செய்திகள்

செய்திகள்

செய்திகள்

விபத்தில் சிக்கிய மே.ஜெனரல் ஜகத் டயஸ் தேறி வருகிறார்

jegath-dias.jpgஹவ்லொக் டவுனில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், ஜேர்மன் நாட்டுக்கான புதிய இலங் கைத் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தற்பொழுது தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப் பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்கம் தெரிவித்தார்.

இந்த வாகன விபத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டொக்டர், அவரது வலது கால் நேற்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகத் டயஸ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹவ்லொக் டவுன், பொலிஸ் மைதானத்திற்கு அருகிலு ள்ள வீதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் காருடன் வான் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்தது.

இந்த சம்பவத்தில் காரில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரலும் வானில் சென்ற மூவரும் காயமடைந்தனர். மேஜர் ஜெனரலின் வலது காலில் பலத்த காயம் ஏற் பட்டது.

இணையதளத்தை தடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனம்

இலங்கை அரசாங்கத்தை அடிக்கடி விமர்சனம் செய்யும் லங்கா நியூஸ் வெப் என்னும் இணையதளத்தை இலங்கையில் உள்ளவர்கள் அணுகுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகனான நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறித்து தாம் வெளியிட்ட ஒரு செய்திதான், தமது இணையதளம் தடுக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என்று தாம் நம்புவதாக அதன் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதி மோதலால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தை தடுத்ததற்கான காரணம் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஎல்லைக் கிராமம் என்ற வசனம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது போல ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்கிவிடுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டிலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்களும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனுபவிக்கவேண்டும். அதற்காக அரசாங்கத்தின் சகல அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் இருக்கின்றார்கள என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொனராகலை மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது:

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட நாடல்ல இலங்கை. ஒரே கொடியின் கீழ் செயற்படுகின்ற கௌரவமிக்க நாடே. எங்களுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்த்திருக்கின்ற பிரிவினருக்கு எமது மக்களின் தீர்ப்பு என்னவென்பதை நாங்கள் காண்பிக்கவேண்டும்”

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்த மொனராகலை மாவட்டம் அபிவிருத்தியில் ஓரளவுக்கு பின்னடைந்த மாவட்டமாகும் என்பதால் அந்த மாவட்டத்திலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கு வழங்கப்படவிருக்கின்றது.

அதற்காக சரியான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்து கொள்வது பிரதேச மக்களின் பொறுப்பாகும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தலே ஊவா மாகாண சபைத் தேர்தலாகும்.

உலகத்திலுள்ள சிலர் கடந்த காலங்களில் எங்களுக்கு முடிந்தளவு அழுத்தங்களை கொடுத்தனர். எமக்கு வந்த சகல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம். அவ்வாறானவர்கள்,  நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பில் மக்கள் எவ்வாறான பதிலை வழங்கப் போகிறார்கள் என்பதனையே அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பமே இந்த தேர்தலாகும்.

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

முகாம்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்துவதால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இடைத்தங்கல் முகாம் வாழ்மக்கள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்

அணிசேரா அமைய உச்சிமாநாடு இன்று எகிப்தில் ஆரம்பம்

111111.jpgஎகிப்தின் ஷார்ம் எல்சேக்கில் இன்றும் நாளையும் இடம்பெறும் அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் 118 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதுடன் இருதரப்பு சந்திப்புகளையும் அரசாங்கங்களின் தலைவர்கள் நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மன்மோகன் சிங் இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, நேபாளம், வியட்நாம் அரச தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்வாரென ஐ.எ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

அணி சேராமை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாகும். ஜவஹர்லால் நேரு உத்தியோகபூர்வமாக அறிவித்த காலம் முதல் இது அடிப்படைக் கொள்கையாக இருந்து வருகிறது. நம்பிக்கைக்கான அணிகலனாக அது எம்மிடம் உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் இரு இராணுவ அணிகளாக உலகம் நீண்ட காலத்திற்கு பிளவுபட்டு இருக்கவில்லை. உலக ஒழுங்கில் பங்களிப்பினை வழங்கக் கூடிய விதத்தில் அணிசேரா அமையம் தோற்றம் பெற்றுவருகிறது.

அணிசேரா அமையத்தின் வேறுபட்ட தன்மையும் உலகளாவிய தன்மையும் இன்றைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி இலக்கு, காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சக்திப் பாதுகாப்பு, பயங்கரவாதம், சர்வதேச ஆட்சி முறைமை, வடிவமைப்பில் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பாக அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

கெப்டன் கொலராடோ நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் விநியோகம்!

ship121212.jpgஇந்தியா விலிருந்து இலங்கைக்கு கெப்டன் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கடந்த வாரம் கெண்டுவரப்பட்ட 16.7 மில்லியன் ரூபா பெறுமதியான 650 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களில் அரிசி, மா,  பால்மா,  மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  27 கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள் இப்போது கொழும்புத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து தமிழ் மக்களால் ‘வணங்கா மண்’ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட இந்த நிவாரண உதவிகள் சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ‘கெப்டன் கொலராடோ’  கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடிக்க ஜனாதிபதிக்கு உரிமையில்லை -மனோ கணேசன்

mono.jpgதேர்தல் களைக் குறிக்கோளாகக் கொண்டு காலத்தை வீணடிப்பதற்கும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமையில்லை. இதய சுத்தியுடன் செயற்பட்டால் கட்சி பேதமற்ற வகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுத் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கத்துக்குள் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் குழப்பநிலை நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்துவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான மக்கள் ஆணையைப் பெறமுடியும் என்றும் அவர் சொன்னார். சமாதானத்தை வென்றெடுக்கும் அரசியல் தீர்வைப் பெற்றுத்தாரும் என்ற தொணிப்பொருளில் ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மனோ கணேசன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

22ம் தேதி சுனாமி வரும் – எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

tsunami111.jpgமுழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது. இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்…வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும். இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட மாகாண பொருளாதார அபிவிருத்திக்கு விசேட கடன் திட்டம்!

வடக்கின் பொருளாதாரத் துறைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘வடக்கின் எழுச்சி ’ விசேட கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். வடக்கில் விவசாயம், கால்நடை, கடற்றொழில் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளைக் கட்டியெழுப்ப வசதியாக இப்புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் துரிதமாக மேம்படுத்தவும் இது வழிவகுக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக வங்கிகளின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கித்துறையினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இலங்கை மத்திய வங்கியின்  ‘வடக்கின் எழுச்சி ’ கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். இக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தகுதியெனக் கருதும் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலகு வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கென 3.000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனளிப்பதற்காக அவற்றை மாற்ற வழிவகை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் வருடாந்த நெல் உற்பத்தியில் பத்துவீதம் வடக்கிலிருந்தே கிடைக்கின்றன. வெங்காயம்,  மிளகாய்,  பயறு,  நிலக் கடலை உட்பட பல்வேறு பயிர்ச் செய்கைகளிலும் வட மாகாணம் சிறந்து விளங்குகிறது.

நாட்டில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 வீதமானோர் வடக்கைச் சார்ந்தவர்கள். அங்கு 219 மீனவர் கிராமங்கள் உள்ளதுடன் 1.29.000 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியூடன் சந்திப்பு!

donald_perera.jpgதமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு ஜனாதிபதி நினைவுக் கேடயம் ஒன்றைப் பரிசளித்தார்.