ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!

ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.

ATN_Jewelersஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.

மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.

ATN_Jewelersஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

 • மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ
  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ

  மேலே ஏ.ரீ.என் நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிராக எழுதப்பட்டவைகள் முற்றிலும் சரியான தகவல்களல்ல. தமது சொத்துக்களை விற்று சீட்டுப்பிடித்தவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தங்கத்தின் தற்போதைய பெறுமதியை கொடுக்கின்றனர். சிலருக்கு தவணை கொடுத்திருக்கின்றனர்.

  Reply
 • kuperan
  kuperan

  தேசம் ஆசிரியருக்கு தகவலுக்கு நன்றி. தீவிர விசாரித்து சரியான தகவலை வெளியிடுவதெ பத்திரிகையாளனுக்கு அழகு

  Reply
 • john
  john

  புலிகளின் முகவர்கள் தமது வீட்டைவிற்று காசு கொடுதார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. அப்படி நடந்திருப்பின் வரவேற்றத்தக்க விடயம்.

  Reply
 • karuna
  karuna

  ஏமாறுபவர்களை பார்த்தீர்களானால் பேராசை உள்ளவர்களாக இருப்பார்கள். பேராசை எனும் பாவத்திற்கு கிடைத்த தண்டனையே ஏமாற்றம்.

  Reply
 • மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ
  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ

  ஜோன், நான் ஏ.ரீ.என் நகைக்கடை உரிமையாளர் தமது சொத்துக்களைத்தான் விற்று கொடுக்கவேண்டியதைக் கொடுக்கின்றனர் என எழுதியிருந்தேன். அது வீடு என்று எப்படி முடிவெடுத்தீர்கள். சொத்துக்கள் பல வகை அதிலொன்றுதான் வீடு. புலிகளின் முகவர்கள் பற்றிய உங்களின் கணிப்பு அனைத்து முகவர்களுக்கும் பொருந்தாது. சிலர் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். புலிப்பினாமியாக இருந்தாலும் கண்ணியமானவர்கள், நேர்மையானவர்கள் மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள் இப்பவும் தலைவன் இருக்கின்றார் என நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சிலர் நீங்கள் நினைப்பதுபோல மகாபாதகர்கள். புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தலைவன் கொல்லப்பட்டதை அறிந்து கவலைப்பட்டார்கள். ஆனால் இந்த கொடியவர்களோ இனி தம்மிடம் இருக்கும் புலிகளின் பணத்தையும் சொத்துக்களையும் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என ஆனந்தப்பட்டார்கள் .இந்தப் புலிப்பினாமிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.பூனைக்கு யார் தான் மணிகட்டுவது.

  Reply
 • BC
  BC

  //மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ -புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தலைவன் கொல்லப்பட்டதை அறிந்து கவலைப்பட்டார்கள்.//

  புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்!? என்று சொல்லப்படும் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள், புலிகளால் சுருட்டல் நடத்தியவர்கள், சில அப்பாவிகளுக்கும் தான் கவலை. மற்றயோருக்கு மகிழ்ச்சியான நாள்

  Reply
 • மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ
  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ

  பங்குச் சந்தையில் (ஸ்ரொக் மாக்கெற்றில்) சரிவு ஏற்பட்டால் யாரிடம் போய் முறையிடுவது? அண்மையில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பங்குச்சந்தையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் குடும்பத்தையும் கொலைசெய்து தாமும் தற்க்கொலை செய்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதற்க்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? அதே போலத்தான் இதுவும். தங்கத்தின் விலையேற்றம் காரணமாக ஏ.ரீ.என் நகைக்கடை உரிமையாளர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பினால் நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் பவுண் சேமிப்பை இழந்ததுள்ளனர். இதில் விவகாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மனிதாபிமான முறையில் கட்டிய பணத்தின் பெறுமதியைக் கொடுப்பதும், கொடுக்க முயற்ச்சிப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயம். பேராசை பெருநஸ்டம்

  Reply
 • George
  George

  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ //தங்கத்தின் விலையேற்றம் காரணமாக ஏ.ரீ.என் நகைக்கடை உரிமையாளர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பினால் நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் பவுண் சேமிப்பை இழந்ததுள்ளனர். இதில் விவகாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.//
  தங்கத்தின் விலையேற்றம் காரணமாக ஏரிஎன் ஜீவலர்ஸ் லாபமடைந்ததே அல்லாமல் நட்டமடையவில்லை. நகைச்சீட்டுப் போட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நகைகள் கல்லுப் பதித்த நகைகள். கற்கள் பெறுமதியற்றவை. மிஸ்டர் வோல்தம்ஸ்ரோ பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வழங்கப்பட்ட நகைகளும் 22 கரட் அல்ல.

