அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பஞசாப் இந்த போட்டியில் களமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எல். ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, கெய்ல் 12, பூரன் 2 என சொற்ப ஓட்டகளில் ஆட்டமிழந்தனர்.
6-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ஓட்டங்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் அடித்தது.

சென்னை சார்பாக லுங்கி நிகிடி 3 இலக்குகளை வீழ்த்தினார்.
பின்னர் 154 ஒட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணியின் ஓட்டங்கள் 82 ஆக இருக்கும் போது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 பந்துப்பரிமாற்றங்களில் 1 இலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து 09 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஓஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். சென்னை அணி ஏற்கனவே தன்னுடைய பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.