உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

 

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த போது தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும்.

முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதாகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இருவர் காயடைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வு, கலைவாரம் உட்பட்ட நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெறுவதே சவாலாக காணப்படுகின்றது. கலைவார நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக நிர்வாகம் தடைவிதித்த வரலாறுகளும் உண்டு.

 “நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” – ரதன தேரர் பா.உ சிறிதரனுக்கு மடல் !

“நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” – ரதன தேரர் பா.உ சிறிதரனுக்கு மடல் !

 

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றவரும், ஆசிரியராக பணியாற்றி வருபவருமான பௌத்த துறவி ரதன தேரர் என்பவர் ” நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் தென்னிலங்கையில் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” என பா.உ சிறிதரன் உள்ளிட்ட தமிழ்தேசிய தலைமைகளிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரதன தேரர் தமது பேஸ்புக் பதிவில்,

ஐயா ! எனக்கு உங்களை விட தனது இனத்துக்காக 30 ஆண்டுகள் போராடியவர்கள் சிறந்தவர்கள் என்று கூறுகிறேன். அந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விஹாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டது தலைவரின் அறிவிப்பின் பேரில் அவரது அமைப்பால்.

பௌத்தத்தின் படி திருடுவது கடுமையான பாவம். ஏமாற்றுவதும் பாவம். இந்த விகாரை அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதேபோல் தையிட்டி விகாரையை இடிக்கவேண்டும் எண்டால் இடிக்கலாம் அது உங்கள் விருப்பம். ஆனால் நாங்கள் நாட்டில் எந்த இடத்தில் உள்ள எந்த ஒரு கோவில் அல்லது ஆலயத்தையும் இடிக்க போகவில்லை.எநாங்கள் பெளத்தர்கள். புத்தர் அருளிய போதனைகள் பின்பற்றுவர்கள். உண்மையான பெளத்தர்களாக வாழ வேணுமெனில் முதலில் தன்னுடைய மகிழ்ச்சியை விட மற்றவரின் சந்தோசத்தை பற்றி சிந்திக்கவேண்டும் என்று புத்த பெருமானின் உபதேசத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஐயா! நீங்கள் ஒருநாள் எங்கள் விகாரைக்கு வாருங்கள். புத்தர் வணங்க மட்டுமல்ல புத்தர் சிலைக்கு இரு பக்கத்தில் உள்ள இந்து கடவுளான முருகன் மற்றும் விஷ்னு, கண்ணகி (பத்தினி ) ஆகிய கடவுள்கள் வணங்கலாம் பூஜையும் செய்யலாம். ஒருநாள் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேக்கிறேன். தையிட்டில் தவறாக விஹாரை கட்டி இருக்கு என்றால் அந்த விஹாரை அங்கே உருவாக்கும்போது செய்ய வேண்டியசெயலை செய்யாமல் விஹாரை திறந்த பின்னர் இப்படி கூறுவது உங்களில் உள்ள அறியாமையும் பொறுப்பின்மை தான் தெரியும்.

உலகில் மிகப்பெரிய புத்தர் சிலையான ஆப்கானிஸ்தானில் இருந்த “ப்பாமியன்” புத்தர் சிலையை உடைக்கும் போது எங்களுக்கு வராத பகைமை தையிட்டி விஹாரை உடைந்தால் வர முடியுமா என்று குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதை ஊதிப்பெருசாக்கி எதிர்வரும் தேர்தல்களில் என்.பி.பியை தோற்கடித்து தமது வாக்குவங்கியை மீண்டும் நிலைநிறுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் முயல்கின்றமை தமிழ் குறுந்தேசியவாதத்தின் அரசியல் வறட்சியின் வெளிப்பாடு என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டி முழுமைப்படுத்தப்பட்ட தையிட்டி விகாரையை உடைக்குமாறு கூறுவது மொக்குத்தனமான முடிவு எனவும் மீண்டும் தெற்கில் ஓர் ஜூலைகலவரம் ஏற்பட வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கும் இராமநாதன் அர்ச்சுனா, மீளவும் மக்களை உசுப்பேற்றி குளிர்காய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகியோர் முற்படுகின்றனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள இராமநாதன் அர்ச்சுனா,

