உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சிங்கள – தமிழ் – முஸ்லீம் சகூகங்கள் மத்தியில் 17 வயதுக்கு குறைந்த திருமணங்கள் ! எம்.பி முஜிபுர் ரஹ்மான் 

சிங்கள – தமிழ் – முஸ்லீம் சகூகங்கள் மத்தியில் 17 வயதுக்கு குறைந்த திருமணங்கள் ! எம்.பி முஜிபுர் ரஹ்மான்

 

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட சில கருத்துக்கள், அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர்,” இராமநாதன் அர்ச்சுனா இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுபிள்ளைகள் விவாகம் அதிகமாக முஸ்லிம் சமூகத்திலேயே இடம்பெறுவதாக குற்றச்சாடினார். 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம், வெளியிட்ட அறிக்கையின் படி, 17 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் விவாகம், எல்லா சமூகத்திலும் நடந்திருக்கின்றது.

அதாவது, பெரும்பான்மையினத்தில், 69 வீதமும், தமிழர்கள் மத்தியில் 13 வீதமும், மலையக மக்கள் மத்தியில் 8 வீதம் மற்றும் முஸ்லிம் சமூகத்தில், 14 வீதம் என எல்லா சமூகத்திலும் இந்த சிறுபிள்ளைகள் விவாகங்கள் நடந்திருக்கின்றன. எனவே, இது ஒரு பொதுப்பிரச்சினை, ஆகையால் அதை பற்றி பேசாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவது என்பது அதன் பின்னணியில் வேறு திட்டங்கள் இருப்பது போல் காட்டுகின்றது. அத்துடன், முஸ்லிம் சமூகத்தின் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஒரு அரசியல் காரணத்தினாலோ என எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது என குறிப்பிட்டார்.

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

 

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் சுவஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக சுவஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த நேற்றையதினம் யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த எம்.பி அர்ச்சுனாவிடம் இது பற்றி ஊடகவியலாளர் கேட்ட போது, சுவஸ்திகா அருள்லிங்கம் விபச்சாரி எனக் குறிப்பிட்டதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், சட்டத்தரணி சுவஸ்திகா தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஓட்டையை தான் பயன்படுத்துகிறேன் பார் என்ற தோரணையில், தான் பெரும் கெட்டித்தனம் செய்வதாக பா உ அர்ச்சனா நடந்துகொள்கின்றார். பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கிளிநொச்சி ரிக்ரொக் பெண்ணான சாளினியை விபச்சாரி என்று அழைத்தார். சாதாரண பெண்ணை அவ்வாறு அழைத்தமைக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு வெளியே சுவாஸ்திகா அருளலிங்கத்தை மீண்டும் மீண்டும் விபச்சாரி என்று சொல்வதற்கு எதிராக என்றாலும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கக்கூஸ் கழுவி உழைத்த பணத்தை – கட்டுப் பணம் செலுத்த கோருகிறார் அர்ச்சுனா !

கக்கூஸ் கழுவி உழைத்த பணத்தை – கட்டுப் பணம் செலுத்த கோருகிறார் அர்ச்சுனா !

“வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத்தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கமைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம். ஏனைய இடங்களில் கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லை” என்று தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை கக்கூஸ் கழுவி பிழைப்பவர்கள் எனப் பல தடவை சுட்டிக்காட்டிய பா உ அர்ச்சுனா தற்போது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட கக்கூஸ் கழுவிய பணத்தை அனுப்பச் சொல்லிக் கோருகின்றார்.

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ்.தேர்தல் திணைக்களத்தில் நேற்றையதினம் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், “அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம். இதேவேளை எனது சுயேச்சைகுழு வடக்கில் தமிழ்தேசியம் பேசும் எந்த கட்சியுடனும் இணைய தயாராக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன் மணிவண்ணன் அணியுடன் சேருவது தொடர்பில் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக ஆண்கள் ஒன்றியம் – பெண்களின் நிர்வாணத்தை அரசியலாக்கும் யாழ் ஆண் மையவாதம்!

யாழ் பல்கலைக்கழக ஆண்கள் ஒன்றியம் – பெண்களின் நிர்வாணத்தை அரசியலாக்கும் யாழ் ஆண் மையவாதம்!

 

“இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன். நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும் தமிழா“ என்ற புலிகளின் பாடல் வரிகளுடன் யாழ்ப்பாண பல்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்துக்கான 2025ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வீதத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றிய நிர்வாகத் தெரிவில் வழமை போலவே இந்த ஆண்டிலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியமானது பெண்களை நிர்வாக பொறுப்புக்களில் இருந்து நிராகரித்து வருவது வடக்கின் உயர் கல்வி நிலையமானது ஆணாதிக்க சிந்தனையை கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடேயாகும். சமூகத்துக்கு எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டிய எதிர்காலத் தலைவர்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு நோட்டீஸ் ஒட்டுபவர்களாகி அவர்களுடைய உதவாக்கரை யாழ் ஆண் ஆதிக்க சைவ வெள்ளாளச் சிந்தனையில் ஊறிப்போய் விட்டதையே இது வெளிப்படுத்துகின்றது.

