யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13.11.2020) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த குறித்த நபர்கள் இருந்த இடத்திற்கு வந்த 21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.
இம்மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (14) மல்லாகம் நீதவானினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்று முன்தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறும் சூழல் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,
பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (32) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 21 பேரில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்றையதினம் (15.11.2020) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
………………………………………………………………………………………………………………………..
வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை குணாதிசயங்கள் இன்மையினால் ஏற்படுகின்ற சொத்து இழப்புகள் உயிரிழப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையின் விலை மதிப்பற்ற சந்தோசங்களையும் மன அமைதியயையும் நாங்கள் இழக்கின்றோம். இந்த சண்டை சச்சரவுகளை தீர்க்க பொலிசார் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இரு வருமானமீட்டுபவர்களை இழந்தால் அதற்கு அரசும் சுற்றியுள்ளவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் உடல் உறுப்புக்களை இழந்தால் ஏற்படும் துன்பம். இவை எல்லாவற்றுக்கும் ஏற்படும் செலவை சிந்திப்பதற்கு சில நிமிடங்கள் செலவழித்து இருந்தால் தவிர்த்திருக்கலாமே. உளவியல் கற்கையயை அறிமுகப்படுத்தி முதலில் சிறந்த மனிதர்களை உருவாக்கினால் குடும்பம் மட்டுமல்ல உலகமே அமைதிப் பூங்காவாகும். (ஜெயபாலன்.த)