முன்னாள் பிரதமரும் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணமானது வரலாறு காணாத பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சியும் தன்னுடைய மக்கள் ஆதரவை இழந்துவிட்டதை அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ளாத ரணிலின் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியலே கிடைத்தது. அது தொடர்பாக கூட நீண்டநாள் இழுபறி நீடித்ததது. இறுதியில் ரணில் விக்ரமசிங்க அக்கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்கிறார்.
இந்நிலையில் ரணிலின் வருகை பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்து. அரசாங்கத்தை தீவிரமாக எதிர்த்து வரும் சஜித்தரப்பினரை ரணில்விக்கிரமசிங்கவை வைத்து ஓரங்கட்ட அரசு முனைவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையில், நாமல் ராஸபக்ஷ இன்றைய தினம் ரணிலா..? அல்லது நஸித்பிரேமதாஸவா நாட்டினுடைய எதிர்க்கட்சி தலைவர் என கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது இலக்கு அல்ல. மாறாக ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதற்கான அடித்தளமாகவே ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்கின்றார் என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே எமது நோக்கமாகும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியை பெற்றுக்கொண்டு, நாடு வீழ்ந்துள்ள இந்த பாரிய நிலைமையில் இருந்து மீட்கமுடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
அத்துடன் வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான அடித்தளமே ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என சிலர் கேட்கலாம்.
எந்தவொரு விடயத்தையும் சாதிப்பதற்கு அதுதொடர்பான அனுபவமும் திறமையும் இருக்கவேண்டும். அத்தகைய அரசியல் அனுபவமும் திறமையும் ரணில் விக்ரசிங்கவிடம் இருக்கின்றது. ஏனெனில் 2015இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது நாடாளுமன்றத்தில் எமக்கு 46ஆசனங்களே இருந்தன.
நாட்டின் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றதில்லை. ஆனால் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசிலயமைப்பின் 19ஆம் திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொண்டார்.இதுதான் அவரின் அரசியல் ஞானம்.
அதனால் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஒரு ஆசனம் இருந்தாலும் அதனை சாதிக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் பல விடயங்களை நிறைவேற்றிக்கொண்ட அனுபவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றது.
அதனை அனைவருக்கும் செய்ய முடியாது. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியைபெற்றுக்கொண்டு தற்போதுள்ள நிலைமையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டை மீண்டும் கட்டியயெழுப்புவதே எமது இலக்காகும் என்றார்.