தங்களுடைய சக மாணவிகள் சுரண்டலுக்கு உள்ளாவது பற்றி எவ்வித கரிசனையும் இல்லாது, பேராசிரியர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் வேலையையே இவர்கள் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புமளவிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளனர். அவர்களுடைய ஒன்றியத்தில் பெண்கள் குரலிழந்துள்ளனர்.

மேலும் ஆங்காங்கே சில பீடங்களுக்குரிய ஒன்றியங்களில் பெண் மாணவிகள் சிலர் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய சூழல்கள் இருப்பதில்லை. அவர்கள் ஒன்றியத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஜால்ரா அடிப்பவர்களாகவும், ஊடக சந்திப்பில் பின்னணியில் அமரவைக்கப்பட்டு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று காட்டவுமே பயன்படுத்தப்படுகின்றனர்.

ஈழத்தில் மேலெழுந்து வரும் ஆண் மையவாதத்துக்கு யாழ்ப்பல்கலைக்கழகும் சிறந்த சான்றாகிறது. ஏற்கனவே இலங்கையில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமானால் மாணவிகள் பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக வாளகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பாலியல் சுரண்டல் பற்றிய செய்திகளை சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் கூட பதிவு செய்கின்றார்கள்.

வடக்கை பொறுத்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அதுவும் கலைப்பீடத்தில் இக்குற்றச் சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் இதுவரை பல்கலைக்கழக மட்டத்தில் கூட எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா கூட இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லைகள் கொடுக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாறாக பல்கலைக்கழக மாணவிகளையே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பெண் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க பெண் விரிவுரையாளர்களும் தயாராக இல்லை. அவர்களும் கூட அதே ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வர முடிவதில்லை.

இப்படியான பல்கலைக்கழக சூழலில் புதிய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கூட ஆணாதிக்க சிந்தனையுடைய பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் அபத்தம் யாழ்.பல்கலைகழகத்தில் தொடர்கிறது.

சிங்களவர்கள் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை, எங்களுடைய சுயநிர்ணய உரிமையை வழங்க தயாராக இல்லை என குரல் கொடுக்கும் யாழ் பல்கலைக்கழகம். கணிசமானளவு சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிக்கும் யாழ்ப் பல்கலைகழகத்தின் எந்த மாணவர் நிர்வாக அமைப்பிற்குள்ளும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களையும் உள்வாங்க யாழ்ப்பாண பல்கலைகழகச் சமூகமானது தயாராக இல்லை. தம்மினத்திற்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கே உரிய பிரதிநித்துவம் கொடுக்க தயாராக இல்லாத யாழ்ப்பல்கலைக்கழக சமூகம் எப்படி ஏனைய இன, மத மாணவர்களை உள்வாங்கும் எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பல்வேறு இயக்களிலும் பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தில் பெண்கள் தளபதிகளாகவும், தனிப் படையணிகளையே வழிநடத்தும் வீரமங்கைகளாக திகழ்ந்திருந்தனர். ஆணாதிக்க கற்பிதங்களை கேள்விக்குட்பத்திய பெண் புலிகள் எடுத்துக்காட்டாக விளங்கியிருந்தனர். ஆனால் இந்நிலமை போரின் பின் தலைகீழாக மாறியுள்ளது.

இதனை எழுத்தாளர் பா. ரவீந்திரன் பின்வருமாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். “ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக்காட்டிய புலிகள் அமைப்பிலிருந்த பெண்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை, பெண்மைக்கு ‘எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்யவே பின்நின்றார்கள். இதன்வழி வந்த இன்றைய எம்பி அர்ச்சுனா போன்ற கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை போய் பேசுகிற பேச்சுக்களில் யாழ்ப்பாண ஆண்மையவாத அறிவு கிழிந்து தொங்குகிறது” என எழுத்தாளர் ரவீந்தரனின் கூறுகிறார்.

எம்பி அர்ச்சுனா ஒரு சாமானிய பெண் சாளினியை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று கூறியதும் சட்டத்தரணியும் மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ஸ்சுவஸ்திகா அருளிங்கத்தை அரசியல் விபச்சாரி எனக் குறிப்பிட்டதும் யாழ்ப்பாண ஆணாதிக்க மொழி மற்றும் ஆணாதிக்க ஒழுக்கவாதத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. எம்பி அர்ச்சனா பெண்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களை தமிழ்த்தேசியம் பேசும் ஏனைய தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட கண்டிக்கவில்லை. அவர்களும் அதே ஆண் மைய அரசியலையே முன்னெடுக்கின்றனர்.

தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளிலும் கூட பெண்களுக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை. கட்சி நிர்வாகத்திலும் கூட பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் வழங்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 வீதம் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். அப்படியிருந்தும் எ‌ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் கிராம மட்டத்திலிருந்து பெண்களை

கட்சிக்குள் உள்வாங்கி அரசியலில் ஈடுபடுத்துவது இல்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் வேட்பு மனுக்களில் பெண்கள் பெயர்களை காணலாம். பெரும்பாலும் வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்படும்

பெணகள் பிரதான ஆண் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து கொடுக்கவே பயன்படுத்தப்படுகின்றனர்.

