அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அதனை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கே பி யைச் சந்தித்தவர்கள் சந்திக்க முன்னரோ அல்லது சந்தித் பின்னரோ பின்னரோ தமது நோக்கம் பற்றி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யாதது அவர்கள் மீது பலவாறான சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கின்றது. இவ்வாறான மூடுமந்திர சந்திப்புக்கள் ஆரோக்கியமானதல்ல.

குறிப்பாக இக்குழுவில் பயணித்த சார்ள்ஸ் அந்தோனிதாஸ் ஜனநாயக நடைமுறை பற்றியும் வெளிப்படையான அரசியல் பற்றியும் பொது இடங்களில் கருத்து வெளியிட்டுவருபவர் இப்பயணம் குறித்து மௌனிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். தமிழ் சமூகத்தில் காணப்படும் இவ்வகையான மூடுமந்திரமான அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.

”ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன்.” பேராசிரியர் என் சண்முகரட்னம் – நேர்காணல் : த ஜெயபாலன்

Shanmugaratnam Nயூன் 9 மற்றும் யூன் 11 – 15 வரை நோர்வேயில் இரு கருத்தரங்குகள் இடம்பெற்றது. பேராசிரியர் என் சண்முகரட்னம் இவ்விரு கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் சண்முகரட்ணம் நோர்வேஜிய  வாழ்வியல் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் (University of Life Sciences) சர்வதேசச் சூழல் மற்றும் அபிவிருத்தி கற்கைகள் (International Environment & Development Studies) ஆய்வுத்துறையின் தலைவர் (Head of Research). இவர் நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பற்றியும் அதுதொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாகவும் தொலைபேசியூடாக வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
 
தேசம்நெற்: யூன் 9 மற்றும் யூன் 11 முதல் 15 வரையான கருத்தரங்குகள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடவும்.
 
பேராசிரியர் சண்: நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றி கேட்கின்றீர்கள். யூன் 9ல் போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும் (Post War Relief and Development) என்ற அடிப்படையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை Norwegian Centre for Peacebuilding (NOREF) என்ற அமைப்பு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நோர்வேயில் உள்ள வடக்கு கிழக்கின் மனிதத்துவ மற்றும் அபிவிருத்தியில் அக்கறையுடைய தமிழ் அமைப்புகளையும் தமிழ் ஆர்வலர்களையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
இதில் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களும் கலந்து கொண்டனர். எல்ரிரிஈக்கு ஆதரவான கருத்துடையவர்களும் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து உடையவர்களும் கலந்துகொண்டனர். இவற்றிலிருந்து மாறுப்பட்ட கருத்துடையவர்களும் அங்கு இருந்தனர். ஆயினும் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது. இதில் தமிழர்கள் 25 பேரும் முஸ்லீம் ஒருவரும் கலந்துகொண்டனர்.
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய மற்றும் மனிதாபிமான மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இக்கலந்துரையாடலின் மையப்புள்ளியாக அமைந்தது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்பதும் ஆராயப்பட்டது. இக்கருத்தரங்கு மையப்புள்ளியில் இருந்து விலகாமல் செல்வதில் வெற்றியீட்டியதுடன்  இதில் கலந்துகொண்ட பலரும் ஆரோக்கியமான பங்களிப்பையும் செய்தனர் என நான் நினைக்கின்றேன்.
 
 யூன் 11 முதல் 15 வரை இடம்பெற்ற மாநாடு ‘சமாதானத்தில் நோர்வே’ – ‘Norway in Peace’ என்ற தலைப்பில் இடம்பெற்றது. விஞ்ஞானியாகப் பணிபுரிந்து மனித உரிமைகளை முன்னெடுத்த நான்சென் என்பவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட Nansen Peace Centre – நான்சென் சமாதான மையம் என்ற அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  1938 ல் நான்சென் கல்வியியல் நிறுவனமாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இந்த மாநாட்டில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நாடுகளின் தற்போதைய நிலை பற்றியும் அந்நாடுகளில் உள்ள முரண்பாடுகளின் எதிர்காலம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
 
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகள் தொடர்பாகவும் உங்களின் மதிப்பீடு என்ன?
 
