இடம் பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.
இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும்.
பயங்கரவாதம் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.
50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந்திருக்கும்.
சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.