பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பேலியகொட மெனிங் சந்தையின் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரியே, கொழும்பு- கோட்டையில் நேற்று(10.12.2020) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும், நேற்று பிற்பகல் வரை குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்காதமையினால் அவர்கள், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை தற்போது முன்னெடுத்துள்ளனர்.
எமது பிரச்சினைகளுக்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் கலந்துரையாட தவறினால், நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், குறித்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக மெனிங் சந்தை வணிக சமூகத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க கூறியுள்ளதாவது, ‘நாங்கள் தெருக்களில் இருப்பவர்கள் அல்ல.மேலும் எங்களது மெனிங் சந்தையை கோட்டையில் விரைவில் திறக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்.
நாங்கள் மகிழ்ச்சியுடன் மூன்றரை ஏக்கரில் வர்த்தகம் செய்தோம். ஆனால் நீங்கள் 13ஏக்கர் பெட்டிக் கடையை கட்டி, எங்களுக்கு ஒரு சிறிய பெட்டிக் கடையைத் தருவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.