பேராசிரியர் சண்: இரு நிகழ்வுகளும் வேறு வேறு தளங்களில் நடைபெற்றது. யூன் 9 நிகழ்வு குறிப்பாக இலங்கையின் போருக்குப் பின்னான மனிதாபிமான உதவி வாழ்வியலைப் பலப்படுத்துவது  மற்றும் அபிவிருத்தி – இவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாத்திரம் தொடர்பானது. இது இலங்கையின் வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்றைய நிகழ்வு சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வேயின் சர்வதேசப் பங்களிப்பைப் பற்றியது. இது சர்வதேச ரீதியான நிகழ்வு. இலங்கையில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலும் தற்போது இலங்கை மீது சர்வதேசப் பார்வை திரும்பியுள்ள நிலையில் இலங்கை விவகாரம்  அதில் ஒரு அம்சமாக அமைந்தது.
 
இரு நிகழ்வுகளுக்கும் நான் அழைக்கப்பட்டு இருந்தேன். முன்னைய நிகழ்வின் ஒரு பிரிவுக்கு நான் தலைவராகவும் பயிற்சிப் பட்டறையின் ஒரு பிரிவை முன்னெடுப்பதற்கும் அழைக்கப்பட்டு இருந்தேன்.
 
பின்னைய நிகழ்வில் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். ‘இலங்கையின் 5வது சமாதானச் செயற்பாடுகளுக்கு ஒரு மீள்விஜயமும் மத்தியஸ்தராக நோர்வேயின் பாத்திரமும்’ – ‘Revisiting Sri Lanka’s Fifth Peace Process and Norway’s Role as Mediator/Facilitator’, என்ற தலைப்பில் எனது உரை அமைந்தது. எனது உரைக்கு முன்னதாக சமாதான ஆய்வு நிறுவனம் Peace Research Institute Oslo (PRIO) இன் இயக்குனர் உரையாற்றி இருந்தார். அவர் கடந்த கால சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் சமாதனச் செயன்முறை வடிவம்  Norway Model ஒரு பிரச்சினையானது என்ற கேள்வியை எழுப்பிச் சென்றார்.
 
அடுத்து உரையாற்றிய நான் நோர்வேயின் சமாதான நடவடிக்கைகளின் தோல்வியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் எல்ரிரிஈ இன் தோல்வி பற்றியும் குறிப்பாக தற்போது சிலர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு “இலங்கையின் பயங்கரவாத அழிப்பு வடிவம்” ஒன்றை Sri lanka Model யை உருவாக்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். எனது உரையின் சாரம்சத்தை அருகில் உள்ள இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.
 
இக்கருத்தரங்கிற்கு நோர்வேயின் சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் காணப்பட்ட அறிவியல் விவாதம் என்னை வியப்படைய வைத்தது. இதில் பல பெண்களும் இளையவர்களும் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்தவர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகள் பற்றி மிகவும் அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக விஞ்ஞானத்துறையில் கற்கின்ற மூன்று மாணவர்களும் மருத்துவப் பிரிவில் கற்கின்ற ஒரு மாணவியுமாக நான்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடனான உரையாடல் மாறுபட்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.
  
தேசம்நெற்: இந்நிகழ்வுகளின் பின்னணியில் எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகளின் தொடர்புகள் இருப்பதாக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
 
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவை சில தகவலறியாத கற்பனாவாதிகளின் கண்டுபிடிப்புகளே. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இவ்விரு நிகழ்வுகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. ஓன்று Norwegian Centre for Peacebuilding (NOREF) – நோரெப் இனால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. மற்றையது நான்சென் சமாதான மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டிலும் நான் உரையாற்றியது தான் குற்றம்சாட்டுபவர்களுக்கு இரண்டு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக  ஒன்றாகத் தெரியக் காரணம். அதைவிட அவர்களுக்கு எதுவும் தெரியாது. 
 
