உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அரசு திருந்திநடக்க வேண்டும். இல்லையேல் அரசின் மீது சர்வதேச சட்டம் பாயும் ” – எச்சரிக்கின்றார் சம்பந்தன் !

“ சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்  அரசு மீது பாயும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கும் போது –

“இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் இனத்துக்கும் மட்டும் இந்த நாடு சொந்தமல்ல. இங்கு மூன்று இனத்துக்குமான அரசியல் உரிமை, மொழி உரிமை மற்றும் மத உரிமை ஆகியன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சியிலுள்ள அரசு சர்வதேசத்தை அவமதித்துச் செயற்பட முடியாது. அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நாட்டின் நலன் கருதிய சர்வதேசத்தின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் அரசு நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். ஏனெனில், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைகின்றது. அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை இந்த அரசு சந்திக்கும். சர்வதேச தீர்மானங்களை நிராகரித்தால் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும். இதைக் கவனத்தில்கொண்டு ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் அரசை எச்சரித்துள்ளார்.

அரசு தரப்பிலுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தமாகிய 20ஆவது அரசியலைப்பு திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (14.10.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமானது தமிழ் மக்களுக்கு பயனற்றது. அவற்றால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவே அதற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்க கூடாது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் இதனைத்தான் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

“தெற்கின் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ” – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் !

“தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ‘ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் முயற்சி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகளை உண்டாக்கி நாட்டைச் சீரழிக்கத் துடிக்கும் சில பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அரசு செவிசாய்ப்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. நாட்டிலுள்ள சகல இனங்களையும் சரி சமமாக மதித்து உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அரசே ஜனநாயகக் கடமையைச் செய்வித்த அப்போதைய அமைச்சர் ஒருவரைக் கேள்விக்குட்படுத்திக் கைதுசெய்ய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்த வழியேற்படுத்திக் கொடுத்தார் என்பதைக் குற்றமாகச் சுமத்தி கைதுசெய்ய முனைவது கவலையளிக்கின்றது. அரசின் இந்தச் செயலானது சிறுபான்மை மக்களை அரசிடமிருந்து வெகுவாகத் தூரமாக்கும் என்பதை அரசுக்கு எத்திவைக்க விரும்புகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இலங்கை முஸ்லிம்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் எனவும் அவர் தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

“இலங்கையில் கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை“ – இலங்கை சுகாதார அமைச்சு !

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாத்தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதுடன் நேற்றைய தினம் முடிவடையும் போது நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனாத்தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களிடையே அச்சமான சூழல் ஒன்று உருவாகி வருகின்ற நிலையில் “கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை“ என சுகாதார அமைச்சு இன்று  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மினுவங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலைத் தொடர்ந்து, கொரோனா பரவலானது சமூகப் பரவலாக மாறயுள்ளதாக கூறப்படுவது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கொத்தணி பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பி.ப. 1.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

“20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” – அகிலவிராஜ் காரியவசம்

புதிய 20ஆவது அரசியலமைப்புச்சட்டமூலத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்ககைகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் ஐக்கியமக்கள் சக்தி எல்லாவகையிலும் அதனை எதிர்ப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 20ஆவது திருத்தத்தின் மீதான தன்னுடைய அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சியும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இது பற்றி குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் “20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

சமயத் தலைவர்களும் கூட தங்களது நிலைப்பாட்டை 20ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக  தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில், 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது என்று அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“ ரிஷாட் பதியுதீன் ஆளும் தரப்பில் இருந்திருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது”  – பாராளுமன்ற உறுப்பினர் மனுஷநாணயக்கார .

முன்னாள் அமைச்சர் ரிஸாடபதியூதினை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பாக பல அரசியல்கட்சி சார்ந்தோரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தவண்ணமுள்ளனர். இந்நிலையில் “ ரிஷாட் பதியுதீன் ஆளும் தரப்பில் இருந்திருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது”  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(14.10.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர்,

பேருந்துகளை எடுத்த விதத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. முதல் சந்தர்ப்பத்தில் செயலாளர் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் பணத்தை அரசாங்கத்தினால் செலுத்திவிட்டு இரண்டாவது கட்டம் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமையான வாக்கை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளார். ஆனால் பணம் மீள செலுத்தப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சைவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தீர்மானம் !

 

இலங்கையின் உயர்கல்வி பீடங்களாக கருதப்படக்கூடிய பல்கலைக்கழக மட்டங்களில் பகிடிவதை தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சைவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.

புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் இன்று (14.10.2020) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 03 ஆம் திகதி சித்த மருத்துவத்துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பிலான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சித்தமருத்துவத் துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பில் ஆரம்பகட்ட பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனடிப்படையிலான குற்றப்பத்திரிகை மீதான முறைசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கை இன்று மாலை மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் நாளை துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளான பத்துப் பேரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றனர்.

இன்றைய கூட்டத்தில், சித்த மருத்துவத் துறை மாணவர்களுக்கான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், இனிவரும் காலத்தில் இதே பொறி முறையில் இம்சை வதையில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கான தடை, சிறப்புத் துறைகளைகளுக்கான தடை, முதலாம், இரண்டாம் வகுப்புச் சித்திகளுக்கான தகைமையிழப்பு, மகாபொல மற்றும் நிதியுதவிகளைத் தடை செய்தல், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல்கலைக்கழக மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

2020 சுற்றுலா பயணம் செல்ல உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

2020 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணம் செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பில் தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகள்” இல் இலங்கைக்கு 93.96 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதில் முதலாவது இடத்தை இத்தாலி 94.05 புள்ளிகளுடன் பெற்றுள்ளது.

இந்நாட்டு கலாசாரம், தேயிலை தோட்டம் மற்றும் காதலர் கடற்கரை ஆகியன குறித்த இதழில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கல், ஜப்பான், கிரீஸ், தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் வாசகர்களின் விருப்பத்தின் படி முறையே அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

வவுனியாவில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை – வடக்கில் தொடரும் தற்கொலைச்சாவுகள் !

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(14.10.2020) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிற்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார். இதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்ததுடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கினார்.

வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.