  //மனிதாபிமான முறையில் கட்டிய பணத்தின் பெறுமதியைக் கொடுப்பதும்இ கொடுக்க முயற்ச்சிப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயம். //
  சீட்டுப் போட்டவர்களும் அதனையே கேட்கின்றனர். கட்டிய பணத்தைப் பெற்றுக் கொடுக்க நீங்கள் உதவ முடிந்தால் மகிழ்ச்சியே.

  Reply
 • மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ
  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ

  ஜோர்ஜ். தங்கம் ஒன்றும் தவிடு, புண்ணாக்குப்போலல்ல மூட்டைக்கணக்கிலை வாங்கி வைப்பதற்க்கு. கண்ணாடிப் பெட்டியில் பார்வைக்கு வைப்பார்கள். கூடுதலாக வாடிக்கையாளைர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே செய்து கொடுப்பார்கள். அவற்றிற்க்குத் தேவையான தங்கக் கட்டிகளை தேவைக்கேற்றபடி அன்றைய விலைப்படி கொள்வனவு செய்வார்கள். நீங்கள் நினப்பதுபோல் தங்கத்தின் விலையேற்றம் காரணமாக ஏரிஎன் ஜீவலர்ஸ் லாபமடைந்தது உண்மை. ஆனால் அது அவர்களின் கண்ணாடிப்பெட்டியில் இருந்த பழைய தங்கத்தின் விற்பனையால் மட்டும்தான். யதார்த்தமாக சிந்தித்தால் அவர்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தியது புத்திசாலித்தனம் என்றே நான் கருதுகின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்கிறீர்கள் யார்தான் பாதிக்கப்படவில்லை? பலர் எதனாலோ, எவையாலோ பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். புத்திசாலி பிழைத்துக் கொள்வான். உங்களுக்காக ஒரு தடவை பணத்தை எப்போது அனைவருக்கும் கொடுத்து முடிப்பீர்கள் என்ற விபரத்தை அவர்களிடம் கேட்டுப்பார்க்க முயற்ச்சிக்கின்றேன்.

  Reply
 • BC
  BC

  /பலர் எதனாலோ, எவையாலோ பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். //

  கண்ணை கட்டுதே! பலர் எதனாலோ எவையாலோ பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக ஏரிஎன் நகைக்கடையிடமும் பணத்தை இழந்து பாதிப்படைய வேண்டுமா! சிங்களவன் உங்கள் காசை எல்லாம் எடுத்திடுவான் ஆகையால் தமிழீழ வைப்பகத்தில் பாதுகாப்பாக போடுங்கோ என்று புலி சொன்னது மாதிரியுள்ளது.

  Reply
 • kuperan
  kuperan

  //மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.//
  தேசம்நெட்.
  ஏ.ரி.ன் மட்டுமல்ல எந்த ஒரு நகைக்கடயிலும் 22 கரட் தங்கநாணயம் வாங்கமுடியாது என்பதே உண்மை.நம்மவர்கள் தாலிக்கொடியில் போடும் ராசா-ராணி தங்கநாணயங்கள் யாவும் அசல் அல்ல ரோயல் மின்ற்ரில் இருந்து தருவிக்கப்பட்டவை அல்ல.நமது உள்ளூர் பத்தரின் கைவண்ணத்தில் உருவானவை. ஆகவே தனிப்பட்ட ஒரு வியாபாரி மீது மட்டும் விரல் நீட்டிக்காட்டுவது ந்ல்லதல்ல.
  நகைக்கடையில் ஒரு சவரின்நாணயத்தின் விலை £260-300. ஆயினும் ரோயல் மின்ற்றில் அசலானநாணயத்தின் விலை £340.00 http://www.royalmint.com/store/BritishGold/SV10.aspx

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //ஏ.ரி.ன் மட்டுமல்ல எந்த ஒரு நகைக்கடயிலும் 22 கரட் தங்கநாணயம் வாங்கமுடியாது – kuperan //

  யார் காதில் பூச் சுற்றுகின்றீர்கள். உண்மையான தங்கம் 24 கரட் கொண்டது. சிறிது செப்புக் கலந்து உறுதியாக இருப்பதற்காக 22 கரட் ஆக்குகின்றார்கள். சுவிசிலுள்ள எந்த வங்கியிலும் 22 கரட் தங்க நாணயத்தை உறுதிப்பத்திரத்துடன் வாங்க முடியும். இப்படி ஏனைய நாடுகளிலுள்ள வங்கிகளிலும் பெறமுடியுமென்றும் நினைக்கின்றேன். வோல்த்தம்ஸ்ரோ என்பவரும் ஏதோ பங்கு மார்க்கட் சரிவினால் குறிப்பிட்ட நகைக்கடை பாதிக்கப்பட்டது போல் கதையளக்கின்றார். தங்கம் விலையேறுவதும் விலை குறைவதும் வழமையான நடைமுறை தான். இது எல்லா நகைக்கடைகளுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட நகைக்கடை உரிமையாளர் சீட்டுப்பணத்தை வேறு ஏதாவது விடயங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றே கருதுகின்றேன்.