நான்சென் சமாதான மையம் என்னை அழைத்ததற்குக் காரணம் அவர்கள் இலங்கை மற்றும் நாடுகள் தொடர்பாக எனது கல்வியியல் செயற்பாடுகள் பற்றி அறிந்திருந்தனர். நோர்வே, ஐரொப்பா, ஆசியா, ஆபிரிக்கா என உலகின் பல பாகங்களிலும் முரண்பாடுகளும் அபிவிருத்தியும் பற்றிப் பொதுவாகவும் சுடான், இலங்கை பற்றிக் குறிப்பாகவும் பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் நான் பேசியுள்ளேன். நான் இரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன் என்பதற்காகவே சிலர் சம்பந்தமில்லாத இரு நிகழ்வுகளை ஒன்றாகப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.    
 
‘போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலுக்கு நோரெப் பல்வேறு அரசியல் பின்னணியை உடையவர்களையும் அழைத்து இருந்தது. அந்த நிகழ்வில் எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகளும் எல்ரிரிஈ உடன் முரண்பட்ட கருத்துடைய  அமைப்பினர் மற்றும் என் போன்ற தனிநபர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் இலங்கையில் செயற்படுகின்ற நோர்வேஜிய என்ஜிஓக்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர். நோர்வேஜிய வெளிவிவகார அமைச்சில் இருந்தும் சிலர் பார்வையாளராகக் கலந்துகொண்டனர்.
 
மொத்தத்தில் இச்சந்திப்பு ஆரோக்கியமானதாகவே அமைந்தது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் விசேட பிரிதிநிதியாகக் கலந்துகொண்ட எரிக் சோல்ஹெய்ம் போருக்குப் பின்னான வடக்கு கிழக்கின் மீள்கட்டுமானத்திற்கு  நோர்வே உதவும் என்றும் அதேசமயம் மனித உரிமைகள் விடயத்தில் ஐ நா வின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் சோல்ஹெய்ம் தனது உரையின் முடிவில் வெளியேறிவிட்டார். 
 
‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாடு உலகின் பல்வேறு பாகங்களிலும் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பற்றிய மீளாய்வாகவும் எதிர்காலத்தில் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாகவும் அமைந்தது. இதில் எல்ரிரிஈ இன் அல்லது அதன் முன்னணி அமைப்புகள் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதாக நான் அறியவில்லை. இங்கு அப்கானிஸ்தான், சறிஜேவோ, சேர்பியா மற்றும் முரண்பாடுள்ள பிரதேசங்களின் சூழ்நிலை, சமாதானத்தை ஏற்படுத்தும் அனுபவங்கள், நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. யூன் 12ல் நான் மாநாடு முடிவடைவதற்கு முன்னரேயே வேறு நிகழ்வு காரணமாக வெளியேற இருந்ததால் அதன் பின்னர் இடம்பெற்ற விடயங்களை அறிந்திருக்கவில்லை.    
 
தேசம்நெற்: யூன் 9 நிகழ்வுக்கு உங்களை அழைத்திருந்தது யார்? உங்களை நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் கந்தையா பஞ்சகுலசிங்கம் அழைத்ததாக தமிழரங்கம் இணையத்தில் தீவான் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதே கட்டுரையில் வஇச ஜெயபாலன், இசையமைப்பாளர் ரவிக்குமார், சுவடுகள் தம்பா, இளவாலை விஜேயேந்திரன் போன்ற உங்களுடைய நண்பர்கள் பற்றியும் அவர்கள் எல்ரிரிஈ க்கு விலைபோய்விட்டதாகவும் கட்டுரையாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
பேராசிரியர் சண்: தீவான் என்ற பெயரில் கட்டுரையை எழுதியவர் மிக மோசமான பொய்யான விடயங்களை எழுதி உள்ளார். நோர்வே ஈழத் தமிழர் பேரவையோ அல்லது பஞ்சகுலசிங்கம் கந்தையாவோ இந்நிகழ்வுக்கான அழைப்பிதழில் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் நோரெப் இனாலேயே அழைக்கப்பட்டு இருந்தோம். அந்த அமைப்பின் பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வாறான நிகழ்வுகளையும் சமாதானத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளையும் நோரெப் ஒழுங்கு செய்த வருகின்றது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்கர் ஒருவரினாலேயே தலைமை தாங்கப்படுகின்றது.
 
