ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !
தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படித்தான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேசவாதம்பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடு. என்.பி.பிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் பின்பற்றிய அதே அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.