விகாரை கட்டி முழுமைப் படுத்தும்வரை தூங்கி விட்டு இப்போது வந்து விகாரையை இடிக்க கேட்பது அறிவில்லாததன் வெளிப்பாடு. அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் பாதிக்கப்படுவது அந்த காணி உரிமையாளர்களும், இவர்களுக்காக திரளும் மக்களுமே. தையிட்டி விகாரையின் விகாராதிபதியுடன் நான் நேரில் சென்று சந்தித்தேன். அவர் மக்கள் தன்னுடன் அன்னியோன்யமாக பழகுவதாகவும் அவர் அப்பகுதி பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகவும் தெரிவிக்கிறார். சிங்களவர்கள் பற்றி போலியான விம்பம் ஒன்றை தமிழ்தேசிய தலைவர்கள் கட்டமைத்துள்ளார்கள். அந்த மக்கள் அருமையான மக்கள் – அரசியல்வாதிகள் தான் தூண்டி விடுகிறார்கள். தமிழ் மக்கள் இந்த பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். அரசியல் கதிரைகளுக்காக மக்களை தூண்டி விட பார்க்கிறார்கள். சுகாஸ் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சைக்கிள் கட்சியில் இருக்கிறார்கள். இதுவரை ஒரு வழக்கு கூட விகாரைக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பவர்களும் போடவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மக்களும் போடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலதிகமாக போராட்டங்கள் கவனயீர்ப்புகள் செய்த யாருமே இதை சட்ட ரீதியாக அணுகாது போதே தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் இது முழுக்க முழுக்க அரசியல் சதுராட்டம். இனிமேல் விகாரைகள் கட்டுவதை தடுக்க வேண்டுமே தவிர கட்டிய விகாரையை உடை என்பது மடத்தனம் என தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவின் நிலைப்பாடு சரியானதாக உள்ளது எனவும், அவர் கூறுகின்ற வழிமுறைகள் சாலப்பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கதது.

தையிட்டி விகாரை விவகாரம் மீண்டும் ஓர் பதற்றமான சூழலை தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறியது முதல் இனவாதக் கருத்துக்கள் செயலிழக்கும் சூழல் உருவான போதும் கூட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இனவாத சூழல் ஒன்றை உருவாக்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடியுள்ளார்.

இதேவேளை, யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என தெரிவித்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி , தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாய்கும் நாய்க்கும் முன்னால் காதலி கொலை மிரட்டல் – இலங்கைப் பெண்ணுக்கு நியூசிலாந்து புகழிடம் !

தாய்கும் நாய்க்கும் முன்னால் காதலி கொலை மிரட்டல் – இலங்கைப் பெண்ணுக்கு நியூசிலாந்து புகழிடம்

இருபாலின ஈர்ப்புக்கொண்ட இலங்கைப் பெண்ணொருவருக்கு நியூசிலாந்து புகழிடம் அளித்துள்ளது. இலங்கை இராணுவ சிப்பாயான அவரது முன்னாள் காதலி அவரது தாயையும் நாயையையும் துப்பாக்கிமுனையில் மிரட்டியதால், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தஞ்சம் கோரியதாக தெரியவருகின்றது.

புகழிடக்கோரிக்கையில் குறித்த பெண் தெரிவித்ததன்படி,

அவர் பதின்மவயதில் முன்னாள் காதலியுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு இந்த விடயத்தை கண்டுபிடித்த அவரது தாய் அவருக்கு வேறு ஆணுடன் கட்டாயத்திருமணத்தை ஏற்பாடுசெய்துள்ளார். எனினும், அவரது முன்னாள் காதலி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

பின்னர், 2021ஆம் ஆண்டு, முன்னாள் காதலி இராணுவத்தில் சேர்ந்தபின், மூன்று இராணுவ அதிகாரிகளுடன் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் அவரது தாயையும் அவர்கள் வளர்க்கும் நாயையும் மிரட்டியுள்ளார். அந்த தருணத்தில் குறித்த பெண் வீட்டில் இருக்கவில்லை. பின்னர் அவர் முன்னாள் காதலியின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் கல்விக்காகவும் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார். பின்னர், தனது பாலின அடையாளத்தால் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளது என நியூசிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கையை பரிசீலித்த நியூசிலாந்து அதைக் ஏற்றுக்கொண்டு புகழிடம் அளித்துள்ளது

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

கெஹலியவுக்கு ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்த இந்த விஜயத்தில் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படித்தான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசவாதம்பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடு. என்.பி.பிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் பின்பற்றிய அதே அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்ததை போல நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரையான அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியையும் பெற்றுக் கொடுக்க உறுதியளிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள சபா குகதாஸ்,

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே17ஆம் திகதி வட்டுவாகலில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் 4 ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது.

எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள். இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார். அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே இவருக்கான நீதி கிடைக்குமா? என குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள், எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்பாக தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியால் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பேரவையின் அனைத்து வெளிவாரி உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக்தில் தற்போது பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட 15வெளிவாரி உறுப்பினர்கள் உள்ளனர்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மகிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஜி.பிலேந்திரன், சட்டத்தரணி டி.ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன், ஏந்திரி ரி. சாந்தாதேவி, வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன், யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம், லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் மனோகரி ராமநாதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோரது நியமனங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக சிபாரிசுகளின் அடிப்படையில் அமைந்தவை. நீண்டகாலமாகவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வினைதிறனற்றோர் இவ்வாறான பொறுப்புகளில் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் காலங்களிலாவது அரசியல் தலையீடுகள் அற்ற, பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு கொண்டுவருவதற்கு துணைநிற்கக்கூடிய உறுப்பினர்களை அரசு பேரவைக்கு நியமிக்க வேண்டும்.