எழுந்தமானமான குற்றச்சாட்டை வைத்துள்ள தீவான்  எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லை. வைக்கவும் முடியாது. ஏனெனில் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அதில் சம்பந்தப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாமல் இதனை இணையம்  வெளியிட்டது அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயம். தீவானுக்கோ இதனை வெளியிட்ட இணையத்திற்கோ அடிப்படை விதியான தகவல்களில் இருந்து உண்மையைத் தேடிக்கண்டு பிடிக்கும் உணர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதுவே அடிப்படையற்ற ஊடகவியலுக்கு பொதுவான உதாரணமாக உள்ளது. இது அம்பலப்படுத்தப்படுவதுடன் கண்டிக்கப்பட வேண்டும்.
 
தீவான் யூன் 9 கருத்தரங்கை நோரெப் ஏற்பாடு செய்வதற்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை நோரெப் க்கு நிதி வழங்கியதாக மிகமோசமான ஆதாரமற்ற தகவலை வெளியிட்டுள்ளார். மிகவும் அறியப்பட்ட அமைப்புக்கு எதிராக மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு இது. வஇச ஜெயபாலன், ரவிக்குமார், இளவாலை விஜேயேந்திரன் ஆகியோர் யூன் 9 நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் – சமாதானத்தில் நோர்வே – மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. தம்பா யூன் 9 கருத்தரங்கில் மட்டும் கலந்துகொண்டார்.
 
தேசம்நெற்: எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகள் இவற்றின் பின்னணியில் இல்லாத நிலையில் இந்த நிகழ்வுகள் அல்லது குறிப்பாக யூன் 9ல் இடம்பெற்ற நிகழ்வு நீங்கள் எல்ரிரிஈ உடன் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் நீங்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்படும் நெடியவனுடன் செயற்படுவதாகவும் வந்துள்ள குற்றச்சாட்டுக்கள்….. ?
 
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான விசமத்தனமான குற்றச்சாட்டுக்கள். எல்ரிரிஈ இன் சர்வதேச உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் வேண்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதாக எவ்வித ஆதரமும் இன்றிக் குற்றம்சாட்டுவது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும். ஆதாரத்தை வைக்க வேண்டிய பொறுப்பு குற்றச்சாட்டை வைப்பவருக்கே உண்டு.
 
நான் நீண்டகாலமாக எல்ரிரிஈ மீது விமர்சனம் கொண்டவன். ஏல்ரிரிஈ இனுடைய இராணுவவாதத்தையும் குழுவாதத்தையும் விமர்சித்துள்ளேன். எல்ரிரிஈ முற்போக்கு அரசியலை முன்நிறுத்தவில்லை. அதன் விளைவுகள் மிக அழிவுகரமானது. அதனை இப்போது உலகம் கண்டுள்ளது. அதனுடைய குறும் தேசியவாதம் காரணமாக அதனால் சர்வதேச ரீதியாக முற்போக்கு சக்திகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சக்திகளையும் வென்றெடுக்கும் ஆற்றல் அற்றதாக இருந்தது.
 
மேலும் எல்ரிரிஈ தமிழீழம் என்று அமைக்கும் விடயத்திற்கும் நான் ஆதரவாளனல்ல. ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன். இதனை நான் மிக அண்மையாக கடந்த மாதம் ரான்ஸ்கறன்ட் இணையத்திலும் எழுதி இருந்தேன். தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்வியில் நான் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளேன் என்பது எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அறிவார்கள்.
 
தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
 
பேராசிரியர் சண்: தமிழ்நெற்க்கும் எனக்கும் எவ்வித உறவும் கிடையாது. நான் தமிழ்நெற்க்கு பேட்டி கொடுத்ததாக தமிழரங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நான் அவ்வாறு எந்தப் பேட்டியையும் தமிழ்நெற் க்கு வழங்கவும் இல்லை, அவர்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. இது மீண்டும் நிராகரிப்பை அடிப்படையாகக்கொண்டு மற்றுமொரு பொய்மையும் அல்லது அழமான வன்மத்துடன் வேண்டுமென்றோ அல்லது இரண்டுமாக சேர்ந்து எழுதப்பட்டு உள்ளது.
 
