ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ஓட்டங்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்களில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 பந்துப்பரிமாற்றத்தில் 42 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ஓட்டங்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் குவித்து ஸ்டாய்னிஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ஓட்டங்களை குவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ஓட்டங்கள்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ரஹானே(0) வெளியேறினார். அடுத்து டெல்லி அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை சந்தித்த பண்ட் 27 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், டெல்லி அணி 13.2 பந்துப்பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து திணறியது.
சற்று நிலைத்து நின்று ஆடிய தலைவர் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 20 பந்துப்பரிமாற்றங்களில் முடிவில் டெல்லி அணி 9 இலக்குகளை இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 பந்துப்பரிமாற்றங்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் 3 இலக்குகளை வீழ்த்தினார்