“நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” – ரதன தேரர் பா.உ சிறிதரனுக்கு மடல் !
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றவரும், ஆசிரியராக பணியாற்றி வருபவருமான பௌத்த துறவி ரதன தேரர் என்பவர் ” நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் தென்னிலங்கையில் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” என பா.உ சிறிதரன் உள்ளிட்ட தமிழ்தேசிய தலைமைகளிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரதன தேரர் தமது பேஸ்புக் பதிவில்,
ஐயா ! எனக்கு உங்களை விட தனது இனத்துக்காக 30 ஆண்டுகள் போராடியவர்கள் சிறந்தவர்கள் என்று கூறுகிறேன். அந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விஹாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டது தலைவரின் அறிவிப்பின் பேரில் அவரது அமைப்பால்.
பௌத்தத்தின் படி திருடுவது கடுமையான பாவம். ஏமாற்றுவதும் பாவம். இந்த விகாரை அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதேபோல் தையிட்டி விகாரையை இடிக்கவேண்டும் எண்டால் இடிக்கலாம் அது உங்கள் விருப்பம். ஆனால் நாங்கள் நாட்டில் எந்த இடத்தில் உள்ள எந்த ஒரு கோவில் அல்லது ஆலயத்தையும் இடிக்க போகவில்லை.எநாங்கள் பெளத்தர்கள். புத்தர் அருளிய போதனைகள் பின்பற்றுவர்கள். உண்மையான பெளத்தர்களாக வாழ வேணுமெனில் முதலில் தன்னுடைய மகிழ்ச்சியை விட மற்றவரின் சந்தோசத்தை பற்றி சிந்திக்கவேண்டும் என்று புத்த பெருமானின் உபதேசத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஐயா! நீங்கள் ஒருநாள் எங்கள் விகாரைக்கு வாருங்கள். புத்தர் வணங்க மட்டுமல்ல புத்தர் சிலைக்கு இரு பக்கத்தில் உள்ள இந்து கடவுளான முருகன் மற்றும் விஷ்னு, கண்ணகி (பத்தினி ) ஆகிய கடவுள்கள் வணங்கலாம் பூஜையும் செய்யலாம். ஒருநாள் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேக்கிறேன். தையிட்டில் தவறாக விஹாரை கட்டி இருக்கு என்றால் அந்த விஹாரை அங்கே உருவாக்கும்போது செய்ய வேண்டியசெயலை செய்யாமல் விஹாரை திறந்த பின்னர் இப்படி கூறுவது உங்களில் உள்ள அறியாமையும் பொறுப்பின்மை தான் தெரியும்.
உலகில் மிகப்பெரிய புத்தர் சிலையான ஆப்கானிஸ்தானில் இருந்த “ப்பாமியன்” புத்தர் சிலையை உடைக்கும் போது எங்களுக்கு வராத பகைமை தையிட்டி விஹாரை உடைந்தால் வர முடியுமா என்று குறிப்பிட்டுள்ளார்.