மக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றமையே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஜனாதிபதி,
“கொரோனா வைரஸின் பரவலுக்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பு இல்லை. கொரோனா தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.அந்த பொறுப்பில் அவர்கள் தோல்வியுற்றதால் தான் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது.
மேல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி, எல்ல போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளனர். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே எடுக்க முடியாது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அத்தோடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் எவரும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம். அதற்கு பதிலாக அவர்கள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.