“கடந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி வரவு செலவு திட்டத்தின்போது பணத்தை பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மக்களை கைவிட்டுவிட்டீர்கள்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க “தமிழ் மக்களுக்கு தேவையானது மூன்று வேளை உணவும் சுதந்திரமுமே எனக்குறிப்பிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்நிர்மலநாதன் நேற்றையதினம் பிரசன்ன ரணதுங்க மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதேபிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
“என்னுடைய உரையை முழுமையாக கேட்டிருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் மூன்று வேளை உணவு இருந்தால் போதுமென்று கூறவில்லை. அத்துடன் மேல்மாகாண சபையில் அமைச்சராக நான் இருக்கும் போது யுத்தம் முடிவடைந்த காலத்தில் மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களையும் வடக்கிற்கு நாங்கள் அனுப்பிவைத்தோம்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக நாம் அதனை முன்னெடுத்தோம். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அவர்களுக்கு ஆதரவாக செயற்ப்பட்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த காலத்தில் ஒவ்வொருவரும் பணத்தை பெற்றுக்கொண்டு, வரவு செலவு திட்டத்தின்போது பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை கைவிட்டீர்கள். நாங்கம் தமிழ் மக்கள் சார்பாகவே பேசுகின்றோம்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.