  Reply
 • kuperan
  kuperan

  பார்த்திபன்
  24 கரட் தங்கத்தை நாணயம் என்று சொல்வதில்லை (பிஸ்கட்)

  22 கரட் தங்கநாணயத்தை பலநாடுகள் வருடா வருடம் வெளியிடுகின்றன. மான் படம் – தென் ஆபிரிக்கா, காரு-அவுஸ்திரேலியா, பண்டா- சீனா, கழுகு-அமெரிக்கா. இவற்றில் பிரித்தானிய ரோயல் மின்ற் சவரின்( ராசா/ராணி) பிரபல்யமானது. 1489 ம் ஆண்டு முதல் வெளியிடுகிறார்கள்.முதல் முதலில் தங்க நாணயம் வெளியிட்டநாடும் பிரித்தானிய ரோயல் மின்ற். இந்தநாணயத்தை ஈழத்தமிழ் மக்கள் தாலியில் கோர்த்து அணிவது வழக்கத்தில் உள்ளது. இவற்றை நம்மவர்கள் அதிகமாக நகைக்கடையிலேயே வாங்குகிறார்கள். இவை ரோயல் மின்ற்றில் இருந்த்து பெறப்பட்ட அசல் நாணயங்கள் அல்ல. ரோயல் மின்ற் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலேயே வருடா வருடம் நாணயங்களை வெளியிடுகிறது. இணயதளம் மூலம் அல்லது தபால் மூலம் பணம் செலுத்தி அசல்நாணயத்தை உறுதிபத்திரத்துடன் வாங்கலாம்.

  Reply
 • மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ
  மிஸ்டர் வோல்த்தம்ஸ்ரோ

  வோல்த்தம்ஸ்ரோ என்பவரும் ஏதோ பங்கு மார்க்கட் சரிவினால் குறிப்பிட்ட நகைக்கடை பாதிக்கப்பட்டது போல் கதையளக்கின்றார்/பார்த்திபன்.
  பங்கு மார்க்கட் சரிவினால் முழு வியாபாரிகளும் லாபமோ நட்டமோ அடைவதில்லை.பங்குச்சந்தையைப் பொறுத்தவரையில் இது ஒரு சூதாட்டம் போலத்தான் ஆனால் பெரும் மில்லியனர்களை அது பெரிதும் பாதிப்பதில்லை. தங்கம் ,குறூட் ஓயில் போன்றவற்றை வாங்கி வைப்பார்கள். அவர்களிடம் அளவுக்கு அதிகமான பணம் இருப்பதனால், மாதக்கணக்கில் அவை விற்க்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டாலும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. விலைகூடும் தருணம் பார்த்து அதனை விற்று அதிகளவு இலாபத்தை அடைவார்கள்.ஆனால் ஏ.ரீ.என் போன்ற வியாபாரிகளுக்கு ஒருநாளைக்கு கடையைப் பூட்டினாலோ அதற்க்கான நஸ்டத்தை ஈடுகட்டுவதே பெரும்பாடு. அப்படியானவர்கள் எப்படி கீலோக்கணக்கிலை தங்கத்தை வாங்கி வைக்கமுடியும். அதுவும் விலைகூடியிருக்கும்போது தங்கம் வேண்டப்பட்டிருந்தால் அதோகதிதான். குறொய்டன், ரூற்றிங், வெம்பிலி, ஈஸ்ட்டாம் பகுதிகளிலுள்ள நமது நகைக்கடைக்காரர்களும்தான் பாதிக்கப்ப பட்டிருக்கின்றார்கள் அத்துடன் அதில் சிலர் பல சுத்துமாதுகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவைகளை வெளிக்கொணராமல் பணத்தை திரும்பக் கொடுக்க முயற்ச்சிக்கும் ஒருவரை தேவையில்லாமல் குற்றம் சொல்லுவது நல்லதல்ல.

  Reply
 • BC
  BC

  இவற்றை எல்லாம் பார்த்தால் எங்களவர்களின் பேராசை,தங்க ஆசை, 22கரட் தங்கம்,24கரட் தங்கம், British Royal Mint ,இவற்றை நன்றாக பயன்படுத்தியுள்ளார்கள் போல தெரிகிறது.

  Reply
 • கந்தையா
  கந்தையா

  முகுறொய்டன் ரூற்றிங் வெம்பிலி ஈஸ்ட்டாம் பகுதிகளிலுள்ள நமது நகைக்கடைக்காரர்களும்தான் பாதிக்கப்ப பட்டிருக்கின்றார்கள் அத்துடன் அதில் சிலர் பல சுத்துமாதுகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்./
  வோல்த்தம்ஸ்ரோ அந்த சுத்துமாத்த செய்யிறவர்கள் யார் என்ன செய்தவை எண்டதையும் இதிலே சொல்லலாம்தானே. எங்கடை சனம் அவதானமாய் இருக்க உவவும்தானே

  Reply