 

இறுதியாக யாழ்ப்பாண ஆணாதிக்க மையவாதம் முகநூலில் போலிக் கணக்குகளைத் திறந்து பெண்களின் நிர்வாண படங்களை பகிர்ந்து பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தை தொட்டிருக்கின்றது. இந்த போலிக் கணக்குகளில் பகிரப்படும் நிர்வாண படங்கள் மூலம் தமிழ்ப் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தியை சொல்கிறார்கள். பெண்கள் ஆகிய நீங்கள் பொதுவெளியில் சுயமாக இயங்கினால் நீங்கள் முடக்கப்படுவீர்கள். அடித்து நொறுக்கி மூலையில் இருத்தப்படுவீர்கள். விபச்சாரிகள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

 

யாழ்ப்பாண ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக உமாச்சந்திரப் பிரகாஸ் மற்றும் கௌசல்யா நரேன் போன்ற தமிழ்ப் பெண்கள் இருக்கும் வரை ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. முகமூடி அணிந்த தமிழ் தலிபான்களான அர்ச்சுனா கும்பலின் நிர்வாணப்படுத்தலைக் கண்டு தமிழ் பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. தங்கள் நிர்வாணப் படங்களைப் போட்டு வாக்குச் சேர்க்கும் பொறுக்கிகள் தான் அச்சப்பட வேண்டும். அவமானப்பட வேண்டும். தமிழ்ப் பெண்கள் இந்தத் தருணத்தில் ஒன்று திரண்டு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

தமிழர்களுடைய பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது என யாழ் மாவட்ட பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் இனவாத அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் கடந்த 77 வருடங்களாக அரசாங்கங்கள் முன்னெடுத்துச் சென்றவற்றை கைவிட வேண்டும். நீங்கள் ஏன் வெளிநாட்டு பொறிமுறைக்கு பயப்பட வேண்டும். முதலில் உண்மையை கண்டறிய வேண்டும். நல்லிணக்கத்தை கொண்டுவர நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த போக்கினை தற்போதைய அரசாங்கம் தொடரக் கூடாது என்றார்.

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், காங்கிரஸின் இணைக் கூட்டத்தில் தனது கடுமையான வரிக் கொள்கைகளை வெளியிட்டிருந்ததுடன் , அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஏப்ரல் 2 முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70% க்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றன, இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியிருந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இலங்கை அமெரிக்காவிலிருந்து 330 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.

அமெரிக்கா இலங்கைக்கான நேரடியான வரிக்கொள்கையை அறிவிக்காவிட்டாலும் ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமின்றி இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், வரிச் சலுகை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் என் மீது முழுமையான அரசியல் அவதூறு பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது எனவும் அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் தன்னை ஒரு சாட்சியாளராகவே அழைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் ஆற்றிய விசேட உரையில், 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீட்டு திட்டத்தில் உள்ள வெற்றிடமான வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்கழுவை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வழங்குவது சரி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் எனக்குப் பொருந்தாது.

1988-90 காலப்பகுதியில் ஜேவிபி செய்த ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தலைவரின் அவதானிப்புகள் அமைந்துள்ளன. பின்னணியையும் சொல்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் 3 ஆம் அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் நான் பொறுப்பாக மாட்டேன். அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்” என்றார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை அப்போது காணவில்லையா, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தததும் கவனிக்கத்தக்கது.

எவ்வாறான போதும், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ரணில் விக்ரமசிங்க பேசுவதற்கு தற்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

“லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

“இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ள அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ 2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் வேதநாயகன் மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

யூ-ரியூப்பில் டொலர் உழைக்க பாராளுமன்றம் வருகிறார் அர்ச்சுனா – பேச விடாதீர்கள் ! எம்.பி மரிக்கார் கோரிக்கை

யூ-ரியூப்பில் டொலர் உழைக்க பாராளுமன்றம் வருகிறார் அர்ச்சுனா – பேச விடாதீர்கள் ! எம்.பி மரிக்கார் கோரிக்கை

“ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது பிரபல்யத்துக்காக பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடந்த சனிக்கிழமை சபையில் வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகள் எங்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா, தேசவழமை சட்டம் தொடர்பில் நாங்கள் பேசுவதில்லை. ஆகவே மதங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் போது அதனை சாட்சிகள் ஊடாக அவர் நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற அர்ச்சுனாவுக்கு டிக்டொக், யூ-டியூப் ஊடாக டொலர் உழைக்க வேண்டுமாயின் அதற்கு பல வழிகள் உண்டு. சுற்றுலாத்துறை அமைச்சில் ஏதேனும் வாய்ப்பை பெற்றுக்கொண்டு யூ-டியூப் காணொளிகளை பதிவிடலாம். அவருக்கு அனுமதி வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.