மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மர்லோன் சாமுவேல்ஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
2012 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ரன் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.
ஐ.பி.எல்., பிக்பாஷ் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் ஆடிய சாமுவேல்ஸ் எல்லா வகையிலான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைசதத்துடன் 3,917 ரன்னும், 41 விக்கெட்டும் எடுத்துள்ளார். 207 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ரன்னும், 89 விக்கெட்டும், 67 இருபது ஓவர் போட்டியில் ஆடி 10 அரைசதம் உள்பட 1,611 ரன்னும், 22 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.