உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கிளி மகா வித்தியாலய காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவம் – விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு !

கிளி மகா வித்தியாலய காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவம் – விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு !

 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். அதுவொரு ஆபத்தான பயணமாக காணப்படுகிறது என்பதனை சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் இராணுவம் 11.02.2025க்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கோரியுள்ளது.

 

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

யாழில் நேற்று சுதந்திர தினம் எதிரும் புதிருமாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் தேசியக் கொடியைத் தாங்கியவாறு ஊர்வவலம் சென்றனர். கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து அதற்கு எதிரான ஊர்வலம் நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடாத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமையுடன் ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றிருந்தனர்.

ஐக்கிய இளைஞர் இயக்கத்தினால் இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணி பண்ணையிலிருந்து யாழ் நகரத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரியும், சுயநிர்ணய உரிமை கோரியும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி வீதிகளில் இறங்கினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கரிநாள் ஊர்வலத்தில் கலந்தகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவாக தன்னை வெளிப்படுத்தும் ஒரு தாயார் பா உ அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

 

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர்.

காலம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா சம்பந்தன் யாழில் வைத்து தேசியக் கொடியை ஏந்திய போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் துரோகிககளாக்கப்பட்டனர். ஆனால் இன்று யாழ் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றுள்ளனர். தமிழ் தேசியத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியயில் கல்வி கற்று சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுகின்றனர். பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் அரசாங்க வேலை மட்டும் தான் செய்வோம் என்று போராடுகின்றனர் எனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் நித்தியானந்தன் உங்கள் தோழன். இவர்கள் ஏன் கொள்கைக்காக அரச வேலை வேண்டாம் என்று சொல்லலாமே என அவர் தனது முகநூல் பதிவில் ஆலோசணை வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுவது பற்றி கருத்து வெளியிட்ட பா உ இராமநாதன் அர்ச்சுனா இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக வாழ விரும்புவதையே வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

 

நீரிழிவு நோய் தொடர்பான இன்சுலின் உட்பட்ட மருந்துகளுக்கு கடந்த ஆண்டு 7.3பில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீரிழிவுநோய்கான மருத்துவ செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தொடர்ச்சியா மருந்துகளுக்கான செலவீனங்களுக்கு அரச கருவூலத்தை நம்பியிருக்காமல் நீரிழிவுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் பங்கை வலியுறுத்தும் வகையில், மருந்துகளுக்கு அப்பால் சுகாதாரப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில், நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம். இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி அனுர.

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

 

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும். வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அப்படி கூறியவர்களின் அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார்.

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22,006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35,000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால்> எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது? என்றார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மக்களின் காணி தொடர்பான உரிமைகள் மீறப்பட கூடாது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

 

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் செல்வம். மேலும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு பற்றியும் கருத்து தெரிவித்த அவர்> இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முன்னதாக இலங்கை கடற்படை, “வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தென்னிந்திய மீனவர்களின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் எமது நிலை மாறப்போவதில்லை, தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதேவேளை நேற்று முன்தினமும் மன்னார் தெற்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களும் அவர்களது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “மஹ மொலகரு ” – முக்கிய காரணகர்த்தா – ஒருவரை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அசாத் மௌலானாவின் சனல் 4 வீடியோ பற்றி பேசிய உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று சனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமான ‘GovPay’ 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

“இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறனான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். இல்லையேல் நாங்கள் கழுத்தைப் பிடித்து தள்ளி வெளியேற்றுவோம் என்ற பாணியில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மேலும் தெரிவித்ததாவது, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவுகள் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் நாகரீகமான முறையில் அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்றும் அரச இல்லங்களில் தான் உள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தார் என்பதற்காக அவரை தோளில் சுமந்துக்கொண்டு திரிய முடியாது. அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். தமது பெற்றோரை பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை பார்த்துக் கொள்வதற்கு அவரது மூன்று பிள்ளைகளுக்கும் முடியாவிடின் அவருக்கும் அவரது பாரியாருக்கும் வீடு வழங்கலாம். ஆனால் அவரது மூன்று பிள்ளைகளையும் அரசாங்கத்தால் பராமரிக்க முடியாது என்றார்.

இதேவேளை, அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.