செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலை தெற்கில்- அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

felixperera.jpgமீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேடுவப் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

0000.jpgவீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்ற வேடுவப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக ஆதிவாசிகளின் வேடுவத் தலைவர் ஊருவரியகே வன்னி அத்தோ தெரிவித்தார். இன்றைய நாகரிக உலகில் எமது ஆதிவாசிகளும் தேசிய நீரோட்டத்தில் இணைவது காலத்தின் தேவை. இதனால் வனப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்குப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவேளை எம் இளம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அண்மைக்காலமாக எமது இனத்தைச் சேர்ந்த இளம் வயதினர் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவது மாத்திரமல்லாது வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரைப் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் மீட்டெடுத்ததாகவும் அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள நன்நடத்தை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊறுவரியகே வன்னி அத்தோ கடும் விசனத்துடன் தெரிவித்தார்.

சீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்

china_yunnan_.gifசீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.

முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மாணவரின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம் – சார்க் சிறுவர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து பிரதமர் தகவல்

pmsrilaka.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும்.

பயங்கரவாதம் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.

50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந்திருக்கும்.

சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இன்றும், நாளையும் வவுனியாவில் நடமாடும் சேவை

வவுனியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மக்கள் நடமாடும் சேவையில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சும் பங்கு பற்றி மக்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இவ்வமைச்சினால் கையாளப்படும் விடயங்கள் சம்பந்தமாக பொது மக்களிடமி ருந்து கிடைக்கும் கோரிக்கைகள், முறைப்பாடுகள் என்பன கவனத்திற்கு எடுக்கப்பட்டு அவை சம்பந்தமாக உடனடி நிவாரணங்கள் வழங்கமுடியுமாயின் அவை வழங்கப்படும்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியின் தலைமையில் அவரது பிரத்தியேக செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் தபால் மா அதிபர் அவரது உதவியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

பரீட்சை மீள்மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை நுழைவை பாதிக்காது – பாராளுமன்றில் அமைச்சர் சுசில் தெரிவிப்பு

susil1111.jpgக.பொ.த.  உயர்தரப் பரீட்சைன் “இஸட்” புள்ளி பெறு பேறுகளின் அடிப்டையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று மீளாய்வு காரணமாக எந்த மாணவருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக எமக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த கவனயீர்ப்புக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: 2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பெறுபேறுகள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ‘இஸட்’ புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. முதலாவது மதிப்பீடு செய்வதற்கு நான்கு மாதங்களும் ஒன்பது நாட்களுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்பெறுபேறுகளில் திருப்தியடையாத மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீட்டு கோரிக்கையின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீடு காரணமாக 1.28 சதவீத பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பப் பத்திரங்களுக்குரிய விடைத்தாள்களே மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

ஆகவே சகல பெறுபேறுகளிலும் பாரிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பில்லை. முதலாவது மதிப்பீட்டு க்குட்பட்ட பெறுபேறு மீள்பரிசீலினையின்போது திருத்தப் படுமாயின் புள்ளிகளிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவர்கள் பெறுகின்ற தரங்களிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது ஏனைய மாணவர்கள் பெற்றிருக்கும் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

மக்கள் வங்கி உதவி முகாமையாளர் கொலை; 5 இராணுவத்தினர் கைது

கொள்ளுப்பிட்டி, லிபர்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளர் கொலையுடன் தொடர்புடைய இராணுவ கெப்டன் ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினரை சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன் ஒருவர், இரண்டு கோப்ரல்கள் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களே கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:-

கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வக்ஓயா, லபுகம வீதி, 6/1 இலக்க வீட்டுக்கு அருகிலுள்ள பாலம் ஒன்றின் அருகிலிருந்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டெடுத்தனர். உயிரிழந்தவர், அம்பலாங்கொடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றும் குணசிங்க பிரேமதிலக்க எனவும் அடையாளம் காணப்பட்ட போதிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டுவந்த கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினர் கெப்டன் உட்பட ஐந்து இராணுவ வீரர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ள கப்டன் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வான் ஒன்றில் நான்கு இராணுவத்தினருடன் முகாமையாளரையும் இணைத்துக் கொண்டு அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வானில் சென்று கொண்டிருந்த கெப்டன் இடைவழியில் இறங்கிக் கொள்ள ஏனைய நால்வரும் தமது காலில் போடும் மேஸ்களை பயன்படுத்தி வங்கி உதவி முகாமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வக்ஓயா பிரதேசத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக எஸ். எஸ். பி. தெரிவித்தார்.

உதவி முகாமையாளரின் கழுத்திலிருந்து தங்கச் செய்ன் மற்றும் கைச்செய்ன்களை இவர்கள் வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளனர் அதனையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்டவர் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்த அவர், விசாரணைகளை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் குறிப் பிட்டார்.

ரவி கருணாநாயக்கவின் கடவுச்சீட்டு முடக்கம் – ரூ. ஒரு இலட்சம் ரொக்கப் பிணை; ரூ 10 இலட்சம் சரீரப்பிணை

ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க, நாணயமாற்று கட்டுப்பாட்டுச் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவினதும் மேலும் இரு பிரதிவாதிகளினதும் கடவுச் சீட்டுக்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பிரதிவாதிகள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவித்தார்.

ரவி கருணாநாயக்க ஒரு முன்னணி அரசியல்வாதி என்பதால் அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டாமென அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அரச சட்டவாதி திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தவேண்டுகோளை நீதிபதி நிராகரித்ததுடன், நேற்று ரவி கருணாநாயக்க, கடவுச் சீட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவில்லையென அவரது சட்டத்தரணி தெரிவித்ததால், திங்கட்கிழமை அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பிரஜையான ராஜ் ராஜரட்ணமும் – கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருலப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இதனடிப்படையில் இவருக்கும் குறித்த நிறுவனத்தின் ஆலோசகர் லிங்கோன் பியசேனவுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2006 – 2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் கொழும்பு யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இந்தப் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஷியா கோப்ரேட் கொன்சல்டன்ட் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளரான ரஞ்சித் தி சில்வா நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றில் சமுகமளித்திருந்தார்.

இடம்பெயர்ந்த க.பொ.த மாணவருக்கு விசேட அடையாள அட்டைகள்- பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் நிவாரண கிராமங்கள் விஜயம்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் இடம் பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொடு ப்பதற்காக பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு செல்லவுள்ளனர்.

அடுத்தவாரம் செல்லும் இவர்களுடன் புகைப்படப் பிடிப்பாளர்களும் செல்லவுள்ளனர்.

வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் சுமார் 1500 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புலிகளால் பலவந்தமாக படைக்கு சேர்க்கப்பட்டு தற்போது சரணடைந்துள்ளவர்களுள் சுமார் 300 பேரும் இவ்வுயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களுக்கும் இவ்விசேட அடையாள அட் டையை பரீட்சை திணைக் களம் வழங்கவுள்ளது. எல்லா நிவாரணக் கிராமங்களிலு முள்ள மாணவர்கள் பரீட்சை க்குத் தோற்றும் விதத்தில் பரீட்சை நிலையங்கள் அமை க்கப்படவும் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க நேற்று தெரிவித்தார்.