தேசம்நெற்: அவ்வாறு எனில் நீங்கள் தமிழ்நெற் இல் கருத்து வெளியிட்டதாக பி இரயாகரன் தமிழரங்கத்தில் மூன்று அல்லது நான்கு கட்டுரைகளே எழுதி உள்ளார்?
 
பேராசிரியர் சண்: இரயாகரனுடைய அறியாமைக்கு நான் பதிலளிப்பது சற்றுக் கடினம். ‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னரே குறிப்பிட்டது போல உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தேன். அதற்காக நான் தயாரித்த உரையின் ஒளித்திரைக் குறிப்புக்கள் (powerpoint presentation) மாநாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டும் உள்ளது. அதனை வைத்துக் கொண்டு தமிழ்நெற் ஒரு கட்டுரையை எழுதி யூன் 17ல் வெளியிட்டு இருந்தது. தமிழ்நெற் எனது ஒளித்திரைக் குறிப்புக்கள் இல் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து கட்டுரை எழுதியுள்ளது. எனது ஒளித்திரைக் குறிப்புக்களைப் பார்ப்பவர்கள், நான் எல்ரிரிஈ மீதும் விமர்சனம் கொண்டுள்ளதை காணலாம். அதே கட்டுரையில் தமிழ்நெற் ‘Tamil Circles’ – ‘தமிழ் வட்டங்கள்’ இனுடைய கருத்துக்களையும்  சேர்த்துக் கொண்டுள்ளது.
 
தமிழ்நெற் கட்டுரையின் ஒரு பந்தியை மொழிபெயர்த்த இரயாகரன் ‘‘ ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….. ’’ என்று நான் கூட்டிணைக்கும் ‘தமிழ் வட்டங்கள்’ கூறுவதாகக் கூறி என் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, தனிநபர் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
 
இரயாகரன் தனது கட்டுரையில் என் தரப்பில் இருந்து வந்ததாகக் கூறும் கருத்துக்கள் போன்று நான் ஓரிடத்திலும் எழுதவோ பேசவோ இல்லை. நான் கூறியதாக இரயாகரனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நெற்றில் ‘தமிழ் வட்டாரங்கள்’ (Tamil Circles – இது இரயாகரன் நடத்தும் இணையத்தைக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.) குறிப்பிட்டதாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தமிழ் வட்டங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இரயாகரன் என்னைத் தாக்கி உள்ளார். எனக்கு அந்த தமிழ் வட்டாரங்கள் யார் என்ன என்பது தெரியாது.

இரயாகரன் தமிழ்நெற் இல் இருந்த கட்டுரையை சரியாகப் விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டார் (மொழிப் பிரச்சினையாகவும் இருக்கலாம்?) அல்லது வேண்டுமென்றே அடிப்படையற்று, தனது  வாசகர்களைத் திசை திருப்புவதற்காக நான் ஒருபோதும் சொல்லாத எழுதாத கருத்துக்களை, எனது கருத்துக்களாக்க முயன்றிருக்கிறார்.
 
இராயாகரன் திறந்த மனதுடன் தமிழ்நெற் இல் உள்ள கட்டுரையை மீண்டும் ஒரு தடவை கவனமாக வாசிப்பாரேயானால் அவரால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். கருத்துக்களின் மூலத்தையும் விளங்கிக்கொள்வார். தமிழ்நெற் கட்டுரையையும் எனது ஒளித்திரைக் குறிப்புக்களையும் பார்ப்பவர்கள் (ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள்) தமிழ்நெற் கூறும் தமிழ் வட்டங்களின் கருத்துக்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
 
இராயாகரனுடைய சிறுபிள்ளைத்தனமான எழுத்துக்களுக்கும் மூன்றாம்தர விமர்சனங்களுக்கும் பதிலளிப்பது அர்தமற்றது. தகவலையும் தகவல் மூலத்தின் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாது செயற்படுபவர்களை என்னவென்பது.
 
தமிழ்நெற், தமிழரங்கம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள் ஏற்படுத்திய குழப்பமும் சர்ச்சையும் பற்றி என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக்களையும் பதில்களையும் நீங்கள் பதிவு செய்கின்றீர்கள். அதனை நான் மதிக்கின்றேன். ஆனால் தீவானோ அல்லது இராயாகரனோ என்னையோ அல்லது அர்களுடைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களையோ தொடர்புகொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை. இதிலிருந்து அவர்களுடைய நோக்கம் சேறடிப்பதே என்பது தெரிகின்றது. அவர்கள் இந்த வகையான  ஊடகத்துறையை வைத்துக் கொண்டு வெகுதூரம் செல்ல முடியாது. தமிழ் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு இது எவ்வகையிலும் பயன்தராது.
 
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
 
போராசிரியர் சண்: நான் முன்னமே குறிப்பிட்டது போல் இரு நிகழ்வுகளும் வோர்வேஜிய அரசால் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது இரு வேறு சட்ட ரீதியாகவும் அதற்கு வழங்கப்பட்ட ஆணைப்படியும் வேறுபட்ட அரசசார்பற்ற அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
 
நோர்வேஜிய அரசாங்கத்துக்கு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, ஓவ்வொரு அரசாங்கமும் தனக்கான வெளிப்படையான நிகழ்ச்சி நிரலையும் வெளித் தெரியாத நிகழ்ச்சிநிரலையும் கொண்டிருக்கும். எந்த ஒரு அரசாங்கத்தினதும் அரசியலை விமர்சன ரிதியாகப் பார்க்கின்ற சிந்தனை ஒருவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

என்னால் சொல்லக் கூடியது, நான் விரிந்த ஜனநாயகத் தளத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் கேள்விக்கு பேச்சுவார்த்தை, விவாதம் ஊடாக எவ்வாறு தீர்வுகாணலாம் என்பதிலேயே ஆர்வமாக உள்ளேன். மேலும் தாயகத்தில் சமூக, பொருளாதார பாதுகாப்பு, மக்களுடைய சுதந்திரம் – ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் (தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் மற்றும் ஏனையவர்கள்) தொடர்பாகவே எனது ஆர்வம் உள்ளது. இந்த வகையில் எங்களுடைய பணி ஐரோப்பாவில் உள்ள சம்பந்தப்பட்ட அரசுடன் அரசு சார்மற்ற முகவர்களுடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடவது.
  
தேசம்நெற்: இறுதியாக இன்றைய இலங்கை நிலைமைகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
 
பேராசிரியர் சண்: இலங்கையில் இன்னமும் போருக்குப் பின்னான சூழலையே (post war situation) காண்கின்றோம். இது முரண்பாட்டுக்கு பின்னான சூழலாக (post conflict situation) இல்லை. இவ்விரு சொல்லாடல்களுக்கு இடையேயும் பெரும் இடைவெளி உள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து உள்ளதே அல்லாமல் இலங்கையின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியில் முடிவுக்கு வரவில்லை. இலங்கை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அதனுள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அதனுள் அடக்கிவிடலாம் என்ற போக்கில் செயற்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானது.

நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச ரீதியாகவும் பெருமளவிலான தமிழர்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். காணி குடியேற்றம் போன்ற அரசின் கொள்கைகள் தேசிய இனப்பிரச்சினை கேள்வியை வேறொரு தளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு நகர்த்தி உள்ளதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 30 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு இருந்த தேசிய இனப்பிரச்சினைக்கான கேள்வியின் நிலை இன்றில்லை. இது இன்னுமொரு நேர்காணலுக்கோ அல்லது கருத்தரங்கிற்கோ உரியவிடயம். நான் இப்போது அதற்குள் செல்ல விரும்பவில்லை.

தமிழ் பகுதிகளில் அப்பகுதி மக்களின் ஈடுபட்டுடன் ஜனநாயக ரீதியான அபிவிருத்தி அவசியம். அதேசமயம் ஜனநாயக ரீதியாக தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன் வைக்க வேண்டும். இவையிரண்டும் நிகழும் பொழுதே இனங்களிடையேயான மீளுறவு ஏற்பட்டு நிரந்தர சமாதானம் சாத்தியமாகும்.

200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!

Jaffna_Hospitalமே 28ல் மருத்துவ கலாநிதி நிமால் காரயவாசம் தலைமையிலான லிற்றில் எயட் சமூகப் பணியாளர்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு 200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களைக் கையளித்தனர். பொதுவான நோய்களுக்கான அன்ரிபயோரிக்ஸ் மற்று அலர்ஜிக்கிற்கான அன்ரிகெஸ்ரமின்ஸ் ஆகியனவும் இந்த மருத்துவ அன்பளிப்பில் அடங்கி இருந்தது. யாழ் பொது வைத்தியசாலையின் மருத்தவ இயக்குனர் டொக்டர் பவான் லிற்றில் எய்ட் இன் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.

Medicine_to_Jaffna_LA‘‘யாழ்ப்பான பொது வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் இந்தக் காலகட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது மிக முக்கியமான விடயம்’’, என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி பொன்னையா அழ்வாப்பிள்ளை லிற்றில் எய்ட்க்கு தெரிவித்துள்ளார். ‘‘அண்மையில் வன்னியில் இடம்பெற்ற வன்முறைக் குழப்பத்தால் உதவி வேண்டியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை நான் கண்டுள்ளேன்””, எனத் தெரிவித்த கலாநிதி அழ்வாப்பிள்ளை ‘‘லிற்றில் எய்ட் சரியான தருணத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு மருத்துவ ரீதியில் உதவியளித்துள்ளது’’, எனத் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் எல்லையற்ற மருத்துவ அமைப்பான மெடிசின் வித்தவுட் பொர்டர்ஸ் அமைப்பு இம்மருந்துப் பொருட்களை லிற்றில் எய்ட்க்கு வழங்கி இருந்தது. வழமையாக இவ்வளது தொiகாயான மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்று விநியொகிப்பது நடைமுறை. ஆனால் இந்த அனுமதி லிற்றில் எய்ட் இன் பொறுப்பான நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையால் லிற்றில் எய்ட்க்கு வழங்கப்பட்டு இருந்து. அதனால் லிற்றில் எய்டே யாழ்ப்பாணத்திற்கான மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொண்டு இருந்தது.

இதுவரை லிற்றில் எய்ட் 1.52 மில்லியன் பவுண் பெறுமதியான மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணம், வவுனியா, நாவலப்பிட்டிய, பமுனுகம ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து இருந்தது. மேலும் மன்னார் மற்றும் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கும் மருந்துப் பொருட்களை இம்மாதம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட வைத்தியசாலைகளுடன் லிற்றில் எய்ட் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதுடன் அன்பளிக்கப்பட்ட மருந்துப் பொருட்களின் முறையான பயன்பாட்டை லிற்றில் எய்ட்டும் மெடிசின் வித்தவுட் போடர்ஸ் அமைப்பும் அவதானித்து வருகின்றது. இதுதொடர்பான விஜயம் ஒன்றை குளோபல் மெடிகல் எய்ட் மற்றும் லிற்றில் எயட் என்பன இலங்கைக்கு மேற்கொள்ள இருக்கின்றன. லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் குளோபல் மெடிகல் எய்ட்டுடன் யூன் 17 இலங்கை செல்லவுள்ளார். இவர்கள் மருத்துப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்வதுடன் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்திப்பர். http://www.youtube.com/watch?v=ZB7bTcM_Nzg

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!

ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.

ATN_Jewelersஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.

மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.

ATN_Jewelersஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தேசம்நெற் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியத்தின் 7 வது திரையிடல் நிகழ்வில் 5 குறும்படக் காட்சிகள்

Film_Screeningதேசம் நெற் இணையத்தளமும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து வழங்கும் 7வது திரையிடல் நிகழ்வு சேர்பிற்றன் சறேயில் இடம்பெறவுள்ளது. யூன் 12 மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்திரையிடல் நிகழ்வில் சதா பிரணவனின் இடி முழக்கம், பொன் சுதாவின் நடந்த கதை, பிரேமா சந்தானகுலத்தின் நோய் வீதி, ஜ வி ஜனாவின் மூன்று இரவு நாலு பகல், பாஸ்கரின் நதி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படங்கள் இந்தியாவிலும் ஜரோப்பிய திரைப்பட விழாக்களிலும் பரிசில்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2008 முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

7வது திரையிடல் நிகழ்வு:
     காலம்: 12.06.2010
     நேரம்:  மாலை 6 மணி
     இடம்: The Cornerhouse, 116 Douglas Road, Surbiton, Surrey.

    படத்தின் பெயர்                              நேர அளவு         இயக்குனர்

1) இடி முழக்கம்                                  21 நிமிடம்            சதா பிரணவன்

2) நடந்த கதை                                    23 நிமிடம்            பொன் சுதா

3) நோய் வீதி                                       20 நிமிடம்            பிரேமா சந்தானகுலம்

4) மூன்று இரவு – நாலு பகல்     21 நிமிடம்            ஜ.வி. ஜனா

5) நதி                                                         8 நிமிடம்            பாஸ்கர்

படங்கள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப் படும். சிற்றுண்டி- பானம் அத்துடன் இராப் போசனமும் வழங்கப்படும்.

கடந்த திரையிடல் நிகழ்வில் இலாபமாக வந்த £50.00  மன்னாரில் உள்ள பார்வை குறைந்த சிறுவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளோம்.

அன்பளிப்பு: £5.00  தனிநபர். சிறுவர்கள் அனுமதி இலவசம்.

தொடர்புகளுக்கு: ஆர் புதியவன்     07988  589 923
                                     த ஜெயபாலன்    07800  596 786

பிபிசி உலகசேவையில் முடிவுற்ற யுத்தம் பற்றிய நான்கு நாள் சிறப்பு நிகழ்ச்சி

Stephen_Sackur_HardTalkபிபிசி தொலைக்காட்சியின் உலக சேவையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஹாட் ரோக் இலங்கையின் வடபகுதியில் பதிவாக்கப்பட்டு உள்ளது. இன்று யூன் 7 முதல் நான்கு நாட்களுக்கு இலங்கை பற்றிய விசேட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தை இலங்கையரசு முடிவுக்கு கொண்டு வந்த முறை யுத்தத்தின் பின்னான சூழல் இனமுரண்பாட்டின் எதிர்காலம் ஆகிய விடயங்கள் இந்நிழ்ச்சியில் ஆராயப்பட இருப்பதாகத் தெரியவருகின்றது.

நான்கு நாள் நிகழ்ச்சியில் முதல் நாள்: ”தமிழர்களும் முறிந்த வடக்கும் – Tamils and the broken north” என்ற பதிவு இடம்பெறுகின்றது. இதில் ஹாட் ரோக் நிகழ்ச்சி வழங்குனர் ஸ்ரிபன் சக்கர் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் இன்னமும் காடுகளினுள் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தப்பி வந்த பொதுமக்கள் ஆகிய பல்வேறு தரப்பினருடனுமான நேர்காணல்களின் தொகுப்பு இடம்பெற இருக்கின்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ”அச்சத்தின் கீழ் ஜனநாயகம் – Democracy under threat” என்ற தலைப்பில் ராஜபக்ச சகோதரர்களிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் பற்றிய பதிவாக இது வருகின்றது.

முன்றாம் நாள் நிகழ்ச்சி ”தனது வாழ்க்கையை மீளக்கட்டமைக்கும் குழந்தைப் போராளி – Former Tiger child soldiers rebuilding their lives.” யின் கதையாக வருகின்றது.

இறுதியாக நான்காம் நாள் நிகழ்ச்சியில் இலங்கையில் மிகுந்த ஆளுமையும் அதிகாரமும் நிறைந்தவரான ஜனாதிபதியின் சகோதரர் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஹாட் ரோக்கின் ஹொட் சீற்றில் அமர்த்தப்படுகிறார். கோதபாய ராஜபக்சவுடனான நேர்காணல்.

இந்நிகழ்ச்சிகளை ஹாட் ரோக் நிகழ்ச்சிக்காக ஸ்ரிபன் சக்கர்க்கு வடக்கே யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிபிசி தெரிவித்து உள்ளது.

HARDtalk நிகழ்ச்சி நேரம்:
BBC NEWS CHANNEL (UK): Mondays, Tuesdays, Wednesdays and Fridays – 0430 and 2330
BBC WORLD NEWS: Mon to Thurs – 03:30, 08:30, 